ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியான பாலேஷ் தன்கர் (43) பாஜகவின் வெளிநாடு வாழ் இந்தியர்களின் தலைவராகவும், இந்து மத ஆணையத்தின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். ஏபிசி, பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ, டொயோட்டா மற்றும் சிட்னி ரயில்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய பாலேஷ் தன்கர் சொந்தமாக ஒரு நிறுவனம் வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு சிட்னியிலுள்ள தனது தொழில் நிறுவனத்தில் பாலேஷ் தன்கர் வேலை தேடிவந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிட்னி காவல்துறை பாலேஷ் தன்கர் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில் மயக்க மருந்துகள் மற்றும் கடிகாரத்தினுள் மறைத்து வைக்கப்பட்ட படக்கருவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பாலேஷ் தன்கர் குற்றவாளி
படக்கருவியில் 5 தென் கொரியாவைச் சேர்ந்த பெண்களை பாலேஷ் தன்கர் பாலியல் வன்கொடுமை செய்த காட்சிப் பதிவும் பதிவாகி இருந்தது. இதனையடுத்து பாலேஷ் தன்கர் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு இருந்த வழக்குகள் மற்றும் பாலியல் வழக்குகள் அனைத்தும் சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. 13 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 39 குற்றங்களில் பாலேஷ் தன்கர் குற்றவாளி என மாவட்ட நீதிமன்ற நீதிபதி மைக்கேல் கிங் தீர்ப்பு வழங்கினார்.
திட்டமிடப்பட்ட வன்கொடுமை
இந்த வழக்கின் தீர்ப்பில், “பெண்களை பாலேஷ் தன்கர் பாலியல் வன்கொடுமை செய்யவே முன்னேற்பாடாக வேலை தருவதாக தனது நிறுவனத்திற்கு அழைத்துள்ளார். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை துல்லியமாக திட்டமிடப்பட்டது மற்றும் மிகவும் கொடூரமானதுமாகும். குறிப்பாக இளம் பெண்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட கொடூரமான நடத்தையின் தொடர்ச்சியாகும். இதனால் பாலேஷ் தன்கருக்கு 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படு கிறது. 2053 வரை 30 ஆண்டுகளுக்கு அவருக்கு பரோல் வழங்கப்பட முடியாதபடி தீர்ப்பில் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது” என மாவட்ட நீதிமன்ற நீதிபதி மைக்கேல் கிங் உத்தரவிட்டார். தன்கரின் 40 ஆண்டுகள் முழு தண்டனையும் முடிந்தபோது அவருக்கு 83 வயது இருக்கும்.
பெண்கள் என்றால் போகப் பொருள் என்று கருதும் கேடு கெட்ட மனப்பான்மை – இங்கு அங்கின்றி உலகம் முழுவதும் இறுக வேரூன்றியுள்ளது.
பெண்கள் என்றால் உடல் அளவில் பலகீனமானவர்கள் என்ற எண்ணக் கொழுப்பு சமுதாயத்தில் நிலவி வருகிறது.
தங்கள் சதை வலிமையால் (Muscle Power) பெண்களை அடக்கியாளலாம் என்ற ஆணவத் திமிர் ஆண்களிடம் இருப்பது ஒழிக்கப்பட வேண்டும்.
மரண தண்டனை
ஆஸ்திரேலியாவில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் (30 ஆண்டுகளுக்கு பிணையில் வெளிவர முடியாத) தண்டனையை நீதிமன்றம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
நம் ‘திராவிட மாடல்’ அரசும் மரண தண்டனை விதிக்கப்படும் என்று சட்டம் செய்திருக்கிறது.
பெண்களே, கல்வியோடு உடல் வலிமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். நான்கு இடத்தில் ஆண் காம வெறியர்கள் பெண்களால் தாக்கப்பட்டு ஓடினர் என்ற செய்தி வந்தாலே போதும் – இந்த ஆண் வலிமையானவன் என்ற அயோக்கியத்தனமான கொட்டம் ஒடுங்கி விடும்! வீராங்கனைகள் என்பது வெறும் வார்த்தைகளில் மட்டும் இருந்து பயனில்லை.
புள்ளிவிவரம் கூறுவது என்ன?
ஒரு நாளைக்கு சராசரியாக 86 பாலியல் வன்கலவி வழக்குகள் இந்தியாவில் பதிவாவதாக 2021ஆம் ஆண்டின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரம் குறிக்கிறது. அதாவது 17 நிமிடங்களுக்கு ஒன்று. அந்த ஆண்டில் மட்டும் 31,677 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் வன்கொடுமைகளில் 71 சதவீதம் முதல் 90 சதவீதம் கொடுமைகள் மூடி மறைக்கப்பட்டு வருவதாக அவ் ஆவணக் காப்பகத்தின் அறிக்கைகள் கூறுகின்றன. அவற்றைக் கணக்கிட்டால் ஒரு நாளுக்கு 300 முதல் 940 வரை பாலியல் வன்கொடுமைகள் நடக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேற்சொன்ன கணக்கு ‘ரேப்’ எனப்படும் பாலியல் வன்கொடுமைக்கு மட்டுமே!
பெண்கள் மீதான பிற குற்றங்களின் (பாலியல் வன்கொடுமை, வரதட்சணை, ஆசிட் வீச்சுகள், கடத்தல், பாலியல் சீண்டல், தொல்லை, குடும்ப வன்முறை, அடிமை ஆக்குதல்) எண்ணிக்கையில் ஒரு மணி நேரத்துக்கு 49 வழக்குகள் (பதிவானவை மட்டும்).
பெண்கள் பதுமை, அடுப்படிப் பணியாளர்களா?
இப்படி பெண்களின் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு அடிப்படையாக இருப்பது, பண்பாட்டு, மத ரீதியாகப் பெண்களைப் போகப் பொருளாகவும், வீட்டு அடிமையாகவும், கருதும் மனப்போக்கே ஆகும். பெண்களுக்குக் கல்வியும், பொருளாதாரச் சுதந்திரமும் வழங்கப்படாமல், அவர்களைப் பதுமைகளாகவும், அடுப்படிப் பணியாளர்களாகவும் பழக்கப்படுத்தியிருக்கும் சமூகச் சூழல்தான். வெளிப்படையாக எதையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலைத் தடுக்கிறது.
வரதட்சணைக் கொடுமையில் தற்கொலை உள்ளிட்ட பல்வேறு செய்திகள் அன்றாடம் ஊடகங்களில் வருகின்றன. அவற்றுக்கான தீர்வை நோக்கி நகர்வது அவசியம். உலகம் முழுவதும் இத்தகைய கொடுமைகள் நடப்பதுண்டு. அவற்றுக்கு வழங்கப்படும் தண்டனைகள் கடுமையானவை. ஆஸ்திரேலியாவில் கடந்த மார்ச் மாதம் வெளிவந்த மேற்கண்ட ஒரு தீர்ப்பே இதற்கு ஒரு சான்றாகும்.