குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நடந்த,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய செயற் குழுக் கூட்டத்தில் (7.11.2023), அதன் பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹோசபெலெ பேசியதாவது: .
“இந்தியா ஏற்கெனவே ஹிந்து தேசமாக இருக்கிறது; எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும்.
இதைத்தான், ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட் கேவரும் தெரிவித்து இருந்தார்.
ஒருங்கிணைந்த தேசமாக இந்தியா எப்போதும் ஹிந்து நாடாக இருக்கும். இதை மக்களுக்கு உணர்த்தும் வேலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஈடுபட்டு வரு கிறது.
இதனால், இந்தியாவை ஹிந்து நாடாக நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.
சமீப காலமாக, தென் மாநிலங்கள் வேறு, வட மாநிலங்கள் வேறு என ஒரு சிலர் கூறி வருகின்றனர். மேலும் இந்தியாவில் இருந்து தென் மாநிலங்களை பிரிக்க, தங்களை திராவிடர்கள் என்றும், வேறு மொழி பேசுபவர்கள் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது நாட்டைப் பலவீனப்படுத்தும் முயற்சி. இதை எதிர்த்துப் போராட நாட்டு மக்கள் முன்வர வேண்டும்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் நாட்டு மக்கள் பங்கேற்க, அடுத்த ஆண்டு ஜன.1 – 15 வரை, நாடு முழுதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வீடு வீடாக பிரச்சாரத்தில் ஈடுபடுவர்.” இவ்வாறு கூறியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர்.
(‘தினமலர்’ – 8.11.2023 பக்கம் 9)
ஹிந்து மதம் எப்பொழுது தோன்றியது? அதைத் தோற்றுவித்தவர் யார்? அதற்கென்றுள்ள புனித நூல் எது? என்ற தகவல்களை முதலில் கூறட்டும் ஹிந்துத்துவ வாதிகள்.
மதம் என்ற ஒன்று இருந்தால், நாம் எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கு பதில் தயாராக விரல் நுனியில் இருக்க வேண்டுமே! எவ்வளவுக் காலமாக இந்தக் கேள்வி களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். எத்தனை சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள் இருக்கிறார்கள் – இவர்களில் எவராவது பதில் சொன்னதுண்டா?
இன்னும் சொல்லப் போனால் ‘ஹிந்து’ என்று பெயர் கொடுத்தவனே வெள்ளைக்காரன்தானே! இதனை நாம் சொல்லவில்லை. மகா பெரியவாள் என்று பெருமை யாகப் பேசும் காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியே ஒப்புக் கொண்டுள்ளாரே.
“நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக் காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பேர் நம்மைக் காப்பாற்றியது” (‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம் பக்கம் 267).
வெள்ளைக்காரனை, மிலேச்சன் என்று ஒரு கட்டத்தில் சொன்னவர்கள்தான் பார்ப்பனர்கள், அவன் போட்ட ‘பிச்சை’ தான் ஹிந்து மதம் என்பது.
நாமெல்லாரும் ஹிந்து தான். அதைக் காப்பாற்றத் தான் ஆர்.எஸ்.எஸ். பாடுபடுகிறது என்கிறார் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் – ஹிந்து மதம் என்று சொல்லிக் கொண்டு பிறப்பின் அடிப்படையில் உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதை கெட்டியாக வைத்துக் கொண்டு ஹிந்து மதத்தைக் காப்பாற்றப் போவதாகக் கூறுவது கடைந்தெடுத்த நகைச் சுவையே!
ஹிந்து மதத்தைக் காப்பாற்ற எல்லோரும் ஒரே ஜாதிதான் என்று சொல்லட்டுமே பார்க்கலாம். அதற்கான சட்டத்தைக் கொண்டு வரட்டுமே ஆர்.எஸ்.எஸ். பிஜேபி அரசு? சட்ட அறிஞர் முல்லா சொன்னது போல் ஜாதி இல்லை என்றால் ஹிந்து மதமே இல்லை என்பதுதான் உண்மை!