அரசியல் கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா குழுவிடம் நிபுணர்கள் யோசனை

2 Min Read

புதுடில்லி, ஆக.14- அரசியல் கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், அரசியல் கட்சிகளின் பிரச்சாரத் துக்கு அரசு மைதானத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாக் களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற குழுவிடம் நிபுணர்கள் யோசனை தெரிவித்தனர்.

கூட்டுக்குழு

தேர்தல் செலவை குறைக்கும் நோக்கத்திலும், நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்து வதற்கான ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது.

அந்த மசோதாவை ஆய்வு செய்ய பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.சவுத்ரி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.

அக்குழு முன்பு பா.ஜனதா மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினய் சஹஸ்ரபுத்தே, கோபால் ரெட்டி, சுஷ்மா யாதவ், ஷீலா ராய், நானி கோபால் மகந்தா உள்ளிட்ட நிபுணர்கள் ஆஜரானார்கள். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான யோசனைகள் என்ற பட்டியலை சமர்ப்பித்தனர்

பெண்களுக்கு இடஒதுக்கீடு

நிபுணர்கள் தெரிவித்த யோசனைகள் வருமாறு:-

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை வரவேற்கிறோம். அனைத்து சீர்திருத்தங்களுக்கும் அது தாய் என்று நிரூபணமாகும்.

அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்குமாறு ஊக்குவிக்க வேண்டும்.

அப்படி அளிப்பது நாடாளு மன்ற, சட்டமன்றங்களில் இட ஒதுக்கீட்டின் முழுபலனை அனுபவிக்க பெண்களை தயார் படுத்துவது போன்று இருக்கும்.

அதுபோல், கூட்டுறவு சங்கங்கள், வீட்டுவசதி அமைப்புகள், பல்கலைக்கழக செனட், நிர்வாக கவுன்சில்கள் போன்ற அனைத்து துறைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதை மாநில அரசுகள் கட்டாயமாக்குவது பற்றி ஆராய வேண்டும்.

தனியார் தொலைக்காட்சி பிரச்சார உரை

அரசியல் கட்சிகளில் உட் கட்சி ஜனநாயகம் செயல்படும் விதத்தை மேற்பார்வையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடுவதை கட்டாய மாக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, நடவடிக்கை அறிக்கை வெளியிடுவதையும் கட்டாயமாக்க வேண்டும். இது, வேட்பாளர்களுக்கும் பொருந்தும்.

தேர்தல் பிரச்சார செலவுகளை குறைக்கும் வகையில், தூர்தர்ஷன் மற்றும் தனியார் தொலைக் காட்சிகளில் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சார உரைகளை ஒளிபரப்புவதை கட்டாயமாக்க வேண்டும். மேலும், அரசு மைதானங்களை பிரச்சாரத்துக்கு பயன்படுத்த அரசியல் கட்சிகளுக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பதவிக்காலம் நீட்டிப்பு

இதற்கிடையே, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவையும், யூனியன் பிரதேச சட்டமன்றங்களுக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடத்துவதற்கான மசோ தாவையும் ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களவையில், இதற்கான தீர்மானத்தை குழுவின் தலைவர் பி.பி.சவுத்ரி தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடைசி வாரத்தின் முதல்நாள் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *