இனி குடும்ப (ரேஷன்) அட்டை முகவரியை இ-சேவை மய்யம் செல்லாமலே இணையத்தில் மாற்றலாம்!

2 Min Read

சென்னை, ஆக.10– குடும்ப அட்டையில் சரியான முகவரி இருப்பது மிகவும் அவசியம். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் உங்கள் பகுதிக்குட்பட்ட நியாய விலை கடையில் சரியாக பெறவும், அரசு தரப்பிலிருந்து அனுப்பப்படும் முக்கிய தகவல்களைப் பெறவும், மேலும் பல இடங்களில் இதனை ஒரு அதிகாரப்பூர்வ முகவரி சான்றாகப் பயன்படுத்தவும் சரியான முகவரி முக்கியமானது. வீடு மாறியவர்கள், வேறு ஊருக்கு குடிபெயர்ந்தவர்கள் உடனடியாக முகவரியை மாற்றுவது அவசியமாகும்.

முதலில், தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் (TNPDS) தனித்த இணையதளமான www.tnpds.gov.in க்கு செல்லவும். இதுவே அனைத்து மின்னணு அட்டை தொடர்பான சேவைகளுக்குமான அதிகாரப்பூர்வத் தளமாகும். இணைய தளத்தின் முகப்புப் பக்கத்தின் வலது புறத்தில், “பயனாளர் நுழைவு” என்ற விருப்பத்தைக் காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும். உங்கள் குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்ட 10 இலக்க கைப்பேசி எண்ணை உள்ளிட வேண்டும். இதுவே உங்கள் கணக்கிற்கான பாதுகாப்பு நுழைவாயில் ஆகும். அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு எழுத்துக்களைச் (Captcha) சரியாக உள்ளிட்டு ‘பதிவு செய்’ பொத்தானை அழுத்தவும்.

கடவுச் சொல் அனுப்பப்படும்

நீங்கள் பதிவு செய்த அலைபேசி எண்ணுக்கு 7 இலக்கங்கள் கொண்ட ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அந்த எண்ணை அதற்கான இடத்தில் உள்ளிட்டு உங்கள் கணக்கிற்குள் உள் நுழையவும். இந்த OTP முறை, உங்கள் கணக்கைப் பிறர் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. உள்நுழைந்தவுடன், உங்கள் குடும்ப அட்டையின் விவரங்கள் திரையில் தோன்றும். இடதுபுறத்தில் உள்ள மெனுவில், “மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்” என்ற தலைப்பின் கீழ் பல விருப்பங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில், “முகவரி மாற்றம்” என்பதை தேர்ந்தெடுக்கவும்.

இப்போது, உங்கள் புதிய முகவரியைக் கவனமாகவும் பிழை யின்றியும் உள்ளிட வேண்டும். மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீட்டு எண் (Pincode) போன்ற அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்யவும். முகவரியை உறுதிப்படுத்த, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் தெளிவான ஒளி வருடப்பட்ட (ஸ்கேன்) நகலை (பொதுவாக 1MB அளவுக்குள்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அண்மைய எரிவாயு இணைப்புப் புத்தகம் (Gas Bill)

வாடகை ஒப்பந்தப் பத்திரம்

வங்கி கணக்குப் புத்தகம் (Bank Passbook)

ஆதார் அட்டை

வீட்டின் விற்பனைப் பத்திரம்

அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு, ‘சமர்ப்பி’ பொத்தானை அழுத்தவும். உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், ஒரு குறிப்பு எண் (Reference Number) திரையில் தோன்றும். இந்த எண்ணை எதிர்கால பயன்பாட்டிற்காகக் குறித்து வைத்துக் கொள்ளவும். உங்கள் விண்ணப்பத்தின் நிலையை இந்த எண்ணை கொண்டு இதே இணையதளத்தில் நீங்கள் சரிபார்த்து கொள்ளலாம். விண்ணப்பித்த பிறகு, உங்கள் கோரிக்கை தொடர்புடைய வட்ட வழங்கல் அதிகாரிக்கு (Taluk Supply Officer) அனுப்பப்பட்டு, சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும். பொதுவாக, 15 முதல் 30 வேலை நாட்களுக்குள் உங்கள் முகவரி மாற்றப்பட்டு, புதிய விவரங்கள் இணையத்தில் புதுப்பிக்கப்படும். அதன் பிறகு, புதுப்பிக்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டையை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *