வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

2 Min Read

மும்பை, ஆக.8 ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்ற மில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித் துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: பருவ மழைப் பொழிவு மற்றும் நெருங்கி வரும் விழாக் காலங்கள் பொருளாதாரத்துக்கு சாதகமாக இருந்தாலும் உலகளாவிய வர்த்தக சவால்கள் தொடர்ந்து நீடிக்கும் நிலை உள்ளது. நடுத்தர கால அளவில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படைகள் பிரகாசமான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.

2025-ஆம் ஆண்டில் ரெப்போ வட்டி விகிதங் களில் 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மாற்றமில்லாமல் 5.5% என்ற அளவில் வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைப் பொறுத்தவரையில் 4 சதவீதத்துக்கும் மேல் உயர வாய்ப்புள்ளது. அதேநேரம் 2025-2026 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மதிப்பீடு மாற்றமின்றி 6.5 சதவீதமாகவே நீடிக்கும். சவாலான வெளிப்புற காரணிகள் இருந்தபோதிலும், இந்தியப் பொருளாதாரம் உறுதித்தன்மையுடன் நிலையான வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம்

தமிழ்நாடு அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை 13ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

உச்சநீதிமன்றம் ஆணை

புதுடில்லி, ஆக.8- பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததையடுத்து, துணைவேந்தர்கள் நியமன சட்டத்தை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி நெல்லையை சேர்ந்த வழக்குரைஞர் வெங்கடாசலபதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து கடந்த மே மாதம் 21-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்குரைஞர் மிஷா ரோத்தகி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சூரியகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று (7.8.2025)  விசாரணைக்கு வந்தது. அப்போது யு.ஜி.சி. சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையேற்ற உச்ச நீதிமன்றம் விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *