மும்பை, ஆக.10– காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி, அண்மையில் கருநாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டார். அதற்கான ஆதாரங்களையும் அவர் குறிப்பிட்டார். பா.ஜனதாவும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சியின் தலைவர் சரத்பவார் நேற்று (9.8.2025) நாக்பூரில் செய்தியாளர் களிடம் பேசிய போது, “ஓட்டுகள் திருடப்பட்டது குறித்து ராகுல்காந்தி வெளியிட்ட விளக்கப்படம் பலகட்ட விசாரணைக்கு பின்னர் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களிடையே தேர்தல் செயல்முறையில் உள்ள நேர்மை தன்மை குறித்த சந்தேகங்களை தீர்க்க ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை தேவை.
விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டுவர உதவும் என்று நான் நினைக்கிறேன். ராகுல்காந்தி நாடாளுமன்றத்திலும் இந்த குற்றச்சாட்டை கூறினார். எனவே தேர்தல் ஆணையம் அவரிடம் கையெழுத்திட்ட பிரமாணப் பத்திரம் கேட்பது முறை இல்லை” என்று கூறினார்.
வாக்காளர் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டு தேர்தல் ஆணையத்தின் நற்பெயரை கெடுத்துவிடாதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “ராகுல்காந்தி உண்மையான ஆதாரங்களுடன் எழுப்பிய பிரச் சினைகளை புறக்கணிக்க முடியாது.
நாங்கள் சொல்வதில் எந்த உண்மையும் இல்லையென்றால், தேர்தல் ஆணையம் அதை தெளிவாக கூறவேண்டும். அப்படி செய்தால் தேர்தல் ஆணையம் போன்ற முக்கிய நிறுவனங்களின் கவுரவம் பராமரிக்கப்படும்” என்றார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக் காட்டி இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) தலைவர் சரத்பவார், “இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பது ஒரு அழுத்தம் தரும் தந்திரம். நாட்டின் நலன்களை பாதுகாக்க இந்திய மக்களாகிய நாம் அரசை ஆதரிக்க வேண்டும்.
பிரதமர் மோடி அரசின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்துவிட்டதா என்று யூகிக்க விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளை அவரது முதல் ஆட்சியிலும் பார்த்தோம். அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று நான் நினைக்கிறேன். அவர் தனது மனதில் தோன்றுவதையெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறார்.
தற்போது நமது அண்டை நாடுகளுடன் நமக்கு இடைவெளி ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான் நமக்கு எதிராக உள்ளது. நேபாளம், வங்கதேசம், இலங்கை மற்றும் மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு நம்முடன் சுமுகமான உறவு இல்லை. நமது அண்டை நாடுகள் நம்மை விட்டு விலகி செல்கின்றன. இந்த பிரச்சினையை புறக்கணிக்க கூடாது. அவர்களுடன் உறவுகளை மேம்படுத்துவதில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.