டில்லி, ஆக.8 அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகள் மற்றும் அதற்கு தண்டனை பெற்றுத் தருவதற்கான செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோட்டீஸ்வர் சிங், சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது. சட்டத்துக்கு உட்பட்டு அமலாக்கத்துறை செயல்பட வேண்டும். அமலாக்கத் துறையின் 5,000க்கும் மேற்பட்ட வழக்குகளில் 10க்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை தனது விசாரணையை மேம்படுத்த வேண்டும். குற்றவாளி என ஒருவர் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், வழக்கு விசாரணையே நடத்தாமல் ஆண்டுக்கணக்கில் அந்நபரை சிறையில் வைப்பதில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளீர்கள். மக்களின் சுதந்திரம் மிகவும் முக்கியமானது. 5, 6 ஆண்டு சிறையில் இருந்த பின், விடுதலை செய்தால் அவரது இழப்பை யார் சரிகட்டுவது?. சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு
வியட்நாம் நாட்டுடன் போட்டியிடுவதாக அமெரிக்க பொருளாதார வல்லுநர் பாராட்டு
வாசிங்டன், ஆக.8 தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வியட்நாம் நாட்டுடன் போட்டியிடுவதாக அமெரிக்க பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் ரோசோ பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்க பொருளாதார வல்லுநரும் சிஎஸ்அய்எஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவருமான ரிச்சர்ட் ரோசோ ப்ளூம்பர்க் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு தொழிற் வளர்ச்சியில் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் முதலீட்டு மழைப் பொழிவதாகவும் இந்த ஆண்டு மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கான முதலீட்டு உறுதிமொழிகளை பெற்றுள்ளதாகவும் கூறினார்.
இதற்கு தமிழ்நாடு அரசின் அணுகுமுறையே காரணம் என்றும் தெரிவித்த ரிச்சர்ட் ரோசோ, தொழில் வளர்ச்சி பரவல் அதிகம் உள்ள மாநிலமாகவும் இந்தியாவின் கார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி அதிகம் உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்வதாக பாராட்டினார். முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதா அல்லது வியட்நாமில் முதலீடு செய்வதா என்று ஒப்பிட்டு பார்ப்பதாகவும், குஜராத், மராட்டியம் மட்டுமின்றி வியட்நாமுடன் போட்டியிடும் அளவிற்கு தமிழ்நாடு திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.
கோயில் சாமி என்ன செய்கிறதாம்?
உண்டியலை உடைத்து
ஒரு லட்ச ரூபாய் கொள்ளை
விழுப்புரம், ஆக.8- விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருநாரீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று (7.8.2025) காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு பூசாரி வந்த போது கோவில் வளாகத்தில் உள்ள இரும்பினால் ஆன உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கண்டமங்கலம் காவல்துறை அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் வசூலான பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.