லக்னோ, ஆக.14 உத்தரப் பிரதேச மாநிலம் பாலராம்பூரில் 22 வயது மதிக்கத்தக்க பேச்சு மற்றும் கேட்கும் திறனற்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரை கொடூரமாகக் கொல்ல நடந்த முயற்சி காணொலியில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது
மருத்துவப் பரிசோதனையில் உறுதி!
ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு, 9 மணிஅளவில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பாட்டி வீட்டில் இருந்து வீட்டிற்குத் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த சிலர் கடத்திச் சென்றுள்ளனர். அவரால் யாரையும் உதவிக்கு அழைக்கவோ, அவர்களை எதிர்த்துப் பேசவோ முடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்குத் திரும்பாததால், அவரது குடும்பத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அருகில் உள்ள ஒரு வயல்வெளியில் மயங்கிய நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக, மாவட்ட அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக் கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பாலராம்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. கண்காணிப்புப் படக் கருவியின் காட்சிகளை ஆராய்ந்தபோது, அந்தப் பெண் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களால் துரத்தப்பட்டதும், பிறகு கடத்தப்பட்டதும் தெரியவந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் கண்ட காவல்துறையினர், விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.
குற்றத்தை ஒப்புக் கொண்டனர்
சம்பவத்தில் ஈடுபட்ட அன்குர் வர்மா (21) மற்றும் ஹர்ஷித் பாண்டே (22) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். குற்றவாளிகள் நேபாளத்திற்கு தப்பிச் செல்ல முயற்சி செய்தபோது, காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்வு நடந்த இடம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இல்லத்திற்கு முன்பாக நடந்துள்ளது.
அந்த இடம் பாதுகாப்பான இடம் என்பதால் அப்பெண் இரவு 9 மணி அளவில் தனது வீட்டிற்கு திருபியுள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை இயக்குநர் இருவரது வீட்டிலும் 24 மணி நேரம் பாதுகாப்பு இருக்கும் அப்பகுதியில் கண்காணிப்புக் காணொளி 24 மணி நேரமும் இயங்கிகொண்டு இருக்கும்.
இந்தியா சுதந்திரமடைந்து 79ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. சாமியார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இந்த நிலையில் உள்ளது. இந்த கொடூரம் தொடர்பாக சதீஸ் என்ற பிரபல கார்டுனிஸ்ட் கருத்துச்சித்திரம் ஒன்றை வரைந்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண் தேசியகொடியை ஏந்திக்கொண்டு ஓடுவது போலவும், சாமியார் ஆட்சியில் அச்சமின்றித் திரியும் சமுக்கவிரோதிகள் அவரை பின் தொடர்ந்து செல்வது போன்றும் வரைந்துள்ளார்.