தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் கைப்பாவை ஆகிவிட்டது

புதுடில்லி, ஆக.3 ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மை யினரின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் பறிக்க நினைக்கிறது என மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார்.

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. 2003-ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் கைப்பாவை ஆகிவிட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டில்லியில் நடைபெற்ற ‘அரசியலமைப்பு சவால்கள் – கண்ணோட்டங்கள் மற்றும் பாதைகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஒருநாள் மாநாட்டில் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாவது;-

வெறும் சட்ட ஆவணம் மட்டுமல்ல…

“இந்திய அரசியலமைப்பு என்பது வெறும் சட்ட ஆவணம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் ஆன்மா. அது ஒவ்வொரு இந்தியருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான உரிமையை வழங்குகிறது. ஆனால் இன்று, அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது. அதிகாரத்தில் இருக்கும் தலைவர்கள் அரசியலமைப்பை மாற்றுவது பற்றி பேசுகிறார்கள். 2024 தேர்தலில் பா.ஜ.க. 400 இடங்களை வென்றிருந்தால், அவர்கள் அரசியலமைப்பை மாற்றியிருப்பார்கள்.  ராகுல் காந்தி அரசியலமைப்பை காப்பாற்றும் பிரச்சாரத்தை நடத்தினார்.

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியின் கீழ், சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழந்துள்ளனர். பா.ஜ.க. ஆட்சியால் அதிருப்தியில் இருக்கும் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் பறிக்க நினைக்கிறது. தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டது.

நசுக்கவே பாடுபடுகிறார் மோடி

பிரதமர் மோடி எப்போதும் சமூகத்தைப் பிரிப்பது பற்றிப் பேசுகிறார். நாட்டு மக்கள் அரசியலமைப்பை பாது காப்பதற்காக அவரை தேர்ந்தெடுத்தனர். ஆனால் அவர் அதை நசுக்கவே பாடுபடுகிறார். அரசியலமைப்புக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அதற்கு காரணம் பிரதமரும், பா.ஜ.க.வும்தான்.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்தாலும் தனது அலுவலக அறையில் அமர்ந்து கொள்கிறார். அங்கு இருந்தபடி தொலைக்காட்சியில் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்க்கிறார். அவைக்கு நேரில் வருவதற்கு அவர் எதற்காக பயப்படுகிறார் என்று எனக்கு புரியவில்லை.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்க மேனாள் குடியரசு துணைத் தலைவர்  ஜெகதீப் தன்கரை பா.ஜ.க. அரசு பயன்படுத்தியது. ஆனால் அவர் சுதந்திரமாக செயல்படத் தொடங்கியபோது என்று அவருக்கு அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்குவதற்கான எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை அனுமதித்ததற்காக ஜெகதீப் தன்கருக்கு அச்சுறுத்தலும், அழுத்தமும் கொடுக்கப்பட்டது.

அரசியலமைப்பை பாதுகாப்போம்

இந்தியாவின் உயிர்ப்பு அரசியல மைப்பில் அடங்கியுள்ளது. அது நாட்டின் குடிக்களுக்கு பலமாகவும், முன்னேறிச் செல்வதற்கும், கண்ணியத்துடன் வாழ்வதற்குமான உரிமையையும் வழங்குகிறது. எந்த விலை கொடுத்தாவது அரசியலமைப்பைப் பாதுகாப்போம்.

ஒரு நீதிபதி ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் செயல்முறையில் இருந்து இந்திய தலைமை நீதிபதி நீக்கப்பட்டார். இத்தகைய சூழ்நிலையில், இது ஜனநாயகம் அல்ல, சர்வாதிகாரம் என்றே கூற முடியும்.”இவ்வாறு மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *