நாடு சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகும் ‘கை ரிக்சா’ புழக்கத்தில் இருக்கிறதே! நீதிபதிகள் வேதனை

1 Min Read

புதுடில்லி, ஆக. 8- மகாராட்டிரா மாநிலத்தில் கை ரிக்சாவிற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராட்டிரா மாநிலம் மதேரன் என்ற சுற்றுலா நகரத்தில் கை ரிக்‌சா பயன்பாடு தற்போது நீடிக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆனபிறகும் ஒரு மனிதனை உட்கார வைத்து இன்னொரு மனிதன் இழுத்து செல்லும் கை ரிக்‌சா வண்டிகள் எப்படி அனுமதிக்க படுகிறது என்று கேள்வி எழுப்பினர். வாழ்வாதாரத்திற்காக மக்கள் இத்தகைய மனிதாபிமானமற்ற முறையை தொடரவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் இது தனிநபர்களின் கண்ணியத்தை மீறும் செயல் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாட்டில் மனித கண்ணியம் என்ற அடிப்படையான கருத்துக்கு எதிராக இந்த நடைமுறை உள்ளதாகவும் இதனை அனுமதிப்பது அரசியல் அமைப்பு உறுதி செய்துள்ள சமூகப்பொருளாதார நீதிக்கு எதிரானது என்று கூறும் நீதிபதிகள் கை ரிக்‌சா திட்டத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். உடனடியாக இந்த உத்தரவை செயல்படுத்தவேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கை ரிக்‌சா தொழிலாளர்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்றும் அவர்களின் மறுவாழ்விற்கு உடனடியாக நிதி ஒதிக்கீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவை தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் 1973 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் ஆன திமுக ஆட்சியின் போது கை ரிக்‌சா ஒழிக்கப்பட்டு அதற்கு மாற்றாக சைக்கிள் ரிக்சா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னாட்களில் மானியத்தில் ஆட்டோ வழங்கும் அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *