கன்னியாகுமரி, ஆக.2- கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே உள்ள பூவியூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது60). இவர் 41 ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக கோட்டார் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
முன்மாதிரி ஆய்வாளர்
இந்தநிலையில் அவர் 31.7.2025 அன்று ஓய்வு பெற்றார். வழக்கமாக ஒருவர் ஓய்வு பெறும்போது அவருக்கு சக ஊழியர்களும், அதிகாரிகளும் பிரிவு உபசார விழா நடத்தி தங்களது துறை வாகனத்தில் கவுரவமாக வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள்.
அதன்படி பாலகிருஷ்ணனுக்கு 31.7.2025 அன்று கோட்டார் காவல் நிலையத்தில் பிரிவு உபசார விழா நடந்தது. விழா முடிந்தவுடன் பாலகிருஷ்ணன் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோட்டாரில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு ஓடியே சென்றார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘இளைஞர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தாமல், உடற்பயிற்சி மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். தனது ஆரோக்கியத்தையும், பெற்றோரையும் பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓய்வு பெறும் நாளில் கோட்டார் காவல் நிலையத்தில் இருந்து எனது வீட்டுக்கு 17 கிலோ மீட்டர் தூரம் செருப்பு அணியாமல் ஓடியே வந்தேன். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இளைஞர்களிடையே போதைக்கு எதிராக ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வையொட்டி நானும் இந்த முயற்சியில் ஈடுபட்டேன்’ என்றார்.
ஓய்வு பெறும் நாளில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் நிலையத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் ஓடியே வீட்டுக்கு வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.