சூரத், ஆக.7 அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு எதிரான கொள்கைகளைப் பின்பற்றும் மேனாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், குஜராத்தில் உள்ள ஒரு கோவிலில் அவரது சிலை முன் ஒருவர் விழுந்து வணங்கும் படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2020ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்தபோது, அவரது ஆதரவாளர்களால் குஜ ராத்தின் சூரத் நகரில் ‘டிரம்ப் மந்திர்’ என்ற பெயரில் அவருக்கு கோவில் கட்டப்பட்டது. தற்போது, டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கைகளால் பாதிக்கப்படும் இந்தியர்கள், தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் அந்தக் கோவிலில் இவ்வாறு செய்வதாக சமூக ஊடகங்களில் இந்தப் படம் பகிரப்பட்டு வருகிறது.
டிரம்ப் மீண்டும் அதிபராகி உள்ள நிலையில் இந்தியப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும், அமெரிக் காவில் வசிக்கும் இந்தியர்களைத் துன்புறுத்துவதாகவும் வெளிப்படை யாகப் பேசியுள்ளார். ஆனாலும், இந்திய அரசுத் தரப்பிலிருந்து இது குறித்து எந்தவிதமான அதிகாரப் பூர்வமான கருத்தும் இதுவரை வெளியிடப்படவில்லை. பிரதமர் மோடி, வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் இதுவரை வாய்திறக்க வில்லை.
இந்தச் சூழலில், டிரம்ப் கோவி லில் உள்ள டிரம்ப் சிலையின் முன்பு ஒருவர் காலில் விழுந்து வரி அதிகரிப்பை நீக்குங்கள் என்று கும்பிடும் படம் சமூக வலைதளங் களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.