பெரியாரும், பேரறிஞரும்
தமிழினத்திற்கு தந்த நெருப்பு – கலைஞர்
– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு
மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று. இந்நிலையில், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்திற்கு தந்த நெருப்பு – கலைஞர் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கலைஞரின் ஒளியில், எல்லோர்க்கும் எல்லாம், எதிலும் தமிழ்நாடு முதலிடம் எனும் இலக்கை நோக்கி வெற்றிப் பாதையில் நடைபோடுவோம் எனவும் உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.
4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேருக்கு வேலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
கடந்த 4 ஆண்டுகளில் அரசு, தனியார்கள் மூலமாக 6,41,664 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களுடன் மேற்கொண்ட 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.10.63 லட்சம் கோடிகள் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் அரசின் 2ஆவது ஆட்சியிலும் இன்னும் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இ.பி.எசுக்கு சவால் விட்ட பெ.சண்முகம்
அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ரெய்டுக்கு பயந்து பா.ஜ.க.வுடன் இ.பி.எஸ். கூட்டு சேர்ந்துள்ளதாக பெ.சண்முகம் சாடியுள்ளார். தேர்தலில் சீட்டுக்காக மக்களின் பிரச்சினைகளுக்கு கம்யூனிஸ்ட்டுகள் திமுகவுக்கு எதிராக போராட தயங்குவதாக இ.பி.எஸ். விமர்சித்திருந்தார். இதனிடையே, நீங்கள் மக்களுக்கான பிரச்னையில் எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளீர்கள் என்ற பட்டியலை வெளியிடத் தயாரா? என இ.பி.எஸ்.க்கு சண்முகம் சவால் விடுத்துள்ளார்.
மோடியின் பலவீனத்தால்
அமெரிக்கா மிரட்டல் : ராகுல்
அமெரிக்காவில் இந்தியப் பொருள்களுக்கு 50% வரி என்பது நியாயமற்ற ஒன்று என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்குள் தள்ளும் முயற்சி எனக் கூறியுள்ள அவர், பிரதமர் மோடியின் பலவீனம் இந்திய மக்களின் நலன்களை விட மேலோங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை மறைமுக விமர்சித்துள்ளார்.
டிரம்ப் வரிவிதிப்பு
எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?
டிரம்ப்பின் 50% வரிவிதிப்பால் கெமிக்கல், தோல், காலணிகள், ஜவுளி, நகை போன்ற உள்நாட்டு ஏற்றுமதி துறைகள் கடுமையாக பாதிக்கப்படும். கரிம வேதிப்பொருள்கள் 54%, கம்பளங்கள் 52%, பின்னப்பட்ட ஆடைகள் 63.9%, மரச்சாமான்கள் 52.3%, நகைகளுக்கு 52.1% வரியை இந்திய ஏற்றுமதியாளர்கள் செலுத்த நேரிடும். அதேவேளையில், கூடுதல் ஏற்றுமதி வரியை ஈடுசெய்ய, அமெரிக்காவில் இவற்றின் விலைகளை உயர்த்த நேரிடும்.
டிரம்ப் மிரட்டலுக்கிடையே
இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்
இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. டில்லியில் நேற்று (6.8.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் அலுமினியம், ரயில்வே, சுரங்கம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளன. இதன்மூலம், அமெரிக்காவின் எச்சரிக்கையை இந்தியா கண்டுகொள்ளவில்லை என தெரியவருகிறது.
மாணவர்களுக்கு இ-மெயில் உருவாக்கித் தர ஆணை
9 முதல் 12 வரை உள்ள மாணவர்களுக்கு இ-மெயில் உருவாக்கித் தர தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் சான்றிதழ் படிப்புகள், போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல் என அனைத்து செயல்பாடுகளுக்கும் இ-மெயில் தேவைப்படுகிறது. அதனால் மாணவர்களுக்கு இ-மெயில் உருவாக்கி, அந்த முகவரியை ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவு செய்யவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது? ஜவாஹிருல்லா கேள்வி!
ராகுல் காந்தியின் கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது? என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையமும் இணைந்து மிகப்பெரிய தேர்தல் மோசடி செய்துள்ளதாக நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியி ருப்பதோடு அதனை அம்பலப்படுத்தியும் இருக்கிறார். பெங்களூரு மத்தியத் தொகுதியில் ஒரு லட்சத்து 250 போலி வாக்குகளை உருவாக்கி வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்திருப்பதைப் புறம் தள்ள முடியாது.