புதுடில்லி, ஆக. 3- பீகார்-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தின. இதில் தேர்தல் ஆணையம் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிடப் பட்டதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் முழக்கம்
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதை கைவிடக் கோரியும், அது குறித்து விவாதிக்கவும் வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் நாள்தோறும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவைகளும் முடங்கி வருகின்றன.
மேலும் நாடாளுமன்ற வளாகத் திலும் நாள்தோறும் போராட்டம் நடந்து வருகின்றன.
கார்கே, ராகுல் பங்கேற்பு
இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை நடத்தின.
இதில் மாநிலங்ளவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார் ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை தலைவர் டெரிக்ஓ பிரையன், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, சமாஜ்வாடி தலைவர் ராம்கோபால் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சுப்ரியா சுலே (தேசிய வாத காங்கிரஸ்), ராஜா ராம்சிங் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு), ஜான் பிரிட்டாஸ் (மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்டு), சந்தோஷ் குமார் (இந்திய கம்யூனிஸ்டு) உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
போராட்டத்தை தொடர முடிவு
இந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் தங்களுக்கு மிகவும் முக்கியம் எனவும், இது குறித்து விவாதம் நடத்த வலியுறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
எனவே இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டது.
குறிப்பாக இந்த நடவடிக்கை மூலம் வாக்குகளை திருட பா.ஜனதா திட்டமிட்டு இருப்பதாக நாட்டு மக்களிடம் பிரசாரம் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தேர்தல் ஆணையம் அலுவலகம் நோக்கி அடுத்த வாரம் பேரணி ஒன்றை நடத்தவும் திட்டமிடப்பட்டது.