டிரம்பின் அதிரடிகள் தொடர்கின்றன 68 நாடுகள் மீதான புதிய வரிகள் 7ஆம் தேதி முதல் அமல்

வாஷிங்டன், ஆக. 2- புதிய வரிவிதிப்பை டிரம்ப் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கான நிர்வாக ஆணையில் அவர் கையெழுத்திட்டார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, அமெரிக்கா மீது பிற நாடுகள் விதிக்கும் வரியை போலவே, அதே அளவுக்கு வரி விதிக்கப்போவதாக அறிவித்தார்.

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரிவிதிப்பை அறிவித்தார். பின்னர், வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள கால அவகாசம் அளிக்கும் வகையில், வரிவிதிப்பை 90 நாட்கள் ஒத்திவைத்தார். கடந்த ஜூலை 9ஆம் தேதி அமலுக்கு வருவதாக இருந்த வரிவிதிப்பு, ஆகஸ்டு 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், 68 நாடுகள் மற்றும் அய்ரோப்பிய யூனியன் மீது நேற்று புதிய வரிகள் அமலுக்கு வர இருந்தநிலையில், புதிய வரிவிதிப்பை டிரம்ப் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கான நிர்வாக ஆணையில் அவர் கையெழுத்திட்டார்.

அதன்படி, சுவிட்சர்லாந்தில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 39 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 31 சதவீத வரி விதிக்கப் படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத் திருந்தார். லிச்டென்ஸ்டின் மீதான வரி, 37 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மலேசியா

மலேசியா மீதான வரி, 25 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கம்போடியா மீதான வரி, 49 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது தங்களது வரிவிதிப்பு பூஜ்யமாக இருக்கும் என்று கம்போடியா அறிவித்துள்ளது.

ஜப்பான்

ஜப்பான் மீதான வரிவிதிப்பு, 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தைவான் மீதான வரிவிதிப்பு, 32 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து

தாய்லாந்து மீதான வரிவிதிப்பு 36 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாகவும், வங்காளதேசம் மீதான வரிவிதிப்பு 35 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், இலங்கை

மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகள் மீது தலா 40 சதவீத வரியும், பாகிஸ்தான் மீது 19 சதவீத வரியும், இலங்கை மீது 20 சதவீத வரியும், இங்கிலாந்து மீது 10 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெறாத நாடுகள் மீது 10 சதவீத அடிப்படை வரி மட்டும் விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

மெக்சிகோ

மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷென்பாமுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது, வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை முடிக்க மெக்சிகோவுக்கு 90 நாட்கள் கால அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட 90 நாட்களில், மெக்சிகோ பொருட்கள் மீதான வரி, 25 சதவீதமாக இருக்கும்.

கனடா

இதற்கிடையே, அண்டை நாடான கனடாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிவிதிப்பை 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தும் அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. வரிஉயர்வு, நேற்று அமலுக்கு வந்தது.

ஆகஸ்டு 1ஆம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், வரிவிதிப்பு 35 சதவீதமாக உயர்த்தப்படும் என்று டிரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். பாலஸ்தீனத்தை அங்கீகரிப்போம் என்று அறிவித்த கனடாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது கடினம் என்றும் அவர் கூறியிருந்தார். இதன்படி “சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும், அதிகம்பேரை கைது செய்யவும் கனடா தவறி விட்டது” என்று வரி உயர்வுக்கு வெள்ளை மாளிகை காரணம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *