சுயமரியாதை இயக்கத்தை பற்றி தந்தை பெரியார் ஆற்றிய திருத்துறைப்பூண்டி மாநாட்டு உரையை கடந்த 5.8.2025 அன்று வெளியிட்டிருந்தோம். அந்த உரை பற்றிய குடிஅரசு ஏட்டில் வெளியான தலையங்கம் இது. இது மூன்றாம் நபர் போல் எழுதப்பட்டிருந்தாலும், இதுவும் தந்தை பெரியார் எழுதியது தான். இந்த தலையங்கத்தின் நடையே இதனை வெளிப்படுத்துகிறது. – ஆசிரியர்
தோழர் ஈ.வெ.ரா. திருத்துறைப்பூண்டியில் தனது நிலைமையை விளக்கிக்காட்ட செய்த உபன்யாசம் மற்றொரு புறம் பிரசுரித்திருக்கிறோம். இவ்வுபன்யாசம் சுயமரியாதை தொண்டர்களில் சிலர் செய்துவரும் விஷமப் பிரசாரத்துக்கு தக்க சமாதானமாகுமென்று நம்புகிறோம்.
தோழர் ஈ.வெ.ரா.மீது சுயமரியாதை தோழர்கள் சிலர் செய்து வரும் விஷமப் பிரசாரமெல்லாம் ஈ.வெ.ராமசாமி பொதுவுடைமைப் பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார் என்பதும், ஈ.வெ.ராமசாமி மந்திரிகளுடன் குலாவுவதுடன் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கிறார் என்பதுமேயாகும்.
பொதுவுடைமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொண்டதற்கு காரணம் முன்னமேயே கூறியிருக்கிறார்.
அதாவது அரசாங்கத்தார் பொதுவுடைமைப் பிரசாரத்தை சட்ட விரோதமானதென்று தீர்மானித்து விட்டதாலும், சுயமரியாதை இயக்கம் தனது கொள்கை களையும் திட்டங்களையும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு பிரசாரம் செய்து நிறைவேற்றிக் கொள்வதாக இருப்பதாலும் இப்போது சட்டத்தை மீறி பொதுவுடைமைப் பிரசாரம் செய்வதற்கில்லை என்று வெளிப்படையாய்த் தெரிவித்து இருக்கிறார். அதோடு கூடவே சுயமரியாதை இயக்கத்தின் வேலைத் திட்டம் இன்னது என்பதுபற்றி 10-03-1935ஆம் தேதி குடிஅரசில் விளக்கியும் இருக்கிறார். இதையே திருச்சி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டிலும் விளக்கமாக எடுத்துக்கூறி இருக்கிறார்.
பொதுவுடைமைப் பிரச்சார சம்பந்தமாக இதற்கு மேலும் சமாதானம் கூற முடியாது.
அப்படியிருக்க ஒவ்வொரு மகாநாட்டிலும் ஒரு கூட்டம் இதையே திருப்பித் திருப்பி கூச்சல் போட்டு கலகம் விளைவிக்க முயற்சிப்பது ஒரு காலமும் நல்ல எண்ணத்தின் மீது செய்யப்படும் காரியம் என்று சொல்லிவிட முடியாது.
அடுத்தபடியாக ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளுடன் குலாவுவது என்பதைப் பற்றிய புகார் வெறும் அறியாமை யால் ஏற்பட்ட கற்பனைமீது உண்டான அசூயையே தவிர, வேறு ஒன்றுமில்லை.
மந்திரிகளைப்பற்றி ஈ.வெ.ராவின் அபிப்பிராயம் குடிஅரசு படிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. மற்ற பத்திரிகைகளிலும் அவ்வப்போது வெளிவந்திருக்கின்றன. மந்திரிகள் சுயமரியாதை இயக்கத்துக்கு செய்த தீமைகள் பல ஒரு புறமிருக்க, அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியையே எதிரிகள் முயற்சி இல்லாமலேயே ஒழிக்கும் படியான வேலை செய்து வருவதைப் பற்றியும் அவ்வப்போது குறிப்பிட்டு வந்திருக்கிறார்.
ஆனால், மந்திரிகள்மீது சுமத்தப்படும் அரசியல் கொள்கைகள், வேலைகள் சம்பந்தப்பட்ட மட்டில் எதிரிகள் கூத்தைக் கண்டித்தும், பல சமயம் மந்திரிகள் கூற்றை ஈ.வெ.ரா. ஆதரித்தும் வருகிறார் என்றால் இது பார்ப்பனரல்லாதார் சமுக நலனை உத்தேசித்தே ஒழிய வேறில்லை. மற்றபடி ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பது என்பது மாத்திரம் முழுதும் உண்மை. இதை அவர் எப்போதும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்க வேண்டியது தமது கடமை என உணருவதாக சுமார் 15 வருஷமாகவே கூறி வருகிறார். அன்றியும் ஜஸ்டிஸ் கட்சி, ஏழை மக்கள், தீண்டப்படாத மக்கள், சமுக வாழ்வில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியவர்களின் கட்சி என்பதாக உணர்கிறார். அந்த உணர்ச்சி மாறுபடும் வரையில் ஜஸ்டிஸ் கட்சியை அவர் ஆதரித்துத் தான் தீர வேண்டியிருக்கும். சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டதும், அது பல கொள்கை களைக் கொண்டு இருப்பதும் ஜஸ்டிஸ் கட்சி கொள்கைக்கு உதவி செய்வதற்காகவும் தானே ஒழிய, வேறில்லை.
ஜஸ்டிஸ் கட்சியைப் பார்ப்பனரல்லாத மக்கள் பலர் சரியானபடி ஆதரிக்காததாலேயும், அக்கட்சி எந்த மக்களுக்காக பாடுபடுகின்றதோ அந்த மக்களிடம் போதிய நன்றி விஸ்வாசம் இல்லாததினாலேயும் அக்கட்சி இந்த மாதிரியாக தாழ்ந்த நிலையில் பேச வேண்டியதாக ஆகிவிட்டது. ஜஸ்டிஸ் கட்சி என்றால் மந்திரிகளும், பல பணக் காரர்களும் தான் சில மக்கள் ஞாபகத்துக்கு வருகிறதே தவிர, அதன் கொள்கைகள், அது செய்த வேலைகள் ஆகியவை அநேகருடைய ஞாபகத்துக்கு வருவதில்லை. இதன் காரணம் பாமர மக்களின் அறியாமை ஒருபுறமிருந்தாலும் மற்றும் பலருக்கு உத்தியோக ஆசையும், பணத்தாசையும், ஏமாற்றத்தால் ஏற்பட்ட பொறாமையும் தவிர வேறில்லை என்பது நமது அபிப்பிராயம்.
மந்திரிகள் பெரிய உத்தியோகக்காரர்களாயிருக்கிறார்கள். அதன் பிரமுகர்கள் பலர் பெரும் பணக்காரர்களாய் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு இந்த இரு கூட்டத் தார்களும் கட்சி விஷயத்தில் யோக்கியமாய் நடந்து கொள்ளாமல் தங்கள் சுயநலத்துக்கும், அதற்கு வேண்டிய சூழ்ச்சிக்குமே கட்சியின் பெரும்பாகத்தை பயன்படுத்திக் கொள்வதால் பலருக்குத் தானாகவே அக்கட்சியின்மீது துவேஷம் ஏற்படும்படி செய்து விடுகின்றது.
ஆனால், இவ்விரு கூட்டமும் அதாவது மந்திரி உத்தியோகமும், பணக்காரர்கள் ஆதிக்கமும் ஜஸ்டிஸ் கட்சிக்கு இன்றியமையாதது என்பதாக பலமுறை தோழர் ஈ.வெ.ரா எடுத்துக்கூறி இருக்கிறார். காரணம் பணக்காரர்கள் இல்லாவிட்டால் எலக்ஷனில் ஜெயிக்க முடியாது. ஜெயிக்காவிட்டால் அரசியல் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது. ஆதலால், இந்த இரு கூட்டமும் அவசியமானதாகிறது.
இவர்கள் நாணயமாக நடக்கவில்லை என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம். ஆனாலும், தோழர்கள் சத்தியமூர்த்தியும், கல்யாணராமய்யரும் போன்றவர்கள் எலக்ஷனில் வெற்றி பெற்று, அரசாங்க நிர்வாகத்தைக் கைப்பற்றி, ஆட்சி புரிவதை விட நாணயக் குறைவான மந்திரிகளும், சுயநலப் பணக்காரர்களும் அதிகமான கெடுதிக் காரர்களாக இருந்துவிட முடியாது என்போம்.
வெறும் பொறாமை ஒரு நன்மையையும் உண்டாக்கி விடாது. பணக்காரர்களின் இயற்கை குணம் இன்னது என்பது யாரும் அறியாததல்ல. யார் பணக்காரர்களானாலும் இப்படித்தான் இருப்பார்களே தவிர, இதற்கு மேல் யோக்கியர்களாக இருந்துவிட முடியாது. இன்று காங்கிரசிலும், முழு சமதர்மத்திலும் இந்த யோக்கியதை உடன்தான் பல பணக்காரர்கள் இருந்து வருகிறார்கள்.
ஆனால், மந்திரிகளுடைய யோக்கியதை யார் பார்த்தாலும் இப்படித்தான் இருக்க முடியுமென்று சொல்லிவிட முடியாது. தோழர்கள் டாக்டர் சுப்பராயன், முத்தையா முதலியார் ஆகியோர் மந்திரி பதவிகளானது கட்சிக்கு நன்றி விசுவாசமுள்ளதாக இருந்தது என்பதை நாம் மறைக்கவில்லை.
பெரிய அரசியல் பிரச்சினை, போட்டி, உள் கலகம், எதிரிகள் தொல்லை, அரசாங்கத்தின் ராஜதந்திரம், தங்கள் சுயநிலை ஆகியவைகளின் மத்தியில் மந்திரிகள் அரசியல் நிர்வாகம் செய்வது என்பது சுலபமான காரியம் என்று யாரும் நினைத்துவிட முடியாது. அன்றியும், மந்திரி பதவிகளுக்கு எவ்வித யோக்கியப்பொறுப்பான நிபந்தனையுமில்லாமல், லாட்டரிச் சீட்டு விழுவதுபோல் இருப்பதால் மந்திரிகளால் நாம் அடிக்கடி ஏமாற்றமடைய வேண்டியதாகவும் ஏற்பட்டு விடுவதில் அதிசயமில்லை.
எப்படி இருந்த போதிலும் ஜஸ்டிஸ் கட்சியை அனாதரவு செய்யவோ, மந்திரிகளை கவிழ்க்கவோ சுயமரியாதை இயக்கம் ஒருப்பட முடியாது என்பதுடன் அவற்றை ஆதரிக்க வேண்டியதும் முக்கிய கடமையாகும் என்பதில் நமக்கு சிறிதுகூடத் தயக்கமில்லை.
மந்திரிகளுடன் தோழர் ஈ.வெ.ராமசாமி குலாவுகிறார் என்பவர்களில் பலருக்கு உள்ள முக்கியமானதும், சிலருக்கு ஒன்றேயானதுமான காரணம் “மந்திரிகள் ஈ.வெ.ராவுக்கு பணம் கொடுக்கிறார்கள்” என்று கருதி இருப்பது என்பதாக நாம் உணருகிறோம். இதுவும் மனிதனுடைய பேராசையால் ஏற்பட்ட கற்பனையின் பொறாமையே யாகும். தோழர் ஈ.வெ.ரா இந்த 12 வருஷ காலமாக ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்து பிரசாரம் முதலியவை செய்து வருவதில் ஒரு ஒத்தை ரூபாயாவது எந்த மந்திரியிடமாவதிருந்து கட்சி வேலைக்கு என்றோ, பிரச்சாரத்துக்கு என்றோ, மற்ற எந்த காரியத்துக்காவது என்றோ கேட்கவோ, வாங்கவோ வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்ததே கிடையாது என்று உறுதியாகச் சொல்லுவோம்.
அக்கட்சியிடம் காட்டும் அபிமானமும், மந்திரிகளுக்குப் பரிந்து பேசும் தன்மையும் சாதாரண மக்களுக்கு, இந்த மாதிரி பணம் வாங்காமல் பேச முடியுமா? அல்லது மந்திரிகள் பண உதவி இல்லாமல் ஈ.வெ.ராவுக்கு இவ்வளவு பிரச்சாரம் செய்ய முடியுமா? என்றெல்லாம் தோன்றலாம். சிலருக்குத் தாங்கள் வேண்டும் போதெல்லாம் ஈ.வெ.ரா. பணம் கொடுக்காததால் கோபித்துக் கொள்ளும் காரணமும், கொடுத்தது போதாமல் அயோக்கியத்தனமாய் விஷமப் பிரசாரம் செய்வதற்கு காரணமும் தோழர் ஈ.வெ.ரா., மந்திரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு தங்களுக்கு பங்கு சரியாகக் கொடுக்கவில்லையே என்கின்ற குறைபாடே என்பதுகூட நமக்கு நன்றாய் விளங்குகிறது.
தோழர் ஈ.வெ.ரா. ஒரு சமயத்தில் வெளியிட்ட ஸ்டேட்மெண்டையே இங்கு குறிப்பிடுகிறோம். அதாவது ‘‘இயக்கத்திற்கு என்றோ வேறு என்ன காரியத்துக்கு என்றோ, நாளதுவரையில் எந்த மந்திரிகளிடமிருந்தும் மற்றும் இயக்கத் தலைவர்கள் என்பவர்களிடமிருந்தும் ஒரு காசும் வசூலித்ததில்லை’’ என்று கூறியிருக்கிறார்.
திராவிடன் பத்திரிகை நடத்தும்போது ஜஸ்டிஸ் கட்சியார் பத்திரிகை நஷ்டத்திற்கு மாதம் மாதம் கொடுப்பதாக வாக்குக் கொடுத்த ரூபாயில் ஒரு காசு கூட கொடுக்கவேயில்லை. அதனால் சுமார் 20 – 30 ஆயிரத்துக்கு மேல் வெளியாரும், ஈ.வெ.ரா.வும் கை நஷ்டப்பட வேண்டி வந்தது. அதற்காக ஆதியில் பெரும்தொகை வாக்குக் கொடுத்த சில தோழர்கள் அக்காலத்தில் திராவிடனுக்கு சுமார் 3, 4 ஆயிரம் ரூபாய் மாத்திரமே கொடுத்தார்கள். இதைத்தவிர ஒருவரும் கொடுக்கவும் இல்லை. யாரையும் அவர் கேட்கவும் இல்லை.
டிசம்பர் மாதத்தில் 10 பிரச்சாரகாரர்களைத் தயார் செய்வதற்கும், அவர்களுக்கு ஒரு மாத சாப்பாட்டிற்கும், போக்குவரவு ரயில் சார்ஜுக்குமாக விருதுநகர் தொண்டர் மகாநாட்டுத் தீர்மானப்படி தோழர் வி.வி. ராமசாமி அவர்கள் வேண்டுகோளின் மீது பொப்பிலி ராஜா 300 ரூ. அனுப்பினார்கள் 10, 13 தொண்டர்களின் 1 மாதம் போதனைக்கும், சாப்பாடு, இரயில் சார்ஜ் செலவுக்கும், இரண்டொரு இடங்களுக்கு பிரச்சாரத்திற்கு அனுப்புவதற்கும் செலவு செய்யப்பட்டது. அடுத்த மாதத்திற்கு அனுப்பும் விசயத்தில் தோழர் ஈ.வெ.ரா. அவர்களே போதனா முறை பெற்றவர்களுக்கு வேலை கொடுப்பதாய் இருந்தால் தான் மேல் கொண்டு ஒரு பேட்சுக்கு போதனா முறையளிக்கலாம், இல்லாதவரை போதனாமுறையில் பிரயோஜனமில்லை என்று எழுதி நிறுத்தி விட்டார்.
மற்றபடி கிரமமாய் கணக்குப் பார்த்தால் மந்திரிகளிடமிருந்து 100, 200 என்கின்ற கணக்கிலாவது ஈ.வெ.ரா.வுக்கு பணம் வர வேண்டியிருப்பதாயும் பல நூறு ரூபாய் ஈ.வெ.ராவுக்கு செலவாகியும் அவர்கள் சொன்ன இடத்துக்குப் போகவும், அவர்கள் கூப்பிட்டபோது செல்லவும் மற்றும் பல நூறு ரூபாய் செலவாகியும் இருக்குமே ஒழிய, ஒரு மந்திரியிடமும் பணம் வாங்கவுமில்லை, எதிர்பார்க்கவும் இல்லை. உண்மையிலேயே சில தோழர்கள் தவறுதலாய் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.
யாரிடமும் பணம் வாங்காமலும், சுயநலத்துக்கு ஒரு காரியமும் செய்து கொள்ளாமலும் இருக்கிற ஒருவன் எப்போதும், எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்பதோடு அவனுக்கு எவ்வித குறைவும் வராது என்பது தோழர் ஈ.வெ.ராவின் முடிந்த முடிவாகும்.
இந்தக் காரணத்தாலேயே அவர் யாரையும் ‘நான் சொல்லுகிறபடி கேட்டால் கேள் இல்லாவிட்டால் போ’ என்றும், ‘நான் அப்படித்தான் செய்வேன்’ என்றும் சொல்லவும் தனது கொள்கையையும், இஷ்டத்தையும் யாருக்கும் அடிமைப்படுத்தாமல் இருக்கவும் முடிந்து வருகின்றது.
இந்த இயக்கம் தோழர் ஈ.வெ.ராவுக்கு ஒரு ஜீவன் மார்க்கமோ, சுயநல லாபமோ, புகழுக்கோ என்று இல்லாமல் வெறும் பொது நல காரியத்துக்காகவே அவர் நடத்துகிறார்.
அதுவும் அவரது ஜீவன் உள்ள வரை ஒரு நேர்மையும், பொதுநலப் பயனும் உள்ள ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமே என்பதற்காகவே செய்கிறாரே ஒழிய மற்றப்படி இன்ன காரியத்தை சாதிப்பதற்காக கடவுளால் அனுப்பப் பட்டவர் என்பதற்கோ அல்லது அதைச் செய்துதான் முடிக்க வேண்டும் என்கின்ற அவதாரத் தன்மைக்கோ, வீரத்தன்மைக்கோ அவர் அவ்வேலைகளைச் செய்யவில்லை.
அன்றியும் அவர் காரிய வீரரே தவிர வெறும் கொள்கை வீரரல்ல, கொள்கை சொல்பவர்கள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள். கொள்கைகளைக் கொண்ட புத்தகங்களும் ஏராளமாய் இருக்கின்றன. சிறிது காரியமாவது செய்ய சௌகரியமாயிருந்தால் செய்துவிட்டுப் போவதுதான் மேலே ஒழிய, கொள்கைகளை மாத்திரம் சொல்லிவிட்டு ஜெயிலுக்குப் போவது மேலானதாக ஆகிவிடாது என்கின்ற கருத்தும் கொண்டவர்.
பாமர மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, பண்டித மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ,
கூட்டுத் தோழர்கள் என்ன நினைப்பார்கள் என்றோ பயந்து கஷ்டப்படுவது துணிவுடைமையாகாது. கருத்தொரு மித்தவர்களுடன் கலந்து தொண்டாற்றுவதே துணிவுடைமையும் அறிவுடைமையாகும்.
ஆகையால்தான், காரியத்தில் சாத்தியமானதையே எவ்வளவோ எதிர்ப்புக்கும், தொல்லைக்கும் இடையில் செய்ய முயற்சிக்கிறார். இதற்குப் பெயர் கோழை என்றாலும், துரோகம் என்றாலும் அவருக்குக் கவலை இல்லை.
கோழை என்பது செய்வதற்குச் சவுகரியமுள்ள காரியங்களை விட்டு ஓடுவதேயாகும்.
துரோகம் என்பது மக்களுக்குத் தொல்லை கொடுத்து விட்டுச் சுயநலத்துக்காகப் பின் வாங்குவதாகும்.
இன்று அவருக்குச் செய்வதற்குச் சவுகரியமுள்ள காரியம் எதையும் விட்டு விட்டு அவர் ஓடவில்லை.
இரண்டாவதாக, யாரிடத்திலும் எவ்வித வாக்குறுதி கொடுத்தோ கடுகளவாவது தன் சுயநலத்துக்குப் பிரதி பிரயோஜனமடைந்தோ, வேறு எந்தவித சுயநல காரியத்துக்கோ ஆசைப்பட்டு பின் வாங்கி விடவில்லை.
ஆகையால், பாமர மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, பண்டித மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, கூட்டுத் தோழர்கள் என்ன நினைப்பார்கள் என்றோ பயந்து கஷ்டப்படுவது துணிவுடைமையாகாது. கருத்தொருமித்தவர்களுடன் கலந்து தொண்டாற்றுவதே துணிவுடைமையும், அறிவுடைமையாகும். கருத்தொருமித்தவர்களே அவரது உயிர்த்தோழர்கள்; கருத்து வேறுபாடுடையவர்கள் மற்றவர்களே யாவார்கள் என்பதை கூறி இதை முடிக்கின்றோம்.
குடிஅரசு – தலையங்கம் – 29.03.1936