அகமதாபாத், ஆக.3- குஜராத் மாநிலம் கச்ச் மாவட்டத்தில் உள்ள ரோகடியா ஹனுமான் ஜீ கோயிலில் 31.7.2025 அன்று மாலை பயங்கர விபத்து ஒன்று நடைபெற்றது. தரிசனம் செய்துவிட்டு கோயில் வெளியே நின்று கொண்டிருந்த 55 வயதான உமேத்பாய் ஜாலேந்திர்பாய் ஜாலா என்பவர் மீது, வேகமாக வந்த கிரேன் ஒன்று மோதி சென்றது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்துச் சம்பவம் கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிகழ்வுக்குப் பிறகு, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், பெரும் வாகனங்களின் கட்டுப்பாடற்ற இயக்கத்தை எதிர்த்து சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறுகிய நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய கிரேன் டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடிக் கம்பம் வழக்கு
உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்
இந்திய கம்யூனிஸ்ட் இடையீட்டு மனு தாக்கல்
இந்திய கம்யூனிஸ்ட் இடையீட்டு மனு தாக்கல்
மதுரை, ஆக.3- பொது இடங்களில் உள்ள கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் சேர விரும்பும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆக. 5-க்குள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தவெக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதுரை அமர்வில் நேற்று முன்தினம் (1.8.2025) இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், “எங்கள் கட்சியினர், சமூகத்தில் பின்தங்கியவர்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன.
கொடிக்கம்பங்கள் அமைப்பது கட்சிகளுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். இந்த உரிமையையாராலும் தடுக்க முடியாது. கட்சியின் கொள்கையை பரப்புவதில் கொடிக் கம்பங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. எனவே, பொதுமக்கள் அறியும் வகையில் ஆங்காங்கே கொடிக்கம்பங்களை நிறுவுவது அவசியமானது. இந்த வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.