ராகுல் சொல்வது உண்மையா? பெங்களூருவில் ஒரே வீட்டில் 80 வாக்காளர்கள்? ஆய்வுக்கு போன வாக்குச்சாவடி அலுவலருக்கு அதிர்ச்சி

3 Min Read

பெங்களூரு, ஆக. 10– பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதி யில் 1 லட்சத்து 250 ஓட்டுகள் திருடப் பட்டுள்ளதாக ராகுல் காந்தி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை யொட்டி 8.8.2025 அன்று பெங்களூருவில் ராகுல் காந்தி போராட்டம் நடத்தினார். அப்போது பெங்களூருவில் உள்ள குறிப்பிட்ட முகவரியை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி 80 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டதாக கூறினார். இதையடுத்து அங்கு பூத் மட்ட அலுவலர் (BLO) ஆய்வு செய்த நிலை யில் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

டில்லியில் அண்மையில் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் ஆணையம் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாஜகவின் வெற்றிக்காக இந்திய தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை சேர்ப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

குறிப்பாக மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தல், அரியானா சட்டமன்றத் தேர்தல், பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதி தேர்தல் தொடர்பான வாக்காளர் பட்டியலை பெரிய திரையின் மூலமாக காண்பித்து குற்றம் சுமர்த்தினார்.

ராகுல் காந்தி போராட்டம்

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 250 ஓட்டுகள் திருடப்பட்டுள்ளது. இதனால் தான் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகானை வீழ்த்தி 32,707 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பிசி மோகன் வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் தேர்தல் ஆணையத்தை கண்டித்து 8.8.2025 அன்று பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தினார். அப்போது ராகுல் காந்தி பேசும்போது, “கருநாடகாவில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக நாம் மேற்கொண்ட சர்வேயில் 15 முதல் 16 தொகுதிகள் கிடைக்கும் என்ற விவரம் கிடைத்தது. 16 சீட்டுகளில் வெற்றி கிடைக்கும் என்பது உறுதியாக கிடைத்தது. ஆனால் தேர்தல் முடிவில் 9 சீட் மட்டுமே கிடைத்தது. இதனால் சந்தேகம் ஏற்பட்டது.

பெங்களூரு தொகுதி

பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியின் தேர்தல் முடிவு பற்றி ஆராய்ந்தோம். குறிப்பாக அந்த லோக்சபா தொகுதியில் உள்ள மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதி நிலவரத்தை ஆராய்ந்தோம். அப்போது தான் பாஜகவும், தேர்தல் ஆணையமும் சேர்ந்து கருநாடகா மக்களவைத் தேர்தலில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மொத்தம் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 6.5 லட்சம் ஓட்டுகள் இருந்தன. இதில் 1 லட்சத்து 250 ஓட்டுகள் திருட்டு ஓட்டுகளாகும். அதாவது 6ல் ஒரு ஓட்டு போலி வாக்காளர்கள் ஆவார்கள். 5 முறைகளில் ஓட்டு திருடப்பட்டுள்ளது” என்றார்.

அதுமட்டுமின்றி பெங்களூரு முனிரெட்டி கார்டனில் வீட்டு எண் 35ல் 80 வாக்காளர்கள் பதிவு செய்யப் பட்டுள்ளனர். அதேபோல் துளசி டாக்கிஸ் பின்புறம் உள்ள தெருவில் உள்ள வீட்டில் 46 வாக்காளர்களும், குளிர்பான ஆலை முகவரியில் 68 வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக விசாரணையை அறிவிக்கவில்லை.

வாக்காளர்கள் யாருமில்லை

இருப்பினும் கூட பெங்களூரு தேர்தல் அதிகாரி உத்தரவின்பேரில் பிஎல்ஓ எனும் பூத் மட்ட அலுவலரை வைத்து விசாரிக்கப்பட்டது. முனிரெட்டி கார்டனில் வீட்டு எண் 35இல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்து தங்கி செல்வதும், அடிக்கடி நபர்கள் மாறி மாறி வசித்து வந்ததும் தெரியவந்தது. அதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் நபர்களில் யாரும் ஆய்வின்போது அங்கு வசிக்காதது தெரியவந்தது.

அதோடு அந்த வீட்டில் ஒரு ஹால், கழிவறை மற்றும் கிச்சன் மட்டுமே உள்ளது. தற்போது மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஒருவர் அங்கு தங்கி டெலிவரி வேலை செய்து வருவதும், அவருக்கு கருநாடகாவில் ஓட்டுரிமை இல்லாததும் தெரியவந்தது. அதேபோல் ராகுல் காந்தி குறிப்பிட்ட இன்னொரு இடமான குளிர்பான ஆலை முகவரிக்கு சென்றனர். அங்கு யாரும் இல்லை. குளிர்பான ஆலை சமீபத்தில் கைமாறியது. இதனால் பலரும் பணியில் இருந்து மாறி சென்றது தெரியவந்துள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *