கருநாடகாவில் ஒரே சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் சேர்ப்பு

8 Min Read

ராகுல் காந்தி சொன்ன அணுகுண்டு இதுதான்!
தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பா.ஜ.க. முறைகேடு

ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல் காந்தி

புதுடில்லி, ஆக.8 வாக்குத் திருட்டு தொடர்பான ஆதாரங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று (7.8.2025) வெளியிட்டார். அதில் ஒரே தொகுதியில் ஒரு லட்சம் போலி வாக்காளர்களைச் சேர்த்து இருப்ப தாகவும், ஒரு அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் இருப்பதும், ஒரு வாக்காளருக்கு 4 வாக்குச்சாவடியில் ஓட்டு இருக்கும் ஆதா ரத்தையும் ராகுல்காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப் பட்டுள்ளன. இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கி வரு கின்றன.

போலி முகவரியில் 40,009 வாக்காளர்கள்

இந்தியா
* வாக்காளர் பட்டியலில் உள்ளது போல் முகவரி இல்லை
* சில வாக்காளர்களுக்கு முகவரிக்கு பதில் 0,-,#, இன்னும் சில அடையாளக்குறிகள் இடம் பெற்று இருந்தன.
* வாக்காளர்கள் முகவரி சரிபார்க்கப்பட வில்லை. ஒரே தொகுதியில் 1,00,250 ஓட்டுகள் திருட்டு 5 வகையான ஓட்டு திருட்டு
* போலி வாக்காளர்கள் 11,965
* போலி, தவறான முகவரி 40,009
* ஒரே முகவரியில் வாக்காளர்கள் 10,452
* நிழற்படம் இல்லாத வாக்காளர்கள் 4,132
* படிவம் 6 அய் தவறாக பயன்படுத்தியது 33,692 முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
* காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்திய ஆய்வில் மக்களவைத் தேர்தலில் கருநாடகாவில் உள்ள 28 தொகுதியில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 9 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.
* பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மகாதேவ்புரா சட்டப்பேரவைத் தொகுதி முடிவு மட்டுமே காங்கிரஸ் தோல்விக்குக் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
* இதனால் மக்களவைத் தேர்தலில் மகா தேவ்புரா சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் இவ்வளவு பெரிய முறைகேடு கண்டு பிடிக்கப்பட்டது. மிகப்பெரிய உண்மை மறைப்பு
* மின்னணு வாக்காளர் பட்டியல் தராததால் காகித அடிப்படையில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் சரிபார்க்கப்பட்டனர்.
* வாக்காளர் பட்டியலை இயந்திரங்கள் மூலம் சரிபார்க்கும் வசதியை தேர்தல் ஆணை யம் தரவில்லை.
* அதனால் 7 அடி உயரத்திற்கு வாக்காளர் பட்டியல் அச்சு எடுக்கப்பட்டு மறைக்கப்பட்டு இருந்த மிகப்பெரிய உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.
மக்களவைத் தொகுதி
* 2024 பெங்களூரு மத்தியத் தொகுதி தேர்தல் மன்சூர்அலிகான்(காங்கிரஸ்) Vs பிசி மோகன் (பா.ஜ) பதிவான வாக்குகள்
காங்கிரஸ் 6,26,208 பா.ஜ 6,58,915 வித்தியாசம் 32,707 மகாதேவ்புரா சட்டப்பேரவைத்
தொகுதி காங்கிரஸ் 1,15,586 பா.ஜ 2,29,632 வித்தியாசம் 1,14,046
* ஒரே வாக்காளருக்கு 4 இடத்தில் ஓட்டு ராகுல்காந்தி வெளியிட்ட ஆதாரத்தில் ஆதித்யா*வத்சவா என்ற வாக்காளருக்கு கரு நாடகாவில் மகாதேவ்புரா சட்டப்பேரவையில் 2 இடத்திலும், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ கிழக்கு தொகுதியில் ஒரு இடத்திலும், மகாராட்டிரா மாநிலம் ஜோகேஸ்வரி கிழக்கு தொகுதியில் ஒருஇடம் என்று 4 இடத்தில் வாக்கு இருந்த பட்டியலை ராகுல்காந்தி வெளியிட்டார்.

இந்த சூழலில் நேற்று (7.8.2025) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி தேர்தல் ஆணையம் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைத்தார்.

அதன் விவரம் வருமாறு:

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள்

பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் 2024ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான், பா.ஜ வேட்பாளர் பி.சி. மோகனிடம் 32,707 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்தத் தொகுதி உள்பட கருநாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் நாங்கள் எடுத்த கணக்குப்படி 16 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால், 9 தொகுதிகள் மட்டுமே எங்களுக்குக் கிடைத்தது. இது தொடர்பாக நாங்கள் நடத்திய ஆய்வில் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டப்பேரவைத் தொகுதியில் மிகப் பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

ராகுல் தலைமையில் இன்று (8.8.2025) ஆர்ப்பாட்டம்
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு களைக் கண்டித்து ராகுல் காந்தி தலை மையில் பெங்களூருவில் இன்று (8.8.2025) காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தில் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்பட்டதாகவும், தற்போது
எஸ்.அய்.ஆர் (SIR) என்ற பெயரில், பா.ஜ.க.விற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் ராகுல் விமர்சித்து வருகிறார்.

இது தொடர்பாக காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் சரியாக 1,00,250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 11,965 வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகி உள்ளன. 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலியானவை. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாகப் பதிவு செய்துள்ளனர். அதோடு, 4,132 வாக்காளர்களுக்குப் பொருத்தமில்லாத நிழற்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவம் 6அய் 33,692 பேர் தவறாகப் பயன்படுத்தி உள்ளனர். இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் சேர்வோரின் வயது வரம்பு, பெரும்பாலும் 18–25 வயதுக்குள் இருக்கும்.  ஆனால், புதிய வாக்காளர்களாக படிவம் 6 அய்ப் பயன்படுத்திச் சேர்ந்தவர்களில் 18–25 வயதிற்குள் எவருமே இல்லை. 98, 97, 85, 75 வயதுகளில் பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். படிவம் 6அய் பயன்படுத்தி 70 வயது மூதாட்டியின் பெயர் ஒரே வாக்குச்சாவடியில் 2 முறை சேர்க்கப்பட்டுள்ளது. அந்த 2 ஓட்டும் பதிவாகியுள்ளது.

ஒரே மூதாட்டி ஒரு வாக்குச்சாவடியில் எப்படி 2 வாக்கு போட்டார் என்பதை தேர்தல் ஆணையம்தான் விளக்க வேண்டும்.

ஒற்றை படுக்கை அறை கொண்ட முகவரியில்
46 வாக்காளர்கள் பதிவு

திட்டமிட்ட ரீதியில் தேர்தல் முடிவுகளைச் சீர்குலைக்கும் முயற்சி இது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல பதிவுகளில் வீட்டு எண் 0 (சுழியம்) என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றைப் படுக்கை அறை கொண்ட முகவரியில் 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரே ஓர் அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் உள்ளனர். அந்த இடத்தைப் பார்வையிட்டபோது அங்கு யாரும் வசிக்கவில்லை என்பது தெரிந்தது. ஒரு வாக்காளருக்கு ஒரே தொகுதியில் 4 வாக்குச்சாவடியில் வாக்கு உள்ளது. கருநாடகாவில் ஒரே நபர் பல பூத்களில் வாக்குகளைச் செலுத்தியுள்ளார். இப்படி பலர் வாக்குகளைச் செலுத்தி உள்ளனர். இது தவிர ஒருவருக்கு மகாராட்டிரா, உத்தரப்பிரதேசத்தில் தலா ஒரு ஓட்டும், பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் 2 ஓட்டும் உள்ளது.

இது ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வு மட்டுமே. இந்த ஆய்வை நாங்கள் செய்து முடிப்பதற்கு எங்களுக்கு 6 மாதங்கள் ஆகி உள்ளது. தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணு தரவை வழங்குவதில்லை. ஏனென்றால் நாங்கள் வாக்காளர் பட்டியலைப் கவனமாக ஆய்வு செய்வதை தேர்தல் ஆணை யம் விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணுத் தரவுகளை வழங்கினால் அதை ஆய்வு செய்ய எங்களுக்கு 30 வினாடிகள் போதும். நான் மீண்டும் சொல்கிறேன், அதனால்தான் எங்களுக்கு இதுபோன்ற காகிதத் தரவு வழங்கப்படுகிறது. அதனால் வாக்காளர் பட்டியலைப் பகுப்பாய்வு செய்ய முடியவில்லை. இந்த ஆவணங்கள் ஓசிஆர் ஆப்  (OCR App) பயன்படுத்தி ஸ்கேன் செய்தால், அவற்றிலிருந்து தரவைப் பெற முடியாது. தேர்தல் ஆணையம் ஏன் இந்த காகிதத் துண்டுகளைப் பாதுகாக்கிறது? தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே இயந்திரம் படிக்க முடியாத ஆவணங்களை வழங்குகிறது.

ஜனநாயக நிறுவனங்களைத்
தவறாகப் பயன்படுத்துவதா?

இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டி யலை வழங்காததும், சட்டத்தை மாற்றுவதன் மூலம் சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட அனுமதிக்காததும், தேர்தல்களைத் திருட பாஜவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்துள்ளது என்பதை எங்களுக்கு உணர்த்தியது. நாடு முழுவதும் வாக்குத் திருட்டு நடந்ததற்கான ஆதாரங்களை அழிக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது. தேர்தல் செயல்முறையைச் சீர்குலைக்க ஜனநாயக நிறுவனங்கள் தவ றாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது அரசியலமைப்பிற்கு எதிரான குற்றம். ஏனெனில் கடந்த 10-15 ஆண்டுகளாக இயந்திரம் படிக்கக்கூடிய தரவுகளையும், கடந்த தேர்தலின் சிசிடிவி காட்சிகளையும் தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கவில்லை என்றால், அவர்கள் குற்றத்தில் பங்கேற்கிறார்கள் என்று அர்த்தம். நாம் மிகவும் விரும்பும் ஜனநாயகத்தின் தேர்தல் நடைமுறைகளில் குழப்பமும், வாக்குத் திருட்டும் நடந்திருப்பதால், நீதித்துறை இதில் தலையிட வேண்டும்.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையத்திற்கு நினைவூட்ட விரும்பு கிறேன். பிரதமர் மோடி மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் பிரதமராக உள்ளார். அவர் ஆட்சியில் நீடிக்க 25 இடங்களை மட்டுமே திருட வேண்டியிருந்தது. மக்களவைத் தேர்தலில் பாஜ 33,000–க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று 25 இடங்களை வென்றது. நமது அரசியலமைப்பின் அடித்தளம் ஒருவருக்கு ஒரு வாக்கு கிடைக்கிறது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது. நாம் கருத்துக் கணிப்புகளைப் பார்க்கும்போது, ஒரு நபர், ஒரு வாக்கு என்ற கருத்தை எவ்வாறு பெறுவது என்பதுதான் அடிப்படை விஷயம். சரியான நபர்கள் வாக்களிக்க அனு மதிக்கப்படுகிறார்களா? போலி நபர்கள் சேர்க்கப்படுகிறார்களா? வாக்காளர் பட்டியல் உண்மையா இல்லையா? என்று சில காலமாக பொதுமக்களிடையே சந்தேகம் உள்ளது.

ஜனநாயகக் கட்டமைப்பில் ஆட்சிக்கு எதிரான அலையால் பாதிக்கப்படாத ஒரே கட்சி
பா.ஜ.க. மட்டுமே

ஒவ்வொரு கட்சியையும் ஆட்சிக்கு எதிரான அலை தாக்குகிறது; ஆனால், ஜனநாயக கட்டமைப்பில் ஆட்சிக்கு எதிரான அலையால் பாதிக்கப்படாத ஒரே கட்சி பாஜ மட்டுமே. இதனால் தான் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெருமளவில் தவறாகப் போகின்றன. அதே போல் ஒவ்வொரு அரசியல் கட்சிகளையும் நடத்தும் உள் கருத்துக் கணிப்புகளும் பொய்த்துப்போய் விடுகின்றன. இதே போன்ற தேர்தல் திருட்டு குற்றம் நாடு முழுவதும், மாநிலத்திற்கு மாநிலம் என மிகப்பெரிய அளவில் செய்யப்படுகிறது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்தார்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முதன்மைத் தலைவருமான ராகுல் காந்தி ஆதாரங்களுடன் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள், இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பிற எதிர்க்கட்சிகளும் கையில் எடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்மீது ஏற்கெனவே பெருத்த சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வாக்காளர் பட்டியலிலேயே இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருப்பதை முக்கிய எதிர்க்கட்சியே ஆதாரங்களுடன் எழுப்பி யிருப்பது உலக அரங்கிலும் கவனத்தைக் குவித்துள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *