தோழர்களே!
இன்றையக் கூட்டம் எதிர்பாராத வெற்றியுடன் முடிவடைந்திருக்கிறது. இக்கூட்டத்திற்கு இவ்வளவு பேர்கள் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
இக்கூட்டத்திற்கு வந்தவர்கள் எங்களுக்காகவோ, எங்கள் தாட்சண்ணியத்துக் காகவோ வந்தவர்கள் என்று நான் நினைக்கவில்லை. பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் சோர்வு நிலையை உணர்ந்து, நம்மைப் போலவே சரிபங்கு கவலை கொண்டு இந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் தங்களால் ஆனதைச் செய்ய வேண்டும் என்கின்ற உணர்ச்சியின் மீதே வந்திருக்கிறார்கள்.
இன்றைய கூட்ட நடவடிக்கையிலும், தீர்மானங்களிலும் எவ்வித கீச்சு மூச்சு சப்தம் கூட இல்லாமல் ஒரே அபிப்பிராயமாக சகல காரியமும் நடந்ததற்குக் காரணம், எங்கள் நடவடிக்கையும், தீர்மானங்களும் சிறிது கூட ஆட்சேபணைக்கு இடமில்லாமல் இருந்ததாலேயே என்று நான் நினைக்கவில்லை. இன்றைய நம் இயக்கத்தின் நிலைமை யானது சண்டைபோட யாருக்கும் ஆசை அளிக்கவில்லை. ஏனென்றால், இயக்கத்துக்கு செல்வாக்கு தளர்ந்திருக்கிறது, ஆதலால், எவ்வித அபிப்பிராய பேதத்தையும் காட்டாது எல்லோரும் ஒத்துழைத்து பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்கின்ற கவலையும், பொறுப்பும், பெருந்தன்மையும் கொண்ட உணர்ச்சியேயாகும்.
மற்றும், இக்கூட்டம் எனக்கு மற்றொரு தைரியத்தையும் கொடுத்தது. அதாவது, சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பதால் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் வேலை செய்த தோழர்கள் மனம் வேறுபட்டு விட்டார்கள் என்றும், அதனால் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு விட்டதென்றும், இயக்கத் தோழர்களை லட்சியம் செய்யாமல் நான் என்னிஷ்டப்படி ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பதால் தோழர்களுக்கு என்னிடம் வெறுப்பு ஏற்பட்டு விட்டதென்றும், இதனால் சுயமரியாதை இயக்கம் ஆடிப்போய் விட்டதென்றும் சிலர் பேசிக்கொண்டதும். எதிரிகளின் பத்திரிகைகள் இதை ஆயுதமாகக் கொண்டு விஷமப் பிரசாரம் செய்ததும் என் தகவலுக்கு வந்தது. அதைப்பற்றி நான் சிறிது யோசனை செய்ததும் உண்டு.
அதாவது நான் ஏதாவது தப்பான வழியில் செல்கிறேனோ என்று தயங்கினேன். இன்றைய கூட்டத்தையும், இங்குள்ளவர்களது ஒரு மனப்பட்ட அபிப்பிராயத்தையும், அவர்களது பொறுப்பையும், கவலையையும் பார்க்கும் போது நாம் செய்தது சரி யென்றும், தொடர்ந்து ஊக்கத்துடனும், உறுதியுடனும் வேலை செய்ய வேண்டும் என்றும் எனக்குப் படுகிறது.
நான் ஏதாவது தப்பான வழியில் செல்கிறேனோ என்று தயங்கினேன்.
இன்றைய கூட்டத்தையும், இங்குள்ளவர்களது ஒரு மனப்பட்ட அபிப்பிராயத்தையும், அவர்களது பொறுப்பையும், கவலையையும் பார்க்கும் போது நாம்
செய்தது சரி யென்றும், தொடர்ந்து ஊக்கத்துடனும்,
உறுதியுடனும் வேலை செய்ய வேண்டும் என்றும் எனக்குப்படுகிறது.
ஏனெனில், இன்றைய கூட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான தோழர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்கள். வந்திருக்கிறவர்கள் எல்லாம் எங்கள் அறிக்கையை ஆதரிக்கிறார்கள் என்றே ஏற்படுகிறது. ஆகையால், இனி நம் எதிரிகள் சுய மரியாதைக் காரர்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்று விஷமப்பிரசாரம் செய்ய முடியாது.
கமிட்டியில் முக்கியமாக பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரமுகர்களையே நாம் தெரிந்தெடுத்திருக்கி றோம். அவர்கள் ஒத்துழைப்பு கிடைக்குமென்றே நம்புகிறோம். கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் நமக்கு இருக்கிற பொறுப்பை நாம் எந்தக் காரணம் கொண்டும் விட்டுவிட முடியாது.
ஒரு வாரத்துக்குள்ளாகவே நானும், தோழர்கள் பாண்டியனும், சி.டி.நாயகமும், வி.வி. ராமசாமியும் சுற்றுப் பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். ஆங்காங்குள்ளவர்கள் கூடிய ஆதரவு காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
பத்திரிகை
நமக்கு தமிழ் ஒரு தினசரி அவசியம். ஒரு வருஷத்துக்காவது நடத்தி ஆக வேண்டும். சர்க்காருக்கு மறுபடியும் எழுதினேன். கோயமுத்தூர் கலெக்டர் இப்போது கடைசியாக 2000 ரூபாய் ஜாமீன் கேட்டிருக்கிறார். முன்னாலும் “குடிஅரசு”க்கு ஜாமீன் கட்டி இருக்கிறேன். கூடியவரை பார்த்து விட்டுக் கட்டியாவது நடத்த வேண்டி இருக்கிறது.
40, 50 ஊர்களுக்கு 100, 100 பத்திரிகை வீதம் 4, 5 ஆயிரம் பத்திரிகை அனுப்ப வசதி இருக்கிறது. ஆனால், பார்சல் செலவை ஏற்றுக் கொள்ள ஒவ்வொரு ஊரிலும் ஆட்கள் வேண்டும். வருஷத்துக்கு ஒரு ஊருக்கு 75 ரூபாய்க்கு மேலாகாது, இதற்கு ஆள் கிடைத் தால் மற்ற செலவுகள், வேறு வழிகளில் சரிப்படுத்திக் கொள்ளலாம். ஆகையால் பத்திரிகை விஷயம் எனக்கு ஞாபகத்தில் இல்லை என்றோ நான் முயற்சிக்காமலிருக் கிறேன் என்றோ யாரும் கருதக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
பட்டுக்கோட்டையில் அடுத்த மாதம் தொண்டர்கள் மகாநாடு நடக்கப்போகிறது. தொண்டர்கள் யாவரும் அவசியம் அங்குவரவேண்டும். மற்ற வேலைகளை அங்கு ஏற்பாடு செய்யலாம் என்று கருதுகிறேன்.
கடைசியாக, நீங்கள் இன்று இத்தனை பேர்கள் வந்து ஒரு நல்ல முடிவுக்கு வர உதவியளித்ததற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
(05-03-1936ந் தேதி திருச்சியில் பாண்டியன் – ராமசாமி அறிக்கைக் கூட்ட முடிவில் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் பேசியது.)
குடிஅரசு – சொற்பொழிவு – 10.05.1936