நாராயண்பூர், ஆக. 2 சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் மூன்று இளம்பெண்களை கேரள கன்னி யாஸ்திரிகள் கட்டாய மதமாற்றம் செய்ததாகப் பஜ்ரங் தள் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள், பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் மற்றும் சுக்மான் மண்டாவி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றம் மற்றும் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட கமலேஷ்வரி பிரதான் என்ற இளம்பெண், தான் பஜ்ரங் தள்ளினை வற்புறுத்தல் காரண மாகவே பொய்யான வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
நான் கடத்தப்படவில்லை
நாராயண்பூர் மாவட்டம் அபுஜ்மத் பகுதியில் குக்ராஜோர் கிராமத்தைச் சேர்ந்த கமலேஷ்வரி பிரதான், நேற்று (ஜூலை 31, 2025) அளித்த பேட்டியில், “நான் யாராலும் கடத்தப்படவில்லை. என் சொந்த விருப்பத்தின்படியும், பெற்றோரின் ஒப்புதலையும் பெற்று கேரள கன்னியாஸ்திரிகளுடன் ஆக்ராவுக்குச் சென்று கொண்டி ருந்தேன். அங்கிருந்து போபால் செல்ல இருந்தோம். போபாலில் ஒரு கிறிஸ்தவ மருத்துவமனையில் ரூ.10,000 ஊதியம் உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் வேலை வழங்கப்படும் என்பதற்காக நான் அங்கே சென்று கொண்டிருந்தேன். எங்களை யாரும் மதமாற்றவும் செய்யவில்லை. எங்கள் குடும்பம் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருகிறது” என்று கூறியுள்ளார்.
பஜ்ரங் தள்ளின் அச்சுறுத்தல்
அவர் தொடர்ந்து பேசுகையில், “நாங்கள் துர்க் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்தபோது, பஜ்ரங் தள்ளைச் சேர்ந்தவர்கள் சிலர் எங்களிடம் வந்து, மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசினர். பின்னர் அங்கு வந்த ரயில்வே காவல்துறையினர் எங்களை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு வந்த வலதுசாரி ஆதரவாளரான ஜோதி சர்மா என்ற பெண், கேரள கன்னியாஸ்திரிகள் எங்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய கடத்திச் செல்வதாகப் பொய்யாக வாக்குமூலம் தர வேண்டும் என்று நிர்பந்தித்தாள். அவர்கள் சொன்னதை செய்யாவிட்டால் என் சகோதரனை சிறையில் தள்ளி அடிப்பார்கள் எனப் பயந்து, கேரள கன்னியாஸ்திரிகள் மீது பொய்யாக வாக்குமூலம் தந்தோம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிகள் அனைவரும் நிரபராதிகள். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மதவாதப் போக்கின் விளைவே
கமலேஷ்வரி பிரதானின் இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் இந்த தாக்குதல், ஒன்றிய பாஜக அரசின் மதவாதப் போக்கின் விளைவே என்று பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் உண்மை வெளிவருமா என்பதும், கன்னியாஸ்திரிகள் விடுதலை செய்யப்படுவார்களா என்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.