சென்னை, ஆக. 12- தமிழ்நாட்டில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டிய சிறு துறைமுகத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவாலிடம் வலியுறுத்தினார்.
அமைச்சர் எ.வ.வேலு, ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் வழங்கினார். அதில், ராமேஸ்வரம் துறைமுகத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் ரூ. 118 கோடி செலவில் 250 மீட்டர் நீளமுள்ள அணுகு தோணித்துறை மற்றும் பன்னாட்டு பயணிகள் முனையம் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை, சென்னை அய்அய்.டியில் உள்ள தேசிய தொழில்நுட்ப மய்யம் தயாரித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், இராமேஸ்வரம் (இந்தியா) முதல் தலைமன்னார் (இலங்கை) வரையிலான 26 கடல் மைல் (48 கிலோமீட்டர்) தூரத்திற்கு பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க முடியும்.
இந்த தோணித்துறை, இராமேஸ் வரம் ரயில் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந் துள்ளதால், பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங் குவதற்காக, சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ. 118 கோடி நிதியுதவி கோரி ஒன்றிய அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவியை ஒன்றிய அரசு விரைவில் வழங்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.