பீஜிங், ஆக.13- சீனாவில் நடைபெற்ற ‘2025 உலக ரோபோ மாநாட்டில்’ (2025 World Robot Conference), மனித இயந்திரங்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வளையத்தைச் சுற்றி நின்று சண்டையை ரசித்தனர்.
இது, பத்தாவது முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 200 நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள், ரோபோக்கள் நடனமாடுவது மற்றும் கால்பந்து விளையாடுவது போன்ற பல்வேறு திறமைகளைக் கண்டு ரசித்தனர்.அத்துடன், முதியவர்களுக்கு உதவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு ரோபோக்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
சீனாவின் ரோபோடிக்ஸ் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு, இந்தத் துறையின் மதிப்பு சுமார் 47 பில்லியன் டாலர் (சுமார் 60.3 பில்லியன் வெள்ளி) என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இந்தத் துறை மேலும் பல புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.