பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை நான் சாதிப்பதால் சகிக்க முடியவில்லை! எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

5 Min Read

சென்னை, ஆக.10– இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை – மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் சாதிக்க முடியாததை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் எடப்பாடி பழனிசாமியின் வயிற்றெரிச்சலுக்கு காரணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.110 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தாம்பரம் – மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டடம், ரூ.7 கோடியே 24 லட்சம் செலவில் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை – புறநகர் பிரிவு மற்றும் ரூ.1 கோடியே 90 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் மற்றும் 3 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை தாம்பரத்தில் நேற்று (9.8.2025) நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுதவிர வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பல்லாவரத்தில் நடந்த விழாவில் 20,021 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகின்ற மாநில கல்விக் கொள்கையை 8.8.2025 அன்று வெளியிட்டேன். உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருக்கும், நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தேன்.

கல்வி – மருத்துவம் இரு கண்கள்

இன்றைக்கு இந்த மாவட்ட மக்களின் உடல்நலனுக்கு உறுதுணையாக இருக்கப்போகின்ற செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையை தாம்பரத்தில் திறந்து வைத்துவிட்டு, இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன். கல்வியும் – மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என்று அடிக்கடி சொல்வேன். அதற்கு இந்த இருநாள் நிகழ்ச்சிகளும்தான் எடுத்துக்காட்டு.

இலவச வீட்டுமனை பட்டா

ஏற்றத்தாழ்வற்ற – சமத்துவ சமுதாயத்தை கட்டமைக்க சொந்த வீடு இல்லாத நிலமற்ற ஏழை குடும்பங்களையும், பெண்களையும் முன்னிலைப்படுத்தி இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் நம்முடைய அரசு கொள்கையாக வைத்திருக்கிறது.

இப்படி வழங்கப்படுகின்ற ‘கலைஞர் கனவு இல்லம்’ – ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ போன்ற திட்டங்களில் பயன்பெற, ஏழை எளிய மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது. இப்படி, திராவிட மாடல் அரசு செய்த பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் எடுத்த முன்னெடுப்புகளால், திமுக அரசு பொறுப்பேற்ற மே 2021இல் இருந்து, டிசம்பர் 2024 வரைக்கும், 10 லட்சத்து 26 ஆயிரத்து 734 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கினோம். ஆனால், இது போதாது;

இன்னும் நிறைய பேருக்கு, வீட்டுமனைப் பட்டா கிடைக்க வேண்டும் என்று, பட்டா வாங்குவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக, வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில் ஒரு உயர்நிலை குழு அமைத்து, அய்ந்து மாதத்திற்குள் அய்ந்து லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று ஒரு இலக்கு நிர்ணயித்தோம். இதனால், அய்ந்தே மாதத்தில் எத்தனை பேருக்கு பட்டா கிடைத்திருக்கிறது தெரியுமா? 7 லட்சத்து 27 ஆயிரத்து 606 பேருக்கு பட்டா கிடைத்திருக்கிறது.

புறம்போக்கு நிலங்களில் வாழும்…

இதுவும் போதாது என்று சென்னை மற்றும் சுற்றுப்புறங்களிலும், பிற நகர்ப்புற பகுதிகளிலும் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வாழும் மக்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டோம்.

அதில், 79,448 தகுதியான பயனாளிகள் கண்டறியப்பட்டு, 63,419 பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் அளித்து, 20,221 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம். மீதமுள்ள பட்டாக்களை ஒரு மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி, மே 2021இல் இருந்து, தற்போது வரைக்கும் வழங்கப்பட்டிருக்கும் மொத்த பட்டாக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம்.

அதாவது பல லட்சம் குடும்பங்களின் கனவை நிறைவேற்றியிருக்கிறோம். இதில், இந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும், 41,858 பேருக்கு பட்டா வழங்கி இருக்கிறோம். இந்த மகிழ்ச்சியோடுதான், இதன் தொடர்ச்சியாக இன்றைக்கு இந்த மாபெரும் விழாவில், ரூ.1,672 கோடியே 52 லட்சம் மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்களை 20,021 பயனாளிகளுக்கு நான் வழங்கியிருக்கிறேன். தென்குமரியில் இருந்து சென்னை வரைக்கும் சமச்சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்துப் பார்த்து திட்டங்களை நாம் செயல்படுத்துகிறோம்.

வேலைவாய்ப்புகளை
உறுதி செய்கிறோம்

தொழில் நிறுவனங்களை கொண்டு வருகிறோம். வேலைவாய்ப்புகளை உறுதி செய்கிறோம். இதனால்தான், 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியோடு திராவிட மாடல் ஆட்சியில் இன்றைக்கு தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. 2011இல் இருந்து 2021 வரைக்கும் 10 ஆண்டு காலம் பின்னோக்கி சென்ற தமிழ்நாட்டை, இந்த நான்கு ஆண்டுகளில் மீட்டெடுத்து, வளர்ச்சி பாதையின் உச்சத்திற்கு கொண்டு நாம் சேர்த்திருக்கிறோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அவர்களின் நண்பரான ஒன்றிய அரசு கொடுத்த புள்ளிவிவரத்தையே சரியில்லை என்று பேசுகிறார்.

அடிப்படை கூட தெரியாமல்…

அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம், வளர்ச்சியின் அளவீடு என்பது, பொருளாதார அளவுகோல்தான். இந்த அடிப்படை கூட தெரியாமல், அறிவுஜீவி போல இன்றைக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல் என்றால், இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை – மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் சாதிக்க முடியாததை – இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துக் கொண்டிருக்கிறானே! இதுதான் அவர்கள் வயிற்றெரிச்சலுக்கு காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, அரவிந்த் ரமேஷ், வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, எம்.எம்.பாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார், நில நிர்வாக ஆணையர் பழனிசாமி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, மாநகராட்சி ஆணையர் பாலசந்தர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சிதான்

பழனிசாமி அவர்களே, நீங்கள் கூட்டணி வைத்திருக்கும் ஒன்றிய அரசால்கூட மறைக்க முடியாத – மறுக்க முடியாத அளவிற்கு சாதனைகள் செய்து தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம். இதுமட்டுமல்ல, திராவிட மாடல் 2.0-வில் இன்னும் வேகமாக, இன்னும் அதிகமான வளர்ச்சியை ஏற்படுத்துவோம்.

இந்திய நாடே தமிழ்நாட்டை திரும்பி பார்த்து, ‘இதுதான் வளர்ச்சி! இதுதான் வழி!’ என்று சொல்லும் அளவிற்கு நிச்சயமாக செயல்படுவோம். அதை நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து பார்க்கத்தான் போகிறீர்கள். என்னைப் பொறுத்தவரைக்கும், மக்களுக்காக உழைப்பவன். இந்த ஸ்டாலினை மக்கள் நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு எங்கள் பயணம் தொடரும், தொடரும், தொடரும் என்று முதலமைச்சர் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *