அத்தி: அபசகுனமல்ல – அதிசய (குண) மருத்துவம்-பாணன்

3 Min Read

இந்தியா முழுவதும் வெப்பமண்டலப் பகுதிகளில் வளரும் மரம் அத்தி. இதன் வேர் முதல் கொழுந்துவரை, பூ முதல் பழம் வரை அனைத்துமே மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் (Cluster Fig/Gular Fig) பல ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ குணங் களையும் கொண்டுள்ளது.

அத்திப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தை சீராக இயங்கச் செய்து, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.  இதில் கணிசமான அளவு இரும்புச்சத்து இருப்பதால், இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை (Anemia) வராமல் தடுக்க உதவுகிறது.

இந்தியா, ஞாயிறு மலர்

அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.  பாரம்பரிய மருத்துவத்தில், அத்திப்பழத்தின் இலைகள் மற்றும் பழங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப் படுகின்றன. இது நீரிழிவு நோயாளி களுக்கு ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.

இளமையுடன் இருக்கலாம்

இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் (anti oxidants) சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கவும், இளமையுடன் இருக்கவும் உதவுகிறது. இதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இருப்பதால், எலும்புகளின் ஆரோக்கி யத்திற்கும், வலுவிற்கும் இது மிகவும் அவசியமானது.

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் இருப்பதால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பொதுவாக, 100 கிராம் உலர்ந்த அத்திப்பழத்தில் சுமார் 2.0 முதல் 3.0 மில்லிகிராம் வரை இரும்புச்சத்து இருக்கும். இருப்பினும், புதிய பழங்களைவிட உலர்ந்த அத்திப் பழத்தில் இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிக செறிவாகக் காணப்படும்.

ஆயிரக்கணக்கில் அழிக்கப்படும
அத்தி மரங்கள்

உத்தரப் பிரதேசத்தில் அபசகுனம் என்று வெட்டப்படும் அத்திமரங்களின் எண்ணிக்கை குறித்த சரியான தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால், 2017ஆம் ஆண்டில், கான்வர் யாத்திரை செல்லும் பக்தர் களால் அசுபமாக (inauspicious) கருதப் படும் அத்திமரங்களை (gular fig trees) வெட்டுமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதாகச் செய்திகள் வெளியாகின.

உத்தரப் பிரதேசத்தில் சில தகவல்கள்படி 2024ஆம் ஆண்டு 7,000 அத்திமரங்கள் வெட்டப்பட்டதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) அறிக்கையில் குறிப்பு எதுவும் இல்லை.

இருப்பினும், காவடியாத்திரை (Kanwar Yatra) பாதை அமைப்பதற்காக 17,600 மரங்கள் வெட்டப்பட்டதாக ஒரு குழு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த வெட்டப்பட்ட மரங்களில் அத்திமரங்கள் தனியாகக் குறிப்பிடப்படவில்லை.

காவடியாத்திரை பாதை: காசியாபாத், மீரட் மற்றும் முசாபர் நகர் ஆகிய மாவட்டங்களில் 111 கிலோமீட்டர் நீளமுள்ள காவடியாத்திரை சாலை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப் பட்டுள்ளன.

வெட்டப்பட்ட
மரங்களின் எண்ணிக்கை

உத்தரப் பிரதேச அரசு சமர்ப்பித்த அறிக்கையின்படி,  2024 ஆம் ஆண்டு மட்டும் 17,607 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

சிவனுக்குப் பிடிக்காத மரம்

மாநிலம் முழுவதும் சாலை களில் நிழல்தரும் இந்த மரங்களை அபசகுனம் என்று கருதி சாமியார் அரசு 1,12,722 மரங்களை வெட்ட அனுமதி கேட்டது. ஆனால், வனத்துறை 33,776 மரங்களை மட்டுமே வெட்ட அனுமதி கொடுத்தது.  இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை சுமார் 3 லட்சம் அத்தி மரங்கள் சிவனுக்கு பிடிக்காத மரம் என்று கூறி வெட்டி உள்ளனர்.

ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்கிறார்கள்

சிவனுக்கு பிடிக்காத மரம் அத்திமரம் என்று கூறி சிறு நகரத்தின் அளவு அடர்த்தியான அத்தி மரங்களை லட்சக் கணக்கில் வெட்டித் தள்ளுகின்றனர்.

ஆனால், சென்னையில் தியாகராயர் நகர் காசி விஸ்வநாதர் சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு முன்னால் காஞ்சி சங்கரமடத்தின் முன்பு மிகப் பெரிய அத்திமரம் உள்ளது. அன்றாடம் சாலையில் அதிக அளவு அத்திப் பழங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

கோவிலுக்கும் சங்கரமடத்திற்கும் சென்று வருபவர்கள் அனைவரும் அத்திமரத்தில் நிழலில் நின்றுவிட்டுத்தான் செல்கிறார்கள்.

ஆனால், இது எல்லாம் அபசகுனம் இல்லையா?

அல்லது இங்குள்ள சாமிகளைக் கும்பிடுபவர்கள் ஹிந்து இல்லையா?

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *