திருச்சூர் ஆக 14 கேரள மாநிலம் பூங்குன்னம் பகுதியில் வசிக்கும் பிரசன்னா என்ற பெண், தனது வீட்டு முகவரியைப் பயன்படுத்தி 9 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகப் புகார் அளித்துள்ளார்.
வாக்குப் பதிவில் முறைகேடு
கடந்த நாடாளுமன்ற தேர் தலில் கருநாடக மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்குப் பதிவில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் ஒரே முகவரியில் பலரது பெயர் இடம் பெற்று இருந்தது உள்பட பல்வேறு குளறுபடிகளையும் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவ ருமான ராகுல் காந்தி பரபரப்பு புகாராக தெரிவித்தார்.
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலிலும் வாக்குப்பதிவில் முரண்பாடுகள் இருந்ததாக நவீன்பட்நாயக் தலைமையில் செயல்படும் பிஜு ஜனதாதளம் கட்சியும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கேரள மாநிலத்திலும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்து உள்ளது. இதுகுறித்து பூங்குன்னம் கேப்பிடல் அபார்ட் மெண்ட், பிளாட் எண் 4C என்ற முகவரியில் தனியாக வசித்து வரும் பிரசன்னா என்ற பெண் கூறியதாவது:
“நான் எனது குடும்பத்தினருடன் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறேன். என் அனுமதியின்றி என் முகவரியில் 9 போலி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தமாக என் பெயருடன் சேர்த்து 10 வாக்காளர்கள் உள்ளனர். நான்கு பெரியவர்கள், 2 குழந்தைகள் உள்ளனர். எஞ்சிய முதியவர்கள் சொந்த கிராமமான பூச்சினிபாடம் என்ற ஊரில் வசித்து வருகின்றனர். அங்கு தான் அவர்களுக்கு வாக்குகள் உள்ளன. சமீபத்தில், வாக்காளர் சரிபார்ப்புக்காக வந்த தேர்தல் ஊழியர்கள், இதே முகவரியில் வேறு 9 பேர் வசிப்பதாகக் கூறி, அவர்களின் விவரங்களைக் கேட்டுள்ளனர். அப்போதுதான் பிரசன்னாவுக்கு இந்த முறைகேடு தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்.