வாக்குச்சாவடி மோசடி: இப்போதாவது தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ளுமா?

6 Min Read

அஜோய் ஆசிர்வாத் மஹாபிரஷஸ்தா
‘தி வயர்’ இதழின்
அரசியல் விவகாரங்கள் ஆசிரியர்

இதுவரை எதிர்க்கட்சிகளின் கவலைகளை வெளிப்படையாகப் புறக்கணித்து வந்த தேர்தல் ஆணையம், அவை கட்டுக்கடங்காத நிலையை அடைவதற்கு முன்பு, அவற்றை முறையாக கவனிக்க வேண்டும்.

பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் உள்ள ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் உள்ள முரண்பாடுகள் குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட தகவல், பல மோசடிகள் அம்பலமாவதற்குத் தொடக்க மாக அமைந்துள்ளது.

இந்தியா

தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மையைக் கேள்வி கேட்கும் தன்னுடைய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆறு மாதங்களாக மகாதிவபுரா சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பன்முக முரண்பாடுகளை வெளிக் கொணர, காங்கிரஸ் குழு மேற்கொண்ட கடுமையான முயற்சி அமைந்தது.

மாபெரும் மோசடிக்கு ஒரு சாம்பிள்!

2024 மக்களவைத் தேர்தலில், மகாதிவபுரா மட்டும்தான் பாரதிய ஜனதா கட்சி ஆதிக்கம் செலுத்திய ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். அந்தத் தொகுதியின் மற்ற சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்ற போதிலும், மகாதிவபுராவில் மட்டும் பாஜக எதிர்பாராத வகையில் அசைக்க முடியாத அளவுக்கு முன்னிலை பெற்றது.

இந்தியா

இறுதியில், மகாதிவபுராவில் பாஜக பெற்ற அதிக எண்ணிக்கையிலான வாக்குகள், பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் காங்கிரசைவிட ஏறத்தாழ 33,000 வாக்குகள் அதிகம் பெற்று, முன்னிலை பெறப் போதுமானதாக இருந்தது.

காங்கிரஸ் கட்சி பயன்படுத்திய வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ ஆவணங்கள் என்பதால், ராகுல் காந்தி கடந்த 7.8.2025 அன்று பகிர்ந்துகொண்ட தேர்தல் மோசடி குறித்த ஆதாரங்கள், இதுவரை பகிர்ந்துகொண்டதிலேயே மிகவும் உறுதியான ஆதாரங்களாகும். இந்த முரண்பாடுகள், தேர்தல் ஆணையத்தால் மட்டுமே உறுதியாகத் தீர்க்கக்கூடிய தேர்தல் அமைப்பில் உள்ள ஒரு பெரிய கோளாறைச் சுட்டிக்காட்டுகின்றன.

பதுங்கும் ஆணையம்!

ஆனால், வாய்ப்புக் கேடாக, தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி சுட்டிக்காட்டிய விஷயங்களை நெருக்கமாக ஆராய்வதைத் தவிர்த்து, இந்தக் குற்றச்சாட்டுகளைப் பிரமாணமாக முன்வைக்க முடியுமா என்று சவால் விடுத்தது. தேர்தல் ஆணை யத்தின் இந்தப் பதில், அண்மைக் காலமாக இந்தியாவின் தேர்தல்களின் ‘புனிதத்தன்மை’ குறித்து நிலவிவரும் அச்சத்தை நீக்கப்போவதும் இல்லை; பொதுமக்களின் பார்வையில் தேர்தல் அமைப்பின் தன்னாட்சி நிலையை உயர்த்தப்போவதும் இல்லை.

இந்தியா

விமர்சனங்களை முறையாக எதிர்கொள்ள மறுப்பது ராகுல் காந்தியின் வாதங்களை மேலும் வலுப்படுத்தும். நகல்கள், போலியான முகவரிகள், போலி வாக்காளர்களைப் புகுத்த படிவம் 6 அய்த் தவறாகப் பயன்படுத்துதல், வாக்காளர்களின் விவரங்கள் போலியாகத் தோற்றமளிக்கும் மோசமான வாக்காளர் பட்டியல் ஆகியவற்றைக் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். அத்துடன், தேர்தல் ஆணையம் “வாக்குத் திருட்டில்” ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அத்துடன், தேர்தல் ஆணையம் “மறு அணி”யில் – அதாவது, பா.ஜ.க.வின் பக்கம் – இருக்கும் ஒரு “நடுவர்” என்று பிரகடனம் செய்தார். தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கட்டளைப்படி செயல்படுகிறது என்றும் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.

அதிர்ச்சியூட்டும் முறைகேடுகள்!

ராகுல் பகிர்ந்துகொண்ட சில தகவல்கள் அதிர்ச்சி யூட்டுபவை. ஆறு மாதங்களாக மகாதிவபுராவின் வாக்காளர் பட்டியலின் அச்சிடப்பட்ட நகல்களைச் சரிபார்த்த பிறகு, காங்கிரஸ் குழு 11,965 நகல் வாக்காளர்கள், 40,009 போலி முகவரி வாக்காளர்கள், ஒரே முகவரியில் ஆவணப்படுத்தப்பட்ட 10,452 மொத்த வாக்காளர்கள், செல்லாத நிழற்படங்கள் கொண்ட 4,132 வாக்காளர்கள், மற்றும் படிவம் 6–அய்த் (புதிய வாக்காளர்களைப் பதிவு செய்யத் தேவைப்படும் ஒரு ஆவணம்) தவறாகப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட 33,692 வாக்காளர்கள் இருப்பதைக் கண்டறிந்ததாக அவர் கூறினார்.

ஒரு  வாக்காளர் தொகுதியில் உள்ள வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டார் என்பதையும் அவர் காட்டினார். மேலும், 80 வாக்காளர்கள் ஒரே முகவரியில் பட்டியலிடப்பட்ட மூன்று நிகழ்வுகளையும், 46 வாக்காளர்கள் ஒரு அறை கொண்ட வீட்டில் வசிப்பதையும் அவர் முன்வைத்தார். காங்கிரஸ் குழு சரிபார்த்து, அந்த முகவரிகளில் யாரும் வசிக்கவில்லை என்று கண்டறிந்ததாகக் கூறும் அந்த முகவரிகளின் நிழற்படங்களையும் அவர் காட்டினார்.

வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகளுக்கான மிகவும் உறுதியான ஆதாரம், பெங்களூருவில் உள்ள “153 Biere Club” என்ற மதுபான ஆலையில் 68 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்ட நிகழ்வாகும். அவர்களில் ஒருவர்கூட அங்கு இல்லை.

இவை கடுமையான குற்றச்சாட்டுகள். இந்தியா வின் தேர்தல்களின் நேர்மை மீது நம்பிக்கை கொண்ட எவரும் இதைக் கவலைக்குரியதாகவே கருத வேண்டும். மகாதிவபுரா தவிர மற்ற அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெற்ற காங்கிரஸ், பெங்களூரு மத்திய தொகுதியில் தோல்வியடைந்ததற்கு, வாக்காளர் பட்டியலில் உள்ள இந்தத் தவறுகளே காரணம் என்று ராகுல் காந்தி நம்புகிறார். மகாதிவபுராவில் மட்டும் பாஜக 1.1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வலுவான சந்தேகங்கள்!

மகாதிவபுராவில் நடந்த சம்பவங்களை “வாக்குத் திருட்டின்” ஒரு “மாதிரி” என்று ராகுல் காந்தி அழைத்தார். மேலும், இதேபோல் மற்ற மாநிலங்களிலும் நடப்பதாகச் சந்தேகிப்பதாகவும் கூறினார். அரியானா, மகாராட்டிரம் ஆகிய இரு மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தலில் கட்சி சிறப்பாகச் செயல்பட்டபோதும், கட்சியின் கருத்துக்கணிப்புகள் வெற்றியைச் சுட்டிக்காட்டியபோதும், சட்டமன்றத் தேர்தலில் அது தோல்வியடைந்த பிறகு, நியாயமற்ற தேர்தல்கள் குறித்த காங்கிரசின் சந்தேகம் அதிகரித்ததாக அவர் கூறினார்.

ராகுல் காந்தியுடனோ அல்லது வேறு எந்த எதிர்க்கட்சித் தலைவருடனோ வார்த்தைப் போரில் ஈடுபடுவதைத் தவிர்த்து, இந்தக் குற்றச்சாட்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வது, அவற்றை ஆராய்வது, தெளிவான பதில்களை அளிப்பது ஆகியவை தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும்.

மகாராட்டிரத்தில் உள்ள சில தொகுதிகள் குறித்து இதேபோன்ற குற்றச்சாட்டுகளை ராகுல் முன்னதாக முன்வைத்திருந்தார். பிறகு, கடந்த 7.8.2025 அன்று இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். ஆனால், தேர்தல் ஆணையம் இன்னும் அவற்றுக்குச் செவிசாய்க்கவில்லை.

இந்தியத் தேர்தல்களைப் பொறுத்தவரை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அல்லது வாக்குச்சீட்டுகள் மூலம் நடத்த வேண்டுமா என்பதைவிட, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பற்றித்தான் விவாதிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார். தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்பட்டால், தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாய மாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் இதற்கு முன்பு இதேபோன்ற குற்றச்சாட்டு களைப் பகிரங்கமாக முன்வைத்திருந்தாலும், அதன் மிக உயர்ந்த தலைவர், இதுவரை இல்லாத அளவுக்கு உச்சபட்ச தேர்தல் அமைப்பின் மீது நேரடியாகக் கேள்விகளை எழுப்பி, அதன் சுதந்திரம் குறித்துச் சந்தேகங்களை எழுப்புவது இதுவே முதல் முறையாக இருக்கலாம்.

தேர்தல் ஆணையத்தின் கடமை!

ஒரு அரசியலமைப்பு அமைப்பாக, தேர்தல் ஆணையம் அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது. இந்தக் கவலைகள் எல்லை மீறுவதற்கு முன்பு, அவற்றை முறையாகக் கவனிக்க வேண்டும்.

அதைச் செய்ய, தேர்தல் ஆணையம் தனது ஆக்கிர மிப்பு மனப்பான்மையைக் கைவிட வேண்டும். அதன் செயல்பாடுகள் குறித்துக் கேள்விகளை எழுப்பியதற்காக, எதிர்க்கட்சிகளைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தாக்கியது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். தலைமைத் தேர்தல் ஆணையர், ஆணையத்தின் சட்டபூர்வமான தன்மையைக் கேள்விக்குட்படுத்த ஒரு “போலிக் கதை” உரு வாக்கப்படுகிறது என்ற பாஜகவின் வாதத்தை எதி ரொலிக்கும் அளவுக்குச் சென்றார்.

சில மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ் சரிபார்ப்புப் பணிகளுக்காக வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளைப் பகிர வேண்டும் என்று கோரியபோது, வீடியோ காட்சிகளைப் பகிர்வது தேவையற்ற அரசியல் சர்ச்சைக்கு வழிவகுக்கும் என்று வாதிட்டு, அதைத் தடுப்பதற்கேற்ப விதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியது.

சமீபத்தில், பீகாரில் “சிறப்புத் தீவிரத் திருத்தப்” பணிகளுக்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ரேஷன் கார்டுகள் போன்ற வழக்க மான அடையாள அட்டைகளையும் பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரை அளித்தபோது, நீதித்துறைக்கு எதிராக இதேபோன்ற போர்க்குணத்தைக் காட்டியது.

ஒவ்வொரு  நிறுவனத்தின்  தன்னாட்சியும்  கேள்விக்குள்ளாக்கப்படும் அல்லது அரசியல் தலைவர்களின் அழுத்தத்தின் கீழ் இருக்கும் தற்போதைய அரசியல் சூழலிலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்ள முடியாது என்பதைத் தேர்தல் ஆணையம் உணர வேண்டும். இந்தச் சர்ச்சையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்குத் தேர்தல் ஆணையத்திற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது, தன்மீது சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் அறிவியல்பூர்வமாகவும், அமைதியாகவும் கையாள்வதுதான்.

வாக்காளர் பட்டியல்களின் டிஜிட்டல் நகல்களைத் தேர்தல் ஆணையம் பொதுவெளியில் வைக்கலாம். எதிர்க்கட்சிகள் கோரினால், வாக்குப்பதிவின் சிசிடிவி காட்சிகளையும் வெளியிடலாம். அது நடக்காத வரை, ராகுல் காந்தியின் கவலைகள், ஜனநாயக மனப்பான்மை கொண்ட ஒவ்வொரு குடிமகனை யும் கவலையடையச் செய்யும்.

நன்றி: ‘முரசொலி, 11.8.2025

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *