சென்னை, ஆக.10– அரசு அலுவலகங்களில் மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுதல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் இ-மெயில் மூலமாக பெறப்படும் குறை மனுக்களின் மீது 3 நாட்களுக்குள் மனுவை பெற்று கொண்டதற்கான ஒப்புகை வழங்கப்பட வேண்டும். மனு பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் குறைகள் களையப்பட வேண்டும். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில் மனுக்களை கையாளுதல் குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும், மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் செயலாளர்களும், ஆட்சியர்களும் அறிவுறுத்தப்பட்டனர். அனைத்து அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்களை பதிவு செய்ய குறைகளைவு மனுப்பதிவேடு’ ஒன்றினை பராமரிக்க வேண்டும். அந்த பதிவேட்டில் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பதிவு செய்திட வேண்டும். இந்த பதிவேடுகளை வாரம் அல்லது மாதம்தோறும் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களின் போது சமர்ப்பிக்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..
வழக்குரைஞர்கள் பதிவுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது
உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு
புதுடில்லி, ஆக.10– சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞா்களாகப் பதிவு செய்பவா்களிடம், சட்டபூா்வ கட்டணங்களைத் தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணத்தையும் வழக்குரைஞா் சங்கங்கள் வசூலிக்கக் கூடாது’ என உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
‘வழக்குரைஞா்கள் பதிவுக்காக அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலையில் உத்தரவு பிறப்பித்தது. அதிகக் கட்டணம் வசூலிப்பது விளிம்புநிலை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரை பாதிப்பதாகவும், சட்டத் துறையில் அவா்களின் பங்கேற்பைக் குறைப்பதாகவும் உச்சநீதிமன்றம் கருதியது. மேலும், இது உண்மையான சமத்துவக் கொள்கைக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டது.
இந்நிலையில், சில மாநில வழக்குரைஞா் சங்கங்கள் இந்த உத்தரவை முறையாகப் பின்பற்றுவதில்லை என்று குற்றஞ்சாட்டி, கே.எல்.ஜே.ஏ.கிரண் பாபு என்பவா் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோர் அமா்வுமுன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்திய வழக்குரைஞா் சங்கம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘அனைத்து மாநில வழக்குரைஞா் சங்கங்களும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை முறையாகப் பின்பற்றி வருகின்றன. கருநாடக மாநில வழக்குரைஞா் சங்கத்தில் வசூலிக்கப்படும் ரூ.6,800 கட்டணமானது அடையாள அட்டை, சான்றிதழ்கள், நல நிதி மற்றும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கானது. கூடுதலாக வசூலிக்கப்படும் ரூ.25,000 என்பது வழக்குரைஞா்கள் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் செலுத்தலாம்; கட்டாயமானது இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், விசாரணையில் ஆஜாரான இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான மனன்குமார் மிஸ்ரா, ‘நீதிமன்றத்தின் கடந்த ஆண்டு தீா்ப்பின்படி மட்டுமே வழக்குரைஞா்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில வழக்குரைஞா் சங்கங்களுக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அனைவரும் நீதிமன்ற தீா்ப்பை முழுமையாகப் பின்பற்றுகின்றனா்’ என்றார்.
தொடா்ந்து, நீதிபதிகள் குறிப்பிடதாவது: வழக்குரைஞா் பதிவு நடைமுறையில் விருப்பக் கட்டணம் என்று எதுவும் கிடையாது. வழக்குரைஞா் சங்கங்கள் எந்தத் தொகையையும் விருப்பக் கட்டணமாக வசூலிக்கக் கூடாது.
கருநாடக மாநில வழக்குரைஞா் சங்கம் ஏதேனும் விருப்பக் கட்டணத்தை வசூலித்தால், அது கட்டாயமாக இல்லாவிட்டாலும், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த நீதிமன்றம் வழங்கிய முந்தைய வழிகாட்டுதல்களின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனா்.
சென்னையில் உள்ள குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்!
சென்னை, ஆக.10– சென்னையில் உள்ள குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. குடிநீர் எரிகளான புழல் ஏரி, சோழவரம் ஏரி, கண்ணன்கோட்டை ஏரி, தேர்வாய்கண்டிகை ஏரிகளின் நீர் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2,769 மில்லியன் கனஅடியாக உள்ளது.
1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 157 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 260 மில்லியன் கனஅடியாக உள்ளது.