சிவகங்கை, ஆக.7- சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 5.8.2025 அன்று காலை 11 மணிக்கு மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி இல்லத்தில் அவரது தலைமையில் காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் முன்னிலையில் நடைபெற்றது.
ஆசிரியர் அவர்களின் இலட்சியத் திட்டமான பெரியார் உலகத்தின் சிறப்புகளையும் அறிக்கையும் வாசித்து மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.
அடுத்து உரையாற்றிய மாவட்ட ப.க.தலைவர் திருபுவனம் சு.இராசாங்கம் எனது சார்பில் ஒரு இலட்சம் வழங்குகிறேன் என தெரிவித்தார்.
அடுத்து பேசிய மாவட்ட ப.க.செயலாளர் சு.செல்லமுத்து ரூ.10 ஆயிரம் தருவதாகவும், மற்றவர்களிடம் நன்கொடை திரட்டி ஒரு இலட்சம் தருகிறேன் என உறுதிகூறினார்.
கழக காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், வேம்பத்தூர் பெரியார் பெருந்தொண்டர் க.வீ.செயராமன்ஆகியோர் பெருந்தகையாளர்களிடம் பெரியார் உலகத்திற்கு நன்கொடையை திரட்டி தமிழர் தலைவரிடம்அளிப்போம் என உறுதி கூறினார்கள். நிறைவாக உரையாற்றிய மாவட்டத்தலைவர் இரா.புகழேந்தி ரூ.10 இலட்சம் பெரியார் உலகத்திற்கு வழங்குவோம் என அறிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் மீனாட்சி துரைசிங்கம், மகளிர் பாசறை பொறுப்பாளர் புஷ்பவள்ளி, இளையான்குடி ஒன்றிய தலைவர் ம.சுந்தர்ராசன், ஒன்றிய செயலாளர் வ.பழனி வட்டன், சோ.காந்தி, எம்.கார்த்தி, ம.கார்த்தி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
கலந்துரையாடல் கூட்டம் முடிந்தவுடன் எல்லோரும் சேர்ந்து மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரி வாயிலில் மாணவர்கள், பேராசிரியர்களிடம் துண்டறிக்கைகளை வழங்கினர்.
தீர்மானங்கள்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கோரிக்கையை ஏற்று மருத்துவமனைகளில் நோயாளிகள் பிரிவு என்பதை மாற்றி ‘மருத்துவப் பயனாளிகள்’ என்று பெயர் மாற்றம் செய்த சமூகநீதி காத்த சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
பெரியார் உலகமயம்-உலகம் பெரியார் மயம் அடைந்திடும் இலட்சிய திட்டத்திற்கு தமிழர் தலைவர் அவர்கள் அறிக்கையினை ஏற்று ரூ.10 இலட்சம் நன்கொடை திரட்டி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
மதுரையில் நடைபெறும் பெரியார் சமூக காப்பு அணி பயிற்சிக்கு அய்ந்து இளைஞர்களை பங்கேற்கச் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
தலைமைக் கழக அறிவிப்பினை ஏற்று 22.8.2025 அன்று திருப்புவனத்தில் கழக சொற்பொழிவாளர்கள் இராம.அன்பழகன், தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் சிறப்புரையாற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க கூட்டத்தை சிறப்பாக நடத்துவதென முடிவுசெய்யப்பட்டது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு சந்தாக்கள் சேர்த்தளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
அக்டோபர் 4இல் மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
சாலை கிராமத்தில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையத்திற்கு அறிவாசான் தந்தை பெரியார் பெயரை சூட்டுமாறு இம்மாவட்ட கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
சிவகங்கை நகரில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.