சென்னை, ஆக.14- பாலிடெக்னிக் மாணவர்களின் தொழில் கல்வி திறனை மேம்படுத்த, செயற்கை நுண்ணறிவு கருவி (ஏ.அய். டூல்) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, டிப்ளமா படிப்பு மீதான ஆர்வம், மாணவர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கை குறைவதை தடுக்க, டிப்ளமா படிப்பில் புதிய திட்டங்களை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிமுகம் செய்து வருகிறது.
தற்போது, ஏ.அய்., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, உலகம் முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளிலும், ஏ.அய்., பங்களிப்பு வளர்ச்சி கண்டுள்ளது.
இந்நிலையில், ஏ.அய்., தொழில்நுட்ப வசதிகளை, டிப்ளமா படிப்பில் அறிமுகம் செய்ய, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், ஏ.அய்., தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, தொழிற்கல்வி குறித்து அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் சார்பில், கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாதம் 1,950 ரூபாய் மதிப்பிலான, ஜெமினி ஏ.அய்., சேவையை, பாலிடெக்னிக் மாண வர்கள் ஓராண்டுக்கு இலவசமாக பயன்படுத்தலாம்.
மாணவர்கள் அனைவரும், அடுத்த மாதம், 15ஆம் தேதிக்குள், இலவச ஜெமினி ஏ.அய்., டூல் சேவையை பெற, பதிவு செய்ய வேண்டும் என, கல்லுாரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.