கேள்வி 1: சமூகநீதியை சவக்குழிக்கு அனுப்பும் முயற்சியில் ஒன்றிய பிஜேபி அரசு ஈடுபட்டுள்ளதை, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து முறியடிக்க முன்வருவார்களா?
– இல.சீதாபதி, மேற்கு தாம்பரம்.
பதில் 1: தமிழ்நாட்டில் வென்று காட்டிய ‘மாடல்’ இப்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. காங்கிரஸ் தன் பழைய தவறுகளை ஒப்புக் கொண்டு, திருத்திக் கொண்டு சமூகநீதிப் பாதையில் நடைபோடும் என்பதை காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களும் துணிச்சலுடன் பதிவு செய்திருக்கிறார். இந்தப் புரிதலும், ஒருங்கிணைவும் ஒன்றிய
பி.ஜே.பி. அரசின் சமூக அநீதிகளுக்கு எதிராகத் தொடர வேண்டும்.
- ••••
கேள்வி 2: தாங்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையிலும்கூட, இனநலனைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருப்பதும், மருத்துவமனைகளில் ‘நோயாளி’ எனும் சொற்றொடர் பயன்படுத்துவதை ‘மருத்துவப் பயனாளி’ என்று விளிக்க ஆவன செய்ய வேண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்ததையும் அறிந்த தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தன்னலமற்றத் தொண்டை கையொலி எழுப்பி வரவேற்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
– சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில் 2: தன் இறுதி மூச்சு அடங்குகிற வரை மனித குலத்தின் நலனையே கருத்தில் கொண்டு சிந்தித்த தலைவர் தந்தை பெரியாரின் தொண்டர்கள் நாம். எதையும் எதிர்பார்த்து நாம் பணியாற்றுவதில்லையே! என் உடல் நலனுக்கு மருத்துவர்களின் அறுவைச் சிகிச்சை – சமூக நலனுக்குப் பெரியாரின் அறிவுச் சிகிச்சை!
- ••••
கேள்வி 3: தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற தி.மு.க. எனும் மாபெரும் கட்சியை அழிக்க வேண்டி, இளம் பார்ப்பனப் பெண் ஒருவர் மிகப் பெரிய யாகத்தை நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்று சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு தனக்குள் இருக்கும் ‘ஆரிய நஞ்சை’ உமிழ்ந்திருப்பது திமுகவுக்கு உரமாக அமையுமா?
– இரா.அலமேலு, செங்குன்றம்.
பதில் 3: யாகம் நடத்தி பெரியாரின் உயிரைப் பறிக்கலாம் என்று நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வைக்கத்தில் முயன்றவர்கள்தானே! அதன் விளைவு என்ன? அதற்குப் பிறகு 50 ஆண்டுகள் இன்னும் தீவிரமாக உழைத்தாரே! இந்த யாகத்தால் பார்ப்பனர்களின் தட்டு நிறையலாம் – ஆசை நிறைவேறாது!
- ••••
கேள்வி 4: சுகன்யான் திட்டத்திற்காக வருகிற டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள ஆள் இல்லாத சோதனை ராக்கெட்டில் ‘வியோமித்ரா பெண் ரோபோ’ பயணம் செய்ய இருப்பது ‘அறிவியல் உலகில் ஒரு மைல்கல்’ என்று மகிழலாம் அல்லவா?
இ.மகிழினி, மரக்காணம்.
பதில் 4: அறிவியல் ஆற்றல் கண்டு நிச்சயம் மகிழலாம். (‘வியோ மித்ரா’ என்று சமஸ்கிருதத்திலேயே பெயரிட்டிருக்கிறார்கள்.) ரோபோவையும் திருப்பதிக்குக் கொண்டு போய் அர்ச்சனை செய்யாமல் இருக்க வேண்டுமே என்று தான் கவலை!
- ••••
கேள்வி 5: வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வுக்கு மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைத்திருப்பதை மக்கள் மன்றம் ஏற்குமா?
– செல்வி பாபு, மதுரை.
பதில் 5: ‘நீதி’யைத் தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருப்போர் இருக்கிறார்களே, அவர்கள் மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதையும் மக்கள் மன்றம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறது! எல்லாவற்றையும் விட வலிமையானது மக்கள் மன்றமே!
- ••••
கேள்வி 6: சென்னையில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளதை மக்கள் வரவேற்கின்ற அதே வேளையில், மற்ற மற்ற நகரங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை விரிவுபடுத்தப்படுமா?
– பா.வேணுகோபால், காஞ்சி
பதில் 6: சென்னையில் கிடைக்கும் பலன்களைப் பார்த்து, தேவைக்கேற்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ••••
கேள்வி 7: திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ‘கியூ.ஆர்.’ கோடு வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுத்து வருவது அறிவியலின் அற்புதம் என்று மகிழ்வதா? அல்லது வறுமையின் கொடுமையை நினைத்து வேதனைப்படுவதா?
– பா.திருமலை, திருப்பத்தூர்.
பதில் 7: இதுதான் ‘டிஜிட்டல் இந்தியா’வின் சாதனையோ?
- ••••
கேள்வி 8: அண்ணா நகர் வேலங்காடு மயான பூமி வளாகத்தில் உள்ள பிரமாண்டமான நுழைவு வாயிலில், தற்போது சிவன் சிலை மற்றும் கடவுளர் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பிறகு அவை, சிவன் கோயிலாக அமைய வாய்ப்பாக அமையும் என்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டு மக்கள் நலன் கருதி சென்னை மாநகராட்சி அதனை அகற்ற முன்வருமா?
– ச.ஆண்டாள், அண்ணா நகர்.
பதில் 8: மக்கள் பயன்பாட்டுக்குரிய பொது இடங்களில் இத்தகைய கோயில்களை அமைக்கக் கூடாது; ஏற்கெனவே இருப்பவற்றைப் புதுப்பிக்கக் கூடாது என்பது அரசு ஆணை. அது முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பூங்காவில் இப்படி ஒரு சிவன் சிலையை வைத்து, தற்போது அதை ‘சிவன் பூங்கா’ என்றே மாற்றிவிட்டார்கள். அத்தகைய நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை சென்னை மாநகராட்சிக்கு வலியுறுத்துகிறோம்.
- ••••
கேள்வி 9: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலான விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியதைத் தொடர்ந்து, அவர் தாமாகவே பதவியை ராஜினாமா செய்ய முன்வருவாரா?
– பா.அக்சயா, புதுடில்லி.
பதில் 9: செய்வதென்றால் எப்போதோ செய்திருக்க வேண்டுமே! பதவி ஆசை மட்டுமல்ல… அதைப் பாதுகாப்பு என்றும் அல்லவா பலர் கருதி, பயன்படுத்திக் கொள்கின்றனர்.
- ••••
கேள்வி 10: 2021- ஆண்டு ஜூலை 29ஆம் தேதி அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி 27 சதவீதம் இடஒதுக்கீட்டை வென்று காட்டிய அந்த சமூகநீதி நன்னாளை, சமூகநீதிக்கான அரசியலை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சமூக வலைதளப்பதிவில் திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டிருப்பதை கடைப்பிடிக்க வேண்டியது அனைவரின் கடமை அல்லவா?
– அ.யாழ்நிலா, காஞ்சிபுரம்.
பதில் 10: சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நம்முடைய முதலமைச்சரின் கூற்றை அப்படியே வழிமொழிகிறோம். சமூகநீதிக்காக நாம் போராடி வென்றுள்ள நாட்கள் ஒவ்வொன்றும் அப்படி நினைவு கூரப்படவேண்டியவையே! வகுப்புரிமை நாள் (ஆகஸ்ட் 14) என்று போராட்ட நாளுக்குத் தந்தை பெரியார் குறித்த நாளைப் போல, முதல் வகுப்புரிமை ஆணை போடப்பட்ட நாள் (செப்டம்பர் 16), ஜாதி ஒழிப்புப் போராட்ட நாள் (நவம்பர் 26) பொருளாதார அளவுகோல் நீக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50% ஆக உயர்ந்த நாள் (ஜூலை 31), மண்டல் பரிந்துரை ஏற்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நாள் (ஆகஸ்ட் 7), 69% தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட்ட நாள், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகி பணி நியமனம் பெற்ற நாள் (ஆகஸ்ட் 14) என நம்முடைய வெற்றி நாள்களும், போராட்ட நாள்களும் நினைவுகூரப்பட வேண்டும்; கொண்டாடப்பட வேண்டும். அது தான் நாம் கடந்து வந்த கரடு முரடான பாதையை நாளைய தலைமுறையினருக்கு நினைவூட்டும்.