இது விவசாயிகளின் அரசு தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 46.5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் அமைச்சர் அர. சக்கரபாணி தகவல்

4 Min Read

சென்னை,  ஆக.14 உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது;-

“தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழக அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பான முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக நெல் விவசாயிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர். இந்த அரசு பொறுப்பேற்ற ஆண்டில் 2021-2022 நெல் கொள்முதல் பருவத்தில் 43.27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2024-2025 நெல் கொள்முதல் பருவத்தில் தமிழ்நாட்டின் வரலாற்றில் நம் முதல்-அமைச்சரின் பொற்கால ஆட்சியில் என்றுமில்லாத அளவிற்கு இன்று (13.08.2025) வரை 46.5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.70/- ஆகவும் பொதுரகத்திற்கு ரூ.50/- ஆகவும், வழங்கப்பட்டு வந்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் பத்தாண்டுகளில் நெல் கொள்முதலுக்கான மாநில அரசின் ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படவே இல்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-2022 சந்தைப் பருவத்திற்கு சன்னரகம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.100/- ஆகவும் பொதுரகத்திற்கு ரூ.75/- ஆகவும் உயர்த்தி வழங்க ஆணையிட்டார்கள். மாநில அரசின் ஊக்கத்தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.130/- ஆகவும் பொதுரகத்திற்கு ரூ.105/- ஆகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற போது சன்னரகம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.1958/- ஆகவும் பொதுரகம் ரூ.1918/- ஆகவும் இருந்தது.

வருகின்ற 2025-2026 பருவத்திற்கு முதலமைச்சர் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றிற்குச் சன்னரகத்திற்கு ரூ.156/- ஆகவும், பொதுரகத்திற்கும் ரூ.131/- ஆகவும் உயர்த்தி அறிவித்துள்ளார். தற்போது 2025-26 பருவத்திற்கு சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2545/- ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2500/- ஆகவும் வழங்கப்படும்.

ஊக்கத் தொகை

நம் முதலமைச்சரின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.83 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 40,440.21 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகையாக மட்டும் ரூ.1,816.46 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி நெல்கொள்முதல் பருவம் அக்டோபர் முதல் நாள்தான் தொடங்கும். செப்டம்பரில் அறுவடையாகும் நெல்லை மழைக் காலத்தில் அக்டோபர் மாதத்தில் வாங்கும் நிலை தான் இருந்தது. இதை மாற்றி செப்டம்பர் மாதமே அக்டோபரில் தொடங்கும் பருவ விலையில் நெல் கொள்முதல் செய்திட நம்முடைய முதலமைச்சர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி, அனுமதி பெற்று 2022-2023 ஆண்டு முதல் செப்டம்பரிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் செப்டம்பர் முதல் நாளிலிருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.

“ஒரு நெல் மணி கூட வீணாகக் கூடாது” என்று முதலமைச்சர் அறிவுறுத்தியதால் திறந்த வெளியில் வைக்காமல் மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்புத் தளங்களில் நெல் சேமிக்கப்படுகிறது. 333 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 4 லட்சத்து 3 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 26 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

25 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 நெல் சேமிப்பு வளாகங்கள் கட்ட நடவடிக்கையில் உள்ளது. 2025 – 2026 ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் 2 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 20 நவீன சேமிப்பு வளாகங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 49 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 6 நவீன சேமிப்பு வளாகங்கள் என ஆக மொத்தம் 3 லட்சத்து 12 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 26 நவீன சேமிப்பு வளாகங்கள் 469 கோடியே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.  ஆக மொத்தம் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி ரூபாய் 827 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் 7 லட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 57 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டுவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் வருங்காலங்களில் திறந்த வெளியில் நெல்லைச் சேமிக்க வேண்டிய தேவை எழாது. இந்த ஆண்டு நெல்வரத்து அதிகமாக வரலாறு காணாத வகையிலிருந்தாலும் எதிர்பாராது அடிக்கடி மழை பெய்தபோதும் நெல்மணிகள் மழையில் நனையாமல் காப்பாற்றப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல்வரத்து அதிகமாக இருந்ததால் சில இடங்களில் தேக்கம் ஏற்பட்டாலும் நெல்லை உடனுக்குடன் அரிசி அரவை ஆலைக்கு அனுப்பப்பட்டு என்றுமில்லாத அளவிற்கு விரைந்து நெல் அரைக்கப்பட்டு வருகிறது. நெல் விவசாயிகளுக்கு நம் முதலமைச்சர் தலைமையிலான அரசு என்றும் பாதுகாவலாக இருக்கும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *