புதுடில்லி, ஆக.5 தமிழ்நாடு, உத்தர பிரதேசம்,மகாராஷ்டிரா, காஷ்மீர், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுலாத் துறையை மீட்க த் தேவையான நிதி உதவியும் சிறப்பு திட்டங்களையும் ஒன்றிய அரசு அளித்துள்ளதா? கோவிட் 19 தாக்குதலில் இருந்து விடுபட சுற்றுலா வுக்கு என்னென்ன நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன? என்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக குழுத்தலைவரும் திருப்பெரும்புதூர் தொகுதி மக்களால் உறுப்பினருமான டி.ஆர்.பாலு வினா எழுபபினார்.
அதற்குப் பதில் அளித்து சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் எழுத்து பூர்வ மாக தெரிவித்த பதிலில் கூறியதாவது:
“சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான அடிப்படைப் பொறுப்பு மாநில அரசுகள் வசம் இருந்த போதிலும் ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்கள் வாயிலாக நிதி உதவி வழங்கி வருகிறது. “சுதேச தரிசனம் ” மற்றும் “சிறப்பு முதலீட்டு உதவி” போன்றவை இத்திட்டங்களில் அடங்கும்.
பத்தாண்டுகளில்
தமிழ்நாட்டுக்கு ரூ.354 கோடி நிதி
2014-2015 முதல் அனைத்து மாநிலங் களிலும் கடற்கரை சர்க்யூட், தலைசிறந்த சுற்றுலா தலங்கள் மேம்பாடு, போன்ற திட்டக் கூறுகளுக்காக ஒன்றிய அரசு மொத்தம் ரூ 13070 கோடி நிதி உதவி அளித்துள்ளது . இதில் மாமல்லபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட புகழ்பெற்ற நகர்களில் சுற்றுலாவை வளர்க்கவும், சுற்றுலாப்பயணிகள் வசதிகளை மேம்படுத்த மொத்தம் 333 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப் பட்டுள்ளது. 2016-2017 நிதி ஆண்டில் ரூ 73.13 கோடி ரூபாய் கோஸ்டல் சுற்றுலா சர்க்கியூட் வளர்ச்சி திட்டத்துக்காக இந்த தொகை ஒதுக்கீடு செய்யப் பட்டது. அதன் பின் (ஆறு ஆண்டுகள் கழித்து) 2023-2024, 2024-2025 ஆம் ஆண்டுகளில் மீண்டும் நிதி உதவி ஒன்றிய அரசால் வழங்கப் பட்டது.
மேலும் மாமல்லபுரம், மதுரை உள் ளிட்ட நகர்களில் சுற்றுலா விழாக்கள், அருங்காட்சி போன்ற நிகழ்ச்சிகளுக்கு 1.55 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
கோவிட் பாதிப்பிலிருந்து மீள நிவாரணம்
கோவிட் பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு ஆளான சுற்றுலா துறைக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் இந்தியா வந்த முதல் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டண விலக்கு தரப்பட்டது. மேலும் 171 நாடுகளுக்கு சுற்றுலா விசா அளிப்பது மீண்டும் கொண்டு வரப்பட்டது.
சுற்றுலாத் தொழில் துறை பணியாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி செலுத்துவதில் விலக்கு பல்வேறு சலுகைகளுடன் முகவர்கள், நிறுனங்களுக்கு ரூ.பத்து லட்சம் வரை கடன் உறுதி உள்ளிட்ட சலுகைகள் ஒன்றிய அரசால் அளிக்கப்பட்டது.”
இவ்வாறு தனது பதிலில் ஒன்றிய சுற்றுலா அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு சுற்லுலா நிதி
2.7 விழுக்காடு மட்டுமே
இந்தியாவிலேயே தமிழ்நாடு சுற்றுலா பயணிகள் வருகையைப் பொறுத்த வரை முதலாம் இடத்தில் இருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறை வளர்ச்ச்சிக்கு சென்ற பத்து ஆண்டுக் காலத்தில் அளித்த நிதி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஒட்டு மொத்த ஒதுக்கீட்டில் வெறும் 2.7 சதவீதம் மட்டுமே என்பதும், 2016-17 க்குப் பின் ஆறு ஆண்டுகள் எந்த நிதி உதவியும் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது