வீட்டுப் பணிப்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெங்களூரு, ஆக. 3- மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா (33), தனது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று (2.8.2025) தீர்ப்பளித்தது. அவருக்கு ரூ. 10 லட்சம் அபராதமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 7 லட்சம் இழப்பீடும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு பின்னணி

பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2024 மார்ச் மாதம் புகார்கள் எழுந்தன. அவருடன் பல பெண்கள் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்சிப் பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.

இந்த நிலையில், அவரது வீட்டுப் பணிப்பெண், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கிராம பஞ்சாயத்து பெண் தலைவர் உள்ளிட்ட 5 பெண்கள் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை புகார்களை அளித்தனர்.

அதன் பேரில், அவர் மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இன்டர்போல் அமைப்பின் ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், 2024 மே 31 அன்று பெங்களூரு திரும்பிய பிரஜ்வல், விமான நிலையத்தில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIT) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகை

பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு காவல் துறையினர் இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்தனர். மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், 113 சாட்சிகளுடன் 1,632 பக்க குற்றப்பத்திரிகையை கடந்த செப்டம்பரில் தாக்கல் செய்தனர்.

ஆதாரங்கள்

பிரஜ்வல் தனது வீட்டுப் பணிப் பெண்ணை 2021ஆம் ஆண்டு ஹொளே நரசிபுராவில் உள்ள பண்ணை வீட்டில் இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான காட்சிப் பதிவை காவல் துறையினர் நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரமாக தாக்கல் செய்தனர். தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டதாக பிரஜ்வல் மறுப்பு தெரிவித்தாலும், அரசு தரப்பு சமர்ப்பித்த ஆதாரங்கள் அவரை சிக்க வைத்தன.

காட்சிப் பதிவில் இடம்பெற்றுள்ள பிரஜ்வலின் அங்க அடையாளங்கள், இடது கை மச்சம், அலைபேசி பதிவு, பண்ணை வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணிப்பெண்ணின் உடைகள், அங்கிருந்த ஊழியர்கள், பிரஜ்வலின் நண்பர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் உள்ளிட்டவை அரசுத் தரப்பில் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

தீர்ப்பு

வழக்கின் அனைத்து கட்ட விசாரணைகளும் கடந்த ஜூலை 20 அன்று நிறைவடைந்த நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் தீர்ப்பை ஒத்திவைத்தார். கடந்த ஆகஸ்ட் 1 அன்று, இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

நேற்று (ஆகஸ்ட் 2) தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி, “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அரசுத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம், இதர சாட்சியங்கள், தொழில்நுட்ப ஆவணங்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளன,” என்று தெரிவித்தார்.

பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப் பட்டது. இந்தத் தீர்ப்பைக் கேட்ட பிரஜ்வல் மற்றும் அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக பிரஜ்வல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்ஏ மாதிரி உறுதிப்படுத்தியது

இதுகுறித்து அரசு வழக்குரைஞர் அசோக் நாயக் கூறுகையில், “பாதிக்கப் பட்ட வீட்டுப் பணிப்பெண்ணின் வாக்கு மூலம்தான் தற்போது நீதியை பெற்றுத் தந்துள்ளது. அவர் வன்கொடுமைக்கு ஆளானபோது, அவரது உடையில் படிந்த டிஎன்ஏ மாதிரிகள், பிரஜ்வலை தப்பிக்க முடியாமல் தடுத்து, தற்போது தண்டனை பெற்றுத் தந்துள்ளது. எந்த காட்சிப் பதிவிலும் பிரஜ்வலின் முகம் தெரியவில்லை என்றாலும் குரல் பதிவாகி இருந்தது. அவரது அந்தரங்க அடையாளங்களை உறுதி செய்ய, இங்கிலாந்து, துருக்கி, ஜப்பான் போன்ற நாடுகளில் நடந்த வழக்குகளில் பின்பற்றப்பட்ட ஆய்வு முறை பின்பற்றப் பட்டது. அதன் காரணமாகவே பிரஜ்வல் தான் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது” என்று தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில், ஆதாரங்களின் முக்கியத்துவத்தையும், தொழில்நுட்ப ஆய்வுகளின் பங்களிப்பையும் இது எடுத்துக்காட்டுகிறது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *