மொழித் தீயில் கை வைத்து வம்பை விலைக்கு வாங்கும் ஒன்றிய பிஜேபி அரசு! வங்கமொழியை ‘‘பங்களாதேஷ் மொழி’’ என்று டில்லி காவல் துறை குறிப்பிட்டதற்கு மம்தா கண்டனம்!

3 Min Read

தமிழ்நாடு முதலமைச்சரும் கண்டனம்!!

இந்தியா

கொல்கத்தா, ஆக. 4 இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் டில்லி காவல்துறை, வங்கமொழியை “பங்களாதேஷ் மொழி”  (முஸ்லிம் மக்கள் மொழி)  என்று குறிப்பிட்டுள்ளதற்கு, நாடு முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த செயல் “அவமானகரமானது, இழிவு படுத்துவது, தேச விரோதமானது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதி ரானது” என்று விமர்சிக்கப் பட்டுள்ளது.

இந்தியா

வங்கமொழி என்பது வெறும் ஒரு மொழி மட்டுமல்ல. அது ரவீந்திரநாத் தாகூர் போன்ற ஆளுமைகளின் மொழி. நமது நாட்டின் தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூரால் வங்கமொழியிலேயே  இயற்றப்பட்டது.  கோடிக்கணக்கான இந்தியர்கள் பேசும்,  எழுதும் மொழி இது. இந்திய அரசியலமைப்புச் சட் டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பெருமைப் படுத்தப்பட்ட ஒரு மொழி இவ்வாறு இழிவுபடுத்தப்பட்டுள்ளது.

வங்கமொழி பேசும் அனைவரையும் இழிவுபடுத்துவதா?

இந்தச் செயல், இந்தியாவில் வங்க மொழி பேசும் அனைத்து மக்களையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. இந்தியக் குடிமக்களை இழிவுபடுத்த  டில்லி காவல்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.

வங்கமொழி பேசும் இந்திய மக்களை அவமதித்து இழிவுபடுத்தும் இந்திய அரசுக்கு எதிராக அனைவரும் உடனடியாக வலுவான கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், இந்திய ஒற்றுமையையும், பன்முகத்தன்மையையும் கேள்விக்குறி யாக்கும் செயல் என்று அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

மேற்கு வங்க முதலமைச்சர்
மம்தா கண்டனம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா இதற்குத் தனது கடுங் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அவர் நேரடியாகக் களமிறங்கியிருப்பது, இது மேலும் அரசியல் முக்கியத்துவம் பெறும் என்பதைக் காட்டுகிறது. அவர் தனது மாநிலத்தின் மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் கண்டனம்

டில்லி காவல்துறை, வங்கமொழியை “பங்களாதேஷ் மொழி” என்று குறிப்பிட்டதை, இந்திய தேசிய கீதம் இயற்றப்பட்ட மொழிக்கு நேரடி அவமதிப்பு என்று தமிழ்நாடு முதலமைச் சர் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்த விவகாரம், இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டில்லி காவல்துறை, வங்கமொழியை ‘பங்களாதேஷ் மொழி’ என்று குறிப்பிட்டுள்ளது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கு நேரடி அவமதிப்பு! இத்தகைய அறிக்கைகள் தற்செயலான தவறுகள் அல்லது பிழைகள் அல்ல. அவை பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தி, அடை யாளத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை வெளிப்படுத்துகின்றது. ஹிந்தி அல்லாத மொழிகள் மீதான இந்தத் தாக்குதலுக்கு மத்தியில், மாண்புமிகு மம்தா  மேற்கு வங்கத்தின் மொழிக்கும் மக்களுக்கும் ஒரு கேடயமாக நிற்கிறார். இந்தத் தாக்குதலைப் பொருத்தமான பதிலடி இல்லாமல் அவர் விடமாட்டார்” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

அரசியலமைப்புச்
சட்டத்துக்கு எதிரானது

இந்திய அரசியலமைப்புச் சட்டத் தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் வங்கமொழியும் ஒன்றாகும்.  ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை, மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை மதிக்காத ஒரு போக்கைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, ஹிந்தி அல்லாத மொழிகளைப் பேசும் மாநிலங்களான, தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்குவங்கம், ஆசாம், மகாராட்டிரா, குஜராத் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *