கருக்கலைப்புக்கு வரும் சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்துவதா? காவல்துறையினருக்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 Min Read

மும்பை, ஆக.1 கருக்கலைப்புக்காக வரும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் அடையாளத்தை வெளிப்படுத்தும்படி வற்புறுத்திய மும்பை காவல்துறையினருக்கு மும்பை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தும், காவல்துறையினர்  இவ்வாறு செயல்படுவது மருத்துவர்களையும் பாதிக்கப்பட்ட சிறுமிகளையும் துன்புறுத்தும் செயல் என்று நீதிபதிகள் கடிந்துகொண்டனர். சட்டப்படி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்யக் கோரி மருத்துவர்களை அணுகினால், அவர்களது தனிப்பட்ட விவரங்களை காவல்துறையினருக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால், “18 வயதுக்குட்பட்ட சிறுமியர் கருக்கலைப்புக்காக மருத்துவர்களை அணுகினால், பெயர் உள்ளிட்ட அவர்களது தனிப்பட்ட அடையாளத்தை காவல்துறையினரிடம் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை” என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கருக்கலைப்புக்காக தன் பெற்றோருடன் வந்திருந்த சிறுமி பற்றிய தகவல்களை வழங்கும்படி மும்பை காவல்துறையினர் தொல்லை கொடுப்பதாக ஒரு மகப்பேறு மருத்துவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “நன்கு பரிச்சயமான சிறுவனுடன் ஏற்பட்ட பழக்கத்தால் இருவரும் அத்துமீறிப் பழகியுள்ளனர். இதில் சிறுமி எதிர்பாராத விதமாக கர்ப்பமானதால் குடும்பத்தினர் கவலையடைந்தனர். சிறுமியின் உடல்நலம் மற்றும் எதிர்காலம் கருதி, 13 வாரக் கருவைக் கலைக்கக் கோரி, பெற்றோர் என்னை அணுகினர். மேலும் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர். ஆனால், சிறுமியின் தனிப்பட்ட விவரங்களை அளிக்கும்படி காவல்துறையினர் எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ரேவதி மோஹிதே மற்றும் நீலா கோக்லே அமர்வு முன் நேற்று (30.7.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

“உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், மருத்துவர்களுக்கு காவல்துறையினர் தொல்லை கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மருத்துவர்களை மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட சிறுமியையும் துன்புறுத்தவே காவல்துறையினர் இப்படிச் செய்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகலை மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன், காவல்துறையினர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வழக்கின் நகலை மாநில காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பி வைக்கவும்,” என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *