வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் உள்நாட்டில் கொடுக்கப்படும் பாஸ்போர்ட்டும் (கடவுச்சீட்டு), அந்தந்த நாடுகளில் வழங்கப்படும் விசாவும் அவசியம். ஆனால், குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை சில நாடுகள் விசா இல்லாமலேயே தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கிறது. அத்தகைய சலுகைகளைப் பெறும் நாடுகளின் பாஸ்போர்ட்கள் வலிமையானதாகக் கருதப்படுகின்றன. அதன்படி உலகின் சக்திமிக்க பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது சிங்கப்பூர். இந்நாட்டு மக்கள் விசா பெறாமலேயே 193 நாடுகளுக்குச் செல்ல முடியும். இரண்டாமிடத்தில் உள்ள ஜப்பான், தென்கொரிய மக்கள் இவ்விதம் 190 நாடுகளுக்குப் பயணிக்கலாம். 189 நாடுகளுக்கு விசா பெறாமல் பயணிக்கும் வசதியுடன் ஜெர்மனி, பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி, பின்லாந்து, டென்மார்க், அயர்லாந்து ஆகிய நாடுகள் 3-ஆவது இடத்திலும் உள்ளன. வல்லரசு நாடுகளான அமெரிக்கா இதில் 10-ஆவது இடத்திலும், சீனா 60-ஆவது இடத்திலும் உள்ளன. இப்பட்டியலில் கடந்த ஆண்டு 85-ஆவது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 77-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியர்கள் விசா இல்லாமல் 50 நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியும். இதில் மலேசியா, மாலத்தீவு, இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகளும் அடங்கும்.