புதுடில்லி, ஆக.12- மக்களவையில், திருத்தப்பட்ட வருமானவரி மசோதா, வரிவிதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன.
தாக்கல்
தற்போது நடைமுறையில் உள்ள வருமானவரி சட்டம், 1961-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. வரி செலுத்துவோருக்கு எளிதாக புரியும்வகையில், வார்த்தைகளை எளிமைப்படுத்தி, தேவையற்ற வார்த்தை களை நீக்கி, புதிய வருமான வரி மசோதா, 2025 கொண்டுவரப்பட்டது. அந்த மசோதாவை கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
திரும்பப் பெறல்
மசோதாவை ஆய்வு செய்வதற்காக பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் பைஜெயந்த் பாண்டா தலைமையில் 31 உறுப்பினர்களை கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, மசோதாவில் ஏராளமான திருத்தங்களை செய்யுமாறு பரிந்துரைத்தது. கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட புதியவருமான வரி மசோதாவை திரும்பப் பெறுமாறும் பரிந்துரைத்தது.
இதற்கிடையே, சமீபத்தில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய வருமான வரி மசோதாவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் கடந்த வாரம் அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது.
திருத்தப்பட்ட மசோதா
அதற்கு பதிலாக, தேர்வுக் குழு பரிந் துரைத்த திருத்தங்கள் சேர்க்கப்பட்ட புதிய வருமானவரி மசோதா (எண் 2) உருவாக்கப்பட்டது.
திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை (எண் 2) ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (11.8.2025) மக்களவையில் தாக்கல் செய்தார். வருமானவரி தொடர்பான சட்டத்தை ஒன்றிணைத்தும் திருத்தியும் மசோதா உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மசோதாவின் நோக்கம் குறித்த அறிக்கையில், தேர்வுக் குழு பரிந்து ரைத்த ஏறத்தாழ அனைத்து திருத்தங்களும் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த மாற்றங்கள் தொடர்பான அனைத்து தரப்பினரின் யோசனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.
மசோதா நிறைவேற்றம்
பின்னர், விவாதம் எதுவும் இன்றி, திருத்தப்பட்ட வருமானவரி மசோதா (எண் 2) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும்என்ற எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே அம்மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், வருமானவரி சட் டம்-1961, நிதி சட்டம்-2025 ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கான வரிவிதிப்பு சட்டங்கள் திருத்த மசோதாவையும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்களுக்கு வரி விலக்கு அளிக்க அம்மசோதா வகை செய்கிறது. அந்த மசோதாவும் அமளிக் கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
2 மசோதாக்களும் நிறைவேற்றப் பட்டவுடன், மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.