பொருளுக்கேற்ற பெயர்
வடமேற்கு இந்தியாவில் குடியேறும் வரையில் இந்த ஆரியர்கள். இடைக்காலத்தில் திரிந்த பல்வேறு நாடுகளின் பல்வேறு மொழிக் கலைப்பகுதிகளையும் இச்சமஸ்கிருதத்தில் சேர்த்துக் கொண்டனர்.
சமஸ்த = எல்லாம்;
கிருதி = தொகுக்கப்பட்டது
– என்பதே இதன் பொருள்.
“என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா” என்ற ஆங்கில மொழிப் பேரகராதியின் 13ஆவது தொகுதியில், சமஸ்கிருத மொழி பிறப்பு வரலாறு, டாக்டர் எச்.ஜூலியஸ் எக்லிங் என்பவரால் தரப்பட்டுள்ளது.
(இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியராகப் (1875 முதல் 1914 வரை) பணியாற்றியவராவார். ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியின் செயலாளராகவும் இருந்தவராவார்).
“சமஸ்கிருத மொழி ஆரிய மொழிகளுடன் கொண்டுள்ள தொடர் பையும், பல அம்சங்களில் கிரேக்க மொழியைப் போன்றிருப்பதையும்” இவர் விளக்கியுள்ளார்.
டாக்டர் பிரான்ஸ் பாப் என்பவர். கோதிக் மொழியிலிருந்து பைபிளை வாசித்தபோது கோதிக் மொழியும், சமஸ்கிருத மொழி போன்றே இருப்பதைக் கண்டர்.
(பிரான்ஸ் பாப் (1791-1867) இந்தோ அய்ரோப்பிய மொழிகளைக் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர் ஆவார்).
பல மொழிகளின் கலவை
பர்கீஸ் மொழி, ஈரானிய மொழி, பர்மீயன் மொழி, கிரேக்க மொழி ஆகியவற்றின் கூட்டு அவியலே சமஸ்கிருதம்.
கி.மு. 53இல் குசான் வம்சத்தைச் சேர்ந்த கனிஷ்கர் தான் சமஸ்கிருத மொழியை ஓர் உருவுக்குக் கொண்டு வந்தார். இந்த இலட்சணத்தில் தான் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உட்படப் பார்ப்பனர்கள் வாய்ப்பறை கொட்டுகின்றனர்.
இவ்வளவுக்கும் இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை வெறும் 24821; விழுக்காட்டில் சொல்லப் போனால் இந்திய மக்கள் தொகையில் வெறும் 0.0001 தான்!
இந்த செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு
கொட்டி அழுதது ரூ2,533 கோடியாம்!
தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளுக்கு வெறும் ரூ. 147 கோடி மட்டுமே!
தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளுக்கு வெறும் ரூ. 147 கோடி மட்டுமே!
ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சிகளில் 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் அமைந்த ஒன்றிய பாஜக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் 1 அசாமிஸ், 2 பெங்காலி, 3. குஜராத்தி, 4. ஹிந்தி, 5. கன்னடம், 6. காஷ் மீரி, 7. கொங்கணி, 8. மலையாளம், 9. மணிப்பூரி, 10. மராத்தி, 11 நேபாளி, 12. ஒரியா, 13. பஞ்சாபி, 14. சமஸ்கிருதம், 15.சிந்தி, 16. தமிழ், 17. தெலுங்கு, 18. உருது, 19. போடோ, 20. சந் தாலி, 21 மைதிலி, 22 டோக்ரி என மொத்தம் 22 மொழிகள், அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக இடம் பெற்றுள்ள நிலையில், ஹிந்தி, சமஸ்கிருத வளர்ச் சிக்கு மட்டுமே பல ஆயிரம் கோடி ரூபாய்களை அள்ளிக் கொட்டி வருகிறது. ஏனைய மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களின் குற்றச் சாட்டை முன்வைத்து வந்தா லும், நரேந்திர மோடி அரசு தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதாக இல்லை.
இந்நிலையில்தான், கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ. 2,533 கோடியும், தமிழ். தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியாவிற்கு சேர்ந்து வெறும் ரூ.147 கோடியும் மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
செம்மொழிகளான தமிழ், சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 2022ஆம் ஆண்டு கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அவருக்கு, ஒன்றிய அரசின் கல்வித்துறை இணையமைச் சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
(கோடிகளில்)
ஆண்டு தமிழ் சமஸ்கிருதம்
2014-2015 ரூ. 8.27 ரூ. 125.80
2015-2016 ரூ. 11.99 ரூ. 161.47
2016-2017 ரூ. 5.10 ரூ. 149.19
2017-2018 ரூ. 10.67 ரூ. 198.31
2018-2019 ரூ. 4.65 ரூ. 214.37
2019-2020 ரூ. 5. 9.80 ரூ. 246.99
2020-2021 ரூ. 11.73 ரூ. 192.85
2021-2022 ரூ. 12 ரூ. 198.83
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த கடந்த கல்வியாண்டு 2014-2015 முதல் 2021-2022 கல்வியாண்டு வரை மத்திய செம் மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கும், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கும் ஒதுக்கிய நிதி விவரங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில், கடந்த 2014 ஆண்டு முதல் மத்திய செம் மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசு ரூ. 74.1 கோடி மட் டுமே நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதும், அதேநேரத்தில், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு ரூ.1487.9 கோடியை வாரிக் கொடுத்திருப்பதும் அம்பலமாகியது. இப்படி 2024-25 வரை நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை அண்மையில் வெளிவந்த ஆர்.டி.அய். தகவல் உறுதிப்படுத்தியது.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய ஒட்டு மொத்தத் தொகையானது, சமஸ்கிருத வளர்ச்சிக்கு மோடி அரசு ஓராண்டில் ஒதுக்கிய நிதியை விட குறைவாகும். குறிப்பாக 2019-2020இல் தமிழ் வளர்ச்சிக்காக மோடி அரசு ஒதுக்கியது வெறும் ரூ.10 கோடி ஆனால், அதே ஆண்டில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ. 247 கோடி தூக்கிக் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் அதிகாரப் பூர்வக் கணக்கெடுப்பின்படி 6 கோடியே 90 லட்சத்து 26 ஆயிரத்து 881 பேர் தமிழ் மொழி பேசுவோராக உள்ளனர். இது 11 ஆண்டுகளுக்கு முந்தைய 2011ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பு ஆகும். தற் போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக் கும். இந்தியா தவிர உலகம் முழுவதும் 30 நாடுகளில் தமிழ்பேசும் மக்கள் உள்ளனர்.
ஆனால், அதே 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் சமஸ்கிரு தம் பேசுவோர் எண்ணிக்கை லட்சத்தில் கூட இல்லை. 24 ஆயிரத்து 821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவோராக உள்ளனர்.
இவ்வாறு நடை முறையில் பேசப்படாத சாஸ்திர சடங்குகள் தவிர வேறெங்கும் புழக்கத்தில் இல்லாத ஒரு மொழிக்கு, பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து சுமார் 2533 கோடி ரூபாயை மோடி அரசு கொட்டி அழுதுள்ளது.
இது நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. மோடி அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்களும் எழுந்துள்ளன.
வெட்டிச் சம்பளம்
தேஜ்நாராயணன் டண்டன் என்பவர் உ.பி. மாநிலம் லக்னோ நகரைச் சேர்ந்தவர். அவர் ஹிந்தி மொழியில் “ஜெய கிருஷ்ணா ஜெய கன்யாகுமரி” என்ற ஒரு பயண நூலை 1980களில் எழுதியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தைப் பற்றிய ஒரு சுவையான தகவலைத் தந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் நரசிம்மாச்சாரி என்பவர் இவரிடம் சொன்ன தகவல்தான்
“இங்கே சமஸ்கிருத மொழிப் பிரிவு இருக்கிறது, அதற்கு ஒரு பேராசிரியரும் உள்ளார். 11 ரீடர்கள் உள்பட 12 ஆசிரியர்கள் உள்ளனர். பேராசிரியருக்கு மாத ஊதி யம் ரூ.1200 (1982 ஆம் ஆண்டைய நிலவரம் இது) ரீடருக்கு மாத ஊதியம் ரூ.900. ஆக, மாதம் ஒன்றுக்கு மட்டும் சமஸ்கிருதத் துறையில் பணிபுரிவோருக்குச் சம்பளம் ரூ.11,100. ஒருமுறை சமஸ்கிருதத்தைப் படிக்க ஒரு மாணவன்கூட வரவில்லை. 12 ஆசிரியர்களும் வேலையில்லாமல் முதல் தேதி வந்ததும் சம்பளத்தை மட்டும் தவறாமல் பெற்றுக் கொண்டு வந்தனர்.
மனச்சான்று கொஞ்சம் உறுத்த, துணைவேந்தரிடம் சென்று “நாங்கள் வேலை ஏதுமின்றி வெறுமனே பொழுது போக்கிக் கொண்டிருக்கிறோமே – மாணவரும் ஒருவர்கூட கிடையாது – நாங்கள் என்ன செய்யட்டும்?” என்று குறைபட்டுக் கொண்டனர்.
துணைவேந்தர், அவர்களுக்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா?
”உங்களுக்கெல்லாம் முழுச் சம்பளம் முதல் தேதி யன்று கிடைத்து விடுகிறது அல்லவா! பிறகு என்ன குறை? வேண்டுமானால், பல்கலைக் கழகத்தில் உள்ள பெரிய சமஸ்கிருத நூலகத்திற்குச் சென்று ஏதாவது படித்துக் கொண்டு இருங்கள்” என்று அறிவுரை வழங்கினாராம்.
எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? இதுதான் சமஸ் கிருதப் படிப்பின் நிலை. வேறு ஒரு துறை இப்படி இருந்தால், சும்மா இருப்பார்களா? ஆங்கில ஏடுகளில் எத்தனை ஆசிரியர் கடிதங்கள் இடம்பெற்று ‘கிழிகிழி’ என்று கிழித்திருப்பார்கள்!
தெய்வ மொழியாயிற்றே… அதையெல்லாம் கண்டு கொள்ளலாமா? இந்திய அளவில் சமஸ்கிருதம் தெரிந்தோர் 0.01 சதவிகிதம்தான். அதுவும் தெரிந்தோர்தான் – பேசுவோர் என்றும் கூற முடியாது.
கோடிக் கணக்கில் சமஸ்கிருதத்திற்குப் பணத்தைக் கொட்டியழ பிஜேபி. அரசு துடிப்பது ஏன் தெரியுமா? இந்தத் திண்ணைத் தூங்கிப் பேர்வழிகளை ஊட்டி வளர்க்கத்தான்!
ஆண்டு வாரியாகப் பார்ப்போமா?
2014-ஆம் ஆண்டு மே மாதம் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது
ஜூன் 2014
ரயில்வே துறை சார்பில் கொடுத்த விளம்பரம் தமிழகத்தில் கூட ஹிந்தியில் வெளியானது. (முன்பு ரெயில்வே துறை சார்ந்த விளம்பரங்கள் ஆங்கிலம் மற்றும் தென்னக ரயில்வே சார்பில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும்.
ஜூலை 2014
ஆகஸ்டு முதல்வாரம் அனைத்து ஒன்றிய அரசுப் பள்ளிக்கூடங்களிலும் ஹிந்தி வாரம் கொண்டாடப்படும் என்று ஸ்மிருதி இரானி சுற்றறிக்கை விட்டார். இதை தமிழ் நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகளும் எதிர்த்தன.
ஆகஸ்ட் 2014
சுதந்திர தின உரை குறித்த விவரம் இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஹிந்தியிலேயே வெளியிடப்படுகிறது முன் பிரதமர்கள் பேசும் சுதந்திர தின உரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் முழுமையாக இருக்கும். ஆனால் 2014-ஆம் ஆண்டு மோடி பேசிய சுதந்திர தின உரை முழுக்க முழுக்க இந்தியில் இருந்தது (பாஜகவைச் சேர்ந்த சிலர் அதை ஆங்கிலத்தில் சுருக்க மாக மொழிபெயர்த்து வெளியிட்டனர்).
செப்டம்பர் 2014
தூய்மை இந்தியா குறித்த விளம்பரங்கள் இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியிலேயே வெளியிடப்பட்டன.
பாஜக ஆட்சிக்கு வந்த உடன் மத்திய தொழிலாளர் நலத்துறை சார்பில் அனுப்பி யுள்ள சுற்றறிக் கையில் மத்திய அரசின் முக்கிய தீர்மானங்கள், அரசாணைகள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய அறிக்கைகள், அலுவலக ஒப்பந்தங்கள், உரிமங்கள், ஏல ஒப்பந்தப் புள்ளிக் கோரல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் ஹிந்தியில் வெளியிடு வதை மண்டலத் தலைமை அதிகாரிகள் உறுதிப் படுத்த வேண்டும். அரசு அலுவல கங்களுக்கு வரும் கடிதங்களுக்குக் கட்டாயம் ஹிந்தி மொழியில்தான் பதில் அனுப்ப வேண்டும். அதிகாரிகளின் பணிக் கால ஆவணங்கள் அனைத்தும் ஹிந்தி மொழியிலேயே இருக்க வேண்டும் அலுவலக செய்திக்குறிப்பின் விவரங்கள் அனைத்தும் ஹிந்தி மொழியில் இந்தி பேசாத மாநிலங்களில் உயரதிகாரிகள் இந்தி கற்றுக் கொள்ள சிறப்பு வகுப்புகள் துவங்கப்படும். ரயில்வே உள்ளிட்ட இதர துறைகளுக்கும் ஹிந்தி கற்றறிக்கை அனுப்பப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்பட ஆவன செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 2014
கான்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உள்துறை அ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹிந்தி பற்றி பேசியபோது தெரிவித்த கருத்து ‘இனி அரசு விழாக்கள் ஹிந்திமொழியிலேயே இருக்கவேண்டும். ஆங்கிலம் நமக்கு அடிமைகளால் கட்டாயமா கத் தினிக்கப்பட்ட மொழி ஆகும். ஆகவே இனி இந்தியாவில் ஹிந்தி முதல்மொழியாக இருக்க வேண்டும்” என்று கூறினார். இதற்கு கலைஞர், மம்தா பேனர்ஜி, சித்தாரமய்யா போன் றோர் கடுமையாக எதிர்ப்பு தெரி வித்தனர். இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் இது உள் துறை அமைச்சரின் பேச்சுச் சுதந் திரம்; அவரின் இந்த கருத்துக்கும் ஒன்றி அரசுக்கும் தொடர்பில்லை என்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
நவம்பர் 2014
ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் ஸ்மிருதி இரானியை நவம்பர் 29-ஆம் தேதி சந்தித்து சமஸ்கிருதம் பள்ளிப்பாடங்களில் டிசம்பர் 5) ஒன்றிய அரசுப் பள்ளிகளில் கேந்திர வித்யாலயாவில் மூன்றாவது மொழியான ஜெர்மன் மொழியை எடுத்து விட்டு அதற்கு பதிலாக சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மாதிரி வகுப்புகள் உடனடியாக துவங்க உத்தவிட்டு அதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.
டிசம்பர் 24 ஆம் தேதி கீதா பிரோனா மகோத்சவம் என்ற நிகழ்ச்சியில் பேசிய சுஷ்மா சுவராஜ் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும், சமஸ்கிருதத்தை இந்தி யாவின் பொது மொழியாக பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்.
– வளரும்