வாக்காளர் பட்டியல் மோசடி பற்றி கேள்வி கேட்டால் ராகுல் காந்தியிடம் பிரமாணப் பத்திரம் கேட்பதா? தேர்தல் ஆணையத்திற்குப் பிரியங்கா கண்டனம்!

2 Min Read

புதுடில்லி, ஆக.10– வாக்கு திருட்டு ஆதாரங்களை வெளியிட்ட ராகுல் காந்தியிடம் பிரமாணப் பத்திரம் கேட்பதற்கு தேர்தல் ஆணையம் மீது பிரியங்கா சாடியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, ராகுல் காந்தியிடம் பிரமாண பத்திரம்கேட்டதற்கு தேர்தல் ஆணையத்தை கடுமையாகச் சாடினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் உறுதிமொழி

ராகுல் காந்தி இவ்வளவு பெரிய முறைகேட்டை அம்பலப்படுத்தி இருக்கிறார். பிரமாண பத்திரம் கேட்பதில் உள்நோக்கம் இல்லை என்றால், இந்த முறைகேட்டை விசாரியுங்கள்.

நாடாளுமன்றத்தில் நாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை விட பிரமாணப் பத்திரம் உயர்ந்ததா? நாங்கள் உறுதிமொழி எடுத்தவர்கள். நாங்கள் அனைத்தையும் பொதுவெளியில் கூறுகிறோம். ஆதாரங்களை உங்களுக்கு வழங்கி இருக்கிறோம்.

தங்கள் முன் இருக்கும் ஆதாரங்கள் குறித்து அவர்கள் விசாரிக்க வேண்டும். விசாரிக்காமல் இது தவறான குற்றச்சாட்டு என எப்படி அவர்கள் கூற முடியும்? இதை விட பெரிய விஷயம் இருக்க முடியுமா?

ஒரு காலம் வரும்

இது நமது நாட்டின் ஜனநாயகத்தை பற்றியது. இது நகைச்சுவை இல்லை. இது ஒரு கட்சியைப் பற்றியோ, மற்றொரு கட்சியைப் பற்றியோ அல்ல. இதை விசாரிக்காமல் குப்பை என்று கூற முடியாது.

இதில் மிகப்பெரிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. பா.ஜனதாவுக்கு மட்டுமே தாங்கள் பொறுப்புக்கூற வேண்டும் என நினைத்தால் அல்லது ஒரேயொரு கட்சிக்கு மட்டுமே தாங்கள் பொறுப்புக்கூற வேண்டும் என நினைத்தால் அதை அவர்கள் மறுபரிசீலனை செய்தாக வேண்டும்.

ஏனெனில் மற்றொரு பிரிவினர் ஆட்சிக்கு வரும் ஒருகாலம் வரும், அப்போது நமது ஜனநாயகத்தின் அழிவுக்கு காரணமானவர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும் என எனது சகோதரர் (ராகுல் காந்தி) கூறியிருக்கிறார்.

இந்த தேர்தல் முறைகேடு பிரச்சினையை எப்படி எடுத்துச் செல்வது? என்பதை இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

விசாரணை நடத்துங்கள்

இதில் சில தவறு நடந்திருப்பது தெளிவாகிறது. இது உங்களுக்குத் தெளிவாக தெரியும், மேலும் அவர்களின் தலைவர்கள் (பா.ஜனதாவினர்) பதிலளிக்கும் விதமும் இதைத்தெளிவுபடுத்தியுள்ளது.

ஒரு மோசடி நடந்திருப்பதாக ஒரு ஆசிரியரிடம் நீங்கள் கூறினால், அவர் உங்களின் கன்னத்தில் அறைவாரா? அல்லது அது குறித்து விசாரிக்கிறேன் எனக்கூறுவாரா?

இங்கு தவறை சுட்டிக் காட்டிய வரை (ராகுல் காந்தி) அவர்கள் அவமதிக்கிறார்கள், பிரமாண பத்திரத்தில் கையெழுத்து போட வலியுறுத்துகிறார்கள்.

உங்கள் (தேர்தல் ஆணையம்) அமைப்பில் நடந்திருக்கும் இவ்வளவு பெரிய ஒரு ஊழலை நீங்கள் செய்யவில்லை என்றால், விசாரணை நடத்துங்கள். இவ்வாறு பிரியங்கா கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *