லாகூர், ஆக. 1- பாகிஸ்தானின் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம், மேனாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியைச் சேர்ந்த 166 ஆதரவாளர்களுக்கு, 2023 மே 9 கலவரங்கள் தொடர்பாக 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
வன்முறை
இம்ரான் கான் ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் நடத்திய வன் முறைப் போராட்டங்களில், ஃபைசலா பாத்தில் உள்ள அய்.எஸ்.அய். (ISI) கட்டடம், ஜின்னா ஹவுஸ், மியான்வாலி விமானப்படைத் தளம் உள்ளிட்ட ராணுவ நிறுவனங்கள் தாக்கப்பட்டன.
தண்டனை பெற்றவர்களில் பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஒமர் அயூப், பாகிஸ்தான் செனட் எதிர்க்கட்சித் தலைவர் ஷிப்லி ஃபராஸ், சர்தாஜ் குல், சாஹிப்சடா ஹமித் ரஸா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், ஆறு தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு செனட்டரும் அடங்குவர். இதுவரை கலவரம் தொடர்பாக 14 PTI சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
PTI கட்சி இந்தத் தீர்ப்பை “அரசியல் பழிவாங்கல்” எனக் கண்டித்து, லாகூர் உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. இந்தத் தீர்ப்பு, ஆகஸ்ட் 5 இல் தொடங்கவிருக்கும் ‘இம்ரான் கானை விடுதலை செய்’ இயக்கத்திற்கு முன்பு வெளியாகி யுள்ளது. இம்ரான் கான், 2022 இல் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் உள்ளார்.