மும்பை, ஆக. 1- இந்தியாவுக்கான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதமாக நேற்று முன்தினம் (30.7.2025) இரவு அறிவித்தார். இதனால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று (31.7.2025) பலத்த சரிவுடனே தொடங்கின. அதிகப்பட்சமாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு தொடங்கியது.
தேசிய பங்குச்சந்தை குறியிட்டு எண் ‘நிப்டி’ 150 புள்ளிகள் வரை சரிந்தன. இதனால் இந்திய முத லீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கி 15 நிமிடங்களில் ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
கரோனா ஊரடங்கு அறிவிப்பு, 2017 பணமதிப்பு இழப்பு அறிவிப்பை தொடர்ந்து இத்தகைய சரிவை இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சந்தித்தன. 15 நிமிடங்களுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சி பெற தொடங்கின. இதனால் முதலீட்டாளர்கள் சிறிது நிம்மதி அடைந்தனர். ஆனால் நேற்று முன்தின முடிவுகளுடன் ஒப்பிடும்போது பங்குச்சந்தைகளில் சரிவே மிஞ்சின.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 296 புள்ளிகள், அதாவது 0.36 சதவீதம் 81 ஆயிரத்து 105 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தையான ‘நிப்டி’ 86 புள்ளிகள் (0.35 சதவீதம்) சரிந்து 24 ஆயிரத்து 768 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.