போலி சாமியோ காலி சாமியோ?
உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார் போக்சோவில் கைதானான். அம்மாநிலத்தில் ‘ஆப்ரேஷன் கலாநெமி என்ற பெயரில் போலி சாதுக்கள், துறவிகள் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையில் சிக்கியவன் தான் தீபக் குமார் சைனி. சிவன் வேடத்தில் திரியும் இவன், ஆசி பெற வந்த சிறுமியிடம், வேண்டுதலை நிறைவேற்றுவதாக கூறி அத்துமீறியுள்ளான். இவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாம்.
எப்படிப்பட்ட கபட வேடதாரிகள்!
கோயிலுக்கு செல்ல மாட்டேன் என்ற சிறுவனை சூலாயுதத்துடன் சிவனே நேரில் வந்து அழைத்ததை பார்த்ததுண்டா..! மேலே நீங்கள் பார்க்கும் காட்சி கனவு அல்ல – வட இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம். ஏன் என்னை பார்க்க வரல என சிவன் வேடமணிந்த நபர் கோபமாக கேட்க, அழுதபடி நாளை முதல் வருகிறேன், பிரசாதமும் தருகிறேன் என சிறுவன் உறுதியளிக்கிறான். டிரெண்டாகும் இந்த காணொலிக்கு பலர் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
கோயிலுக்கு சென்றால் ‘கோவிந்தா’தான்!
மகாராஷ்டிரா மாநிலம் ஹெத் மலைப்பகுதியில் கேஷ்திர மகாதேவ் குண்டேஷ்வர் என்ற சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு 40 பக்தர்களுடன் சென்ற மினி சரக்கு லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பெண்கள் உயிரிழந்த நிலையில், 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ₹4 லட்சம் நிவாரணம் அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைவிட என்ன வேலை?
டில்லியில், கைதுக்கு பிறகு பேருந்தில் ‘வேண்டாம் வேண்டாம் எஸ்.அய்.ஆர். வேண்டாம்’ என பிரியங்கா காந்தி தமிழில் முழக்கங்களை எழுப்பினார். தமிழ்நாடு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, கனிமொழி சோமு உள்ளிட்டோர் ஆவேசமாக முழக்கங்களை எழுப்ப அதனை பிரியங்கா காந்தியும் கூறினார். வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாகப் போராட நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதில், உங்கள் நிலைப்பாடு என்ன?
‘‘தாயும் நீயே, தந்தையும் நீயே!’’
தமிழ்நாட்டில் உள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேசன் பொருள்களை வழங்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சோதனை அடிப்படையில் 10 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்த இந்த திட்டம் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதன்மூலம், மூத்த குடிமக்கள் 15.81 லட்சம், மாற்றுத் திறனாளிகள் 20.42 பேர் பயனடைய உள்ளனர்.
‘இந்தியா’ கூட்டணிக்கு நல் விருந்து காத்திருக்கிறது!
இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரவு விருந்தளித்தார். இதில், சரத் பவார், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ், திமுகவை சேர்ந்த கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட பல கூட்டணி கட்சி நிர்வாகிகளும், கூட்டணியில் இடம்பெறாத ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்களும் பங்கேற்றனர்.
மரத்துப் போகிறதா?
தூங்கும் போது கை, கால்கள் மரத்துப் போகும் பிரச்னை பலருக்கு இருக்கலாம். விரல்கள், மணிக்கட்டு, முழங்கை பகுதிகளிலோ, கால்கள், சியாட்டிக் நரம்பு பகுதியிலோ அழுத்தம் அதிகமாகையில் அப்பகுதிகள் மரத்துப் போகும். ரத்தவோட்டம் தடைபடுவது மட்டுமல்லாமல், வைட்டமின் பி12, பி6, மக்னீசியம் சத்துகள் குறைவு கூட இதற்கு காரணமாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தினசரி உடற்பயிற்சி, சரிவிகித உணவு இதற்கு சிறந்த தீர்வாகும்.
இருமலைப் போக்க….
மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. தீராத இருமலுக்கு தேன் மிகச்சிறந்த மருந்து. தொண்டையின் உள்பகுதியில் இருக்கும் புண் மற்றும் அரிப்பை தேன் குணப்படுத்தும். உப்புநீரில் வாய்க் கொப்பளித்து வந்தால் தொண்டையில் உள்ள நோய்க்கிருமிகள் அழிந்து, இருமல் தீரும். சளி, இருமலை குணப்படுத்த இஞ்சியும் உதவும். இதை இஞ்சி டீ, இஞ்சி சாறாகவும் உட்கொள்ளலாம்.