சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்தில் பல பிரபல தோழர்கள் இவ்வியக்கத்தின் கொள்கைகளையாவது ஒப்புக்கொள்ளலாம் என்றாலும், அவ்வியக்கத்தின் பெயரை ஒப்புக் கொள்ள முடியாதென்றும், ஏனென்றால், சுயமரியாதை இயக்கம் என்று சொல்லும்போதே நமக்கு சுயமரியாதை இல்லையென்று ஒப்புக் கொண்டதாக ஆகிறதென்றும், ஆதலால் அந்தப் பெயரை எடுத்துவிட்டு வேறு பெயர் வைக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். பல சமாதானம் சொன்ன பிறகு ஒப்புக்கொண்டார்கள்.
இப்போது அந்தப்படி சொன்ன தோழர்களையே உங்களுக்குச் சுயமரியாதை இருக்கிறதா? என்று கேட்க வேண்டியதாய் விட்டது.
உதாரணமாக, பல பெரிய இலாகா தலைமை ஸ்தானங்களுக்குப் பார்ப்பனர் அல்லாதார்களே தலைவர்களாயிருந்தும், அவர்கள் கீழுள்ள பார்ப்பனர்கள் எழுதி வைத்ததில் கையெழுத்துப்போட வேண்டியதைத்தவிர, வேறு ஒரு காரியமும் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகிறார்கள்.
பார்ப்பனரல்லாத இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் இல்லாமல் இருந்தால் போலீஸ் இலாகாவில் இன்று பார்ப்பனரல்லாதார் நிலை எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு பேராவது அந்த இலாகாவில் இருந்திருக்க முடியுமா? என்பவைகளைக் கவனித்துப் பார்த்தால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, தங்களுக்கு சுயமரியாதை இருக்கிறதா என்பது விளங்கும்.
சென்னை மாகாணத்தில் ஏறக்குறைய 8 வருஷ காலமாக பார்ப்பனரல்லாதவர்கள் தான் போலீஸ் இலாகாவின் தலைவர்களாக இருந்து வருகிறார்கள் என்றாலும், போலீஸ் அதிகாரம் பார்ப்பனர்களின் ஏகபோக பிதுரார்ஜிதச் சொத்தாக இருந்து வருகிறது. பார்ப்பனரல்லாத போலீசு சூப்பிரண்டுகளும், சர்க்கிள்களும், சப் இன்ஸ்பெக்டர்களும் நாள்களை எண்ணுவதிலும், சம்பளம் வாங்குவதிலும் கவலையாய் இருக்கிறார்களே ஒழிய, பார்ப்பனரல்லாதார் உலகம் எப்படி இருக்கிறது என்று கூட திரும்பிப் பார்ப்பதில்லை.
ஆனால், அவ்வுத்தியோகங்களில் உள்ள பார்ப்பனர்களோ, பெரும்பாலும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு உழைப்பதும், காங்கிரசை காப்பாற்றுவதுமான வேலையில் தீவிரமாய் இருக்கிறார்கள்.
இதன் காரணம் பார்ப்பனரல்லாதார்களுக்குச் சுயமரியாதை இல்லாதது என்பதல்லாமல் வேறு என்ன சொல்வது என்பது நமக்கு விளங்கவில்லை.
பார்ப்பனரல்லாத இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் இல்லாமல் இருந்தால் போலீஸ் இலாகாவில் இன்று பார்ப்பனரல்லாதார் நிலை எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு பேராவது அந்த இலாகாவில் இருந்திருக்க முடியுமா? என்பவைகளைக் கவனித்துப் பார்த்தால் உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு, தங்களுக்கு சுயமரியாதை இருக்கிறதா என்பது விளங்கும்.
மற்றும் சுயமரியாதைக் கூட்டங்களிலும், ஜஸ்டிஸ் கட்சி கூட்டங்களிலும் காங்கிரஸ்காரர்களும், கூலிகளும் வந்து கலகம் செய்வதும், காங்கிரஸ் கூட்டங்களில் காலிகள் சுயமரியாதை இயக்கத் தலைவர்களையும், ஐஸ்டிஸ் கட்சித் தலைவர்களையும் ஈனத்தன மாகவும், இழிதன்மையாகவும் பொய்யும் பழியும் கூறிப் பேசுவதும், கேள்விகள் கேட்டால் பலாத்காரத்தை உபயோகிப்பதும் இவை களுக்குப் பெரும்பாலும் பார்ப்பனப் போலீஸ் நடத்தையே காரணமாய் இருப்பதும், இதைப்பற்றி அரசாங்கம் கவனிக்க வேண்டுமென்று பல தடவைக் கூப்பாடு போட்டும் கவனிக்காமல் இருப்பதும் ஆகிய காரியங்கள் பார்ப்பனரல்லாதார்க்குச் சுயமரியாதை இல்லை என்பதை ருஜுப்பிக்கிறதா? இல்லையா? என்று கேட்கிறோம்.
ஏனெனில், சென்றவாரம் சேலத்தில் காங்கிரசின் பேரால் சில காலிகள் செய்த அட்டூழியங்களுக்கு சேலம் போலீசார் இடம் கொடுத்தவர்களாவார்கள் என்பதற்கு என்ன சந்தேகம் என்பது கேட்கவேண்டியிருக்கிறது.
சேலத்தில், போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பார்ப்பனர். சப்இன்ஸ்பெக்டர் பார்ப்பனர். சி.அய்.டி. இன்ஸ்பெக்டர் மாத்திரம் பார்ப்பனரல்லாதார். நடவடிக்கை நடந்த இடத்துக்குப் பக்கத்திலேயே போலிஸ் ஸ்டேஷன் இருந்திருந்தும், கொலைகள் நடக்கும்படியான கலவரம் காங்கிரஸ் கூட்டத்தில் நடப்பதென்றால், இதற்கு யார் காரணமாய் இருக்க வேண்டும்? என்று கேட்கின்றோம். சி.அய்.டி. இன்ஸ்பெக்டர் பார்ப்பனரல்லாதாராய் இருந்ததால் தானும் காங்கிரஸ் காலிகளிடம் அடிபட்டுக்கொண்டாவது சுயமரியாதைக் காரர்களையும், ஜஸ்டிஸ்காரர்களையும் அதிகமாக அடிபடாமலும், கொலை நடக்காமலும் காப்பாற்றி இருக்கிறார். இதைப் பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே பார்க்கலாம்.
ராசிபுரத்திலேயும் அதற்கு முந்திய வாரங்களில் பார்ப்பனப் போலீசாரால் தொல்லை விளைந்திருக்கிறது.
இவைகளையெல்லாம் கவனிக்க முடியாத மந்திரிகளும், போலீஸ் மெம்பர்களும் ஜஸ்டிஸ்கட்சியின் பெயராலேயே உத்தியோகம் பார்த்துக்கொண்டு மாதம் 4 ஆயிரம்,
5 ஆயிரம் பணம் பெறுகிறவர்கள் என்றால் இந்த சமுகத்துக்குச் சுயமரியாதை இல்லை என்பதிலும், சுயமரியாதைக்காகவே இன்னமும் பல வருஷங்களுக்கு இவ்வியக்கம் பாடுபடவேண்டியிருக்கிறது. என்பதிலும் என்ன ஆட்சேபம் இருக்கிறது என்று கேட்கின்றோம்.
சேலம் நடவடிக்கைக்குச் சேலம் ஜில்லா அதிகாரியான கலெக்டராவது கவனிப்பார் என்றாலோ, அவரும் ‘புளிப்புக்கு அவளப்பனே’ என்கின்ற மாதிரி பார்ப்பனர் கலெக்டராவார். இந்தக் காரணங்களாலேயே சேலம் ஜில்லாவில் உள்ள சில்லறைப் பார்ப்பன அதிகாரிகளுக்கும், சிறப்பாகப் போலீஸ் அதிகாரிகளுக்கும் தைரியம் அதிகமாகி கலகங்கள் நடத்தப்பட ஆக்கம் அதிகரித்து வருகிறது.
கடைசி முறையாக நாம் இதைச் சர்க்காருக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதாவது, பொதுக்கூட்ட விஷயங்களில் ஏதாவது ஒரு நியதி ஏற்படுத்தி, காலித்தனம் நிகழாமல் இருக்கும்படி செய்ய சர்க்கார் முன்வராத பட்சம், கண்டிப்பாய்ப் பொதுக்கூட்டங்களில் இனிக்கொலைகள் நடக்கும்படியான நிலைமை ஏற்படக்கூடும் என்பதையும், அப்படி ஏற்பட்டால் அதற்குச் சர்க்கார் தான் பொறுப்பாளியாவார்கள் என்பதையும் வினயமாய் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
கூட்டங்களானது கொள்கையைப் பொருத்தில்லாமல், வெறும் வகுப்பு உணர்ச்சியைக் கொண்டே பார்ப்பனர்கள் நடத்தி வருவதால், அதற்குப் பார்ப்பன அதிகாரிகளின் நீதி நிர்வாகத் தன்மை உள் உளவாய் இருப்பதால் நாம் இம்மாதிரி தெரிவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இதை அரசாங்கத்தார் கவனித்து தக்கது செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் தோழர் சத்தியமூர்த்தியவர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவதாய் ஒப்புக் கொண்டு, கேள்வி கேட்டவர்களை மேடைக்கு வரும்படி அழைத்து அடிக்கச் செய்திருப்பதும், போலீஸ்காரர்கள் அக்கூட்டத்தில் ஒருவர் கூட இல்லாதிருந்ததும், மற்றும் நமக்குக் கிடைத்திருக்கும் சில தகவல்களும் கொண்டே நாம் இதை கவனிக்கும்படி அரசாங்கத்தாருக்கு எழுத நேர்ந்ததே ஒழிய, மற்றபடி வகுப்புத் துவேஷம் கொண்டல்ல – கோழைத்தனம் கொண்டல்ல என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
மற்றும் ராசிபுரம் நடவடிக்கையைப் பற்றி 05-03-1936ந் தேதி குடியரசில் விளக்கிவிட்டு, ஸ்தல அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தோம். அப்படி இருந்தும் மேலும் அதே மாதிரி பல இடங்களில் நடப்பதாலும், மற்றொரு கட்சியாரும் இம்மாதிரி ஆகிவிட்டால் என்ன? ஆகும் என்கின்ற பயத்தாலும் எழுத நேரிட்டது. ஆகையால் அரசாங்கத்தார் இதையாவது கவனிப்பார்கள் என்று நம்புகிறோம்.
குடிஅரசு – கட்டுரை – 31.05.1936