புதுடில்லி, ஆக.8– இந்தியாவில் சமூக, பொருளாதார, கல்வி உள்ளிட்ட அளவு கோல்களில் மிக மிக பின் தங்கியுள்ள PVTG என அழைக்கப்படும் “குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களின் தற்போதைய நிலை பற்றி திமுக துணைப் பொது செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலை வருமான கனிமொழி கருணாநிதி மக்களவையில் கேள்விகளை எழுப்பினார்.
“PVTG பழங்குடியின குழுக்களின் நலனை உறுதி செய்வதற்காக தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களின் விவரம் என்ன?
பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்கள் என்ன?
கடந்த அய்ந்து ஆண்டுகளில் இந்தத் திட்டங்களின் கீழ் மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி மற்றும் இதனால் பயன்பெற்ற பயனா ளிகளின் எண்ணிக்கை விவரங்கள் என்ன?
ஆறு PVTGகளான தோடர்கள், கோத்தர்கள், குரும்பர்கள், இருளர்கள், பணியர்கள் மற்றும் காட்டுநாயக்கர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக, இந்த நிதி ஆண்டில் மானிய உதவித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட நிதிகளின் விவரம் என்ன?
தமிழ்நாட்டில் PVTGs பழங்குடியினர் குறித்த பல நோக்கு ஆய்வுகள் செய்ய வேண்டும் என இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICSSR) அழைப்பு விடுத்துள்ள தற்கு அரசின் பதில் என்ன?
தமிழ்நாட்டில் இந்த PVTG- கள் பற்றி அரசாங்கத்தால் நடத்தப்பட்ட அடிப்படை ஆய்வுகளின் நிலை மற்றும் அதன் விளை வில் உருவாக்கப்பட்ட செயல் திட்டங்கள் என்ன?” என்று கனிமொழி கருணாநிதி எம்பி கேள்விகளை எழுப்பினார்.
இந்த கேள்விகளுக்கு ஒன்றிய அரசின் பழங்குடியினர் விவகார துறை இணை அமைச்சர் துர்கா தாஸ் உக்கே அளித்த பதில் வருமாறு:–
“18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் 75 PVTG சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக பிரதம மந்திரி ஜன ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM JANMAN) திட்டத்தை பிரதமர்2023 நவம்பர் 15 அன்று தொடங்கி வைத்தார்.
PVTG சமூக மக்களுக்குபாதுகாப்பான வீடு, சுத்தமான குடிநீர் மற்றும் கல்வி, சுகாதாரம் மற்றும் மேம்பட்ட ஊட்டச் சத்து உறுதி செய்தல், சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு, மின்சார வசதி இல்லாத வீடுகளில் மூன்று ஆண்டுகளில் மின்மயமாக்கல் மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் போன்ற அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த அடிப்படை வசதிகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் நோக்கங்கள் ஒன்றிய அரசின் 9 அமைச்சகங்களால் 11 வகையான தலையீடுகள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.
PM JANMAN திட்டத்தின்மொத்த பட்ஜெட் ரூபாய் 24,104 கோடி. இதில் ஒன்றிய அரசின் பங்கு 15, 336 கோடி ரூபாயாகவும், மற்றும் மாநில அரசுகளின் பங்கு 8768 கோடி ரூபாயாகவும் நிர்ண யிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு அமைச்சகமும் அதற்கென ஒதுக்கப்பட்ட தலையீட்டை செயல்ப டுத்துவதற்கு பொறுப்பாகும்.
இந்த திட்டத்தின் கீழ் 2023–2024 தொடங்கி தற்போதைய 2025-2026 நிதியாண்டு வரை நாடு முழுவதும் 293.77 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பன்னோக்கு மய்யங்கள், வன் தன் விகாஸ் கேந்திர கிளஸ்டர் என இரண்டு வகைகளாக இந்த நிதி செயல்படுத்தப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் மாநில அரசாங்கங்கள், யூனியன் பிரதேசங்கள் மூலமாக ஒன்றிய பழங்குடி விவகார அமைச்சகம், கிராமங்கள் மற்றும் குடியிருப்பு களில் வசிக்கும் PVTGமக்கள்தொகை புள்ளிவிவரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றி மதிப்பிடுவதற்கு, PM Gati Shakti மொபைல் பயன்பாடு மூலம் குடியிருப்பு அளவிலான தரவு சேகரிப்பு பயிற்சியை மேற்கொண்டுள்ளது.
மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களால் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் 47 லட்சத்து 50 ஆயிரத்து 126 PVTG மக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் 3,65,473 PVTG மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பழங்குடியினர் விவகார அமைச்சகம் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பழங்குடி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக “ஏக்லவ்யாமாதிரி குடியிருப்புப் பள்ளி (EMRS)” என்ற முதன்மைத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. EMRS களில் ஒவ்வொன்றிலும் 5% இடங்கள் PVTGமாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தேசிய ஃபெல்லோஷிப் திட்டத்தில், 750 இடங்களில் 25 இடங்கள் PVTG மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.எஸ்டி மாணவர்களுக்கான தேசிய வெளிநாட்டு உதவித் தொகையின் கீழ், 20 இடங்களில் 3 இடங்கள் PVTG மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த அய்ந்து ஆண்டுகளிலும் நடப்பு நிதியாண்டிலும் “பட்டியல் பழங்குடியினரின் நலனுக்காகப் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு மானிய உதவி” திட்டங் களின் கீழ் நிதி விடுவிக்கப் பட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில் 2020-2021 நிதியாண்டில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய், 2021-2022 நிதி ஆண்டில் 2.75 கோடி ரூபாய், 2022–2023 நிதி ஆண்டில் 2.5 கோடி ரூபாய், 2023-2024 நிதி ஆண்டில் 3.77 கோடி ரூபாய், 2024–2025 நிதி ஆண்டில் 1.89 கோடி ரூபாய், இந்த 2025-2026 நிதி ஆண்டில் இது வரை 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (ICSSR) தெரிவித்தபடி, தமிழ்நாட்டில் PVTG சமூகங்கள் தொடர்பான 4 முக்கிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று ஒன்றிய அமைச்சர் பதில் அளித்து உள்ளார்.