நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 47,525 பேர் பயன் சுகாதாரத்துறை தகவல்

4 Min Read

சென்னை, ஆக. 11- நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 47,525 போ் பயனடைந்துள்ளனா் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்களைத் போன்ற பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் முகாம்களில் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்துப் பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்த சா்க்கரை, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா, கிரயாட்டினின்) செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பரிசோதனை விவரங்கள் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும்.

அனைத்துப் பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவச் சேவைகள் வழங்கப்படவுள்ளன. மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்-ரே, எக்கோகாா்டியோகிராம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் பெண்களுக்கான கா்ப்பப்பை வாய் மற்றும் மாா்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.

ஒரு வட்டாரத்துக்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1,164 முகாம்களும், ஒரு மண்டலத்துக்கு ஒரு முகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 லட்சத்துக்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த நிலையில், கடந்த 2 வாரத்தில் சென்னை நீங்கலாக 47,525 போ் மருத்துவ முகாம் மூலம் பயனடைந்துள்ளனா். அதிகபட்சமாக திருநெல்வேலியில் 2,394 பேரும், திருவண்ணாமலையில் 2,191 பேரும் பயன்பெற்றுள்ளனா்.

குறிப்பாக இந்த முகாம் மூலம் பெண்கள் அதிக அளவில் பயனடைந்துள்ளனா். மொத்தம் 27,369 பெண்களும், 17,311 ஆண்களும் பயன்பெற்றுள்ளனா். மேலும் திருநங்கை 2 பேரும் பயன்பெற்றுள்ளனா்.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

 

வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு

திட்டப் பணிகளை
விரைந்து முடிக்க வேண்டும்

அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

சென்னை, ஆக.11- வடகிழக்கு பருவ மழையை யொட்டி, சென்னையில் 4 துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைந்து முடிக்குமாறு அதிகாரி களுக்கு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தினார்.

பருவமழை

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சோழிங்கநல்லூர் வட்டம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்வளத்துறை சார்பில் வெள்ளத்தை தணிப்பதற்காக தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயிலிருந்து கடல் வரை நேரடியாக ரூ.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெருமூடிய கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல், ஒக்கியம் மடுவில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் விரிவான மறுசீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள், பள்ளிக்கரணை அணை ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை ரூ.57.70 கோடி மதிப்பீட்டில் மூடிய பெருவடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை தலைமைச் செயலர் நேற்று முன்தினம் (9.8.2025) நேரில் ஆய்வு செய்தார்.

கும்மிடிப்பூண்டி தோப்பு சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.145 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் கட்டும் பணியையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இப்பணிகளை உரிய தொழில்நுட்ப வழிகாட்டு தலுடன் போக்குவரத்துக்கும் மக்களுக்கும் இடையூறின்றி பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளவும், உரிய காலத்தில் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களை அவர் அறிவுறுத்தினார்.

இதேபோல், அடையாறு கிரீன் வேஸ் சாலையில் சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தலைமைச் செயலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநகராட்சி சார்பில் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள 42 ஏக்கர் பரப்பளவிலான ராமன் தாங்கல் ஏரியில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைக்கும் பணியையும் தலைமைச் செயலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் ஆகாயத்தாமரை அகற்றுதல், பறவைகளுக்கான தீவுகள் அமைத்தல், 10,500 மரங்கள் நடுதல், சூரிய சக்தியில் இயங்கும் நீரூற்று, நடைபாதை, மின்விளக்கு வசதி, சுற்றிலும் வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பின்னர், அடையாறு மண்டலம், கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களின் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *