புதுடில்லி, ஆக.1 தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டின்படி 36 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக பீகாரில் இருந்து வேறு மாநி லங்களுக்கு இடம் மாறி உள்ளது கண்டறி யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திராவில் தான் வேலைக்கு வந்து தங்கியுள்ளனர். எனவே, இவர்கள் அனைவரும் தாங்கள் தற்போது வசிக்கும் மாநிலத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம்.
சென்னையில் 3½ லட்சம் பேர்
இந்த அடிப்படையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 6½ லட்சம் பேர் தமிழ்நாட்டில் வேலைக்காக வந்து தங்கி இருக்கிறார்கள். இவர்களது பெயர்கள் பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், இனி அவர்கள் தங்களது பெயரை தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள லாம். இதில் சென்னையில் மட்டும் 3½ லட்சம் பீகார் மாநிலத்தவர் இருப்பார்கள். இது தவிர கோவை, திருப்பூரிலும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
தமிழ்நாட்டிலும் விரைவில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடங்க உள்ளது. அப்போது தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் மாநிலத்தவர்கள், தங்களது பெயர்களை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளிப்பார்கள். இவர்களது மனு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவார்கள். (பீகாரில் கேட்கப்பட்டதுபோல, 11 ஆவணங்கள் இவர்களிடம் கேட்கப்படுமா? என்பது முக்கிய கேள்வி)
நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மற்ற மாநிலங்களிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ளும்போது, தமிழ்நாட்டில் வேலை செய்யும் வெளிமாநிலத்தவர்கள் பெயர்கள் அவர்களது சொந்த மாநிலங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நடந்தால் தமிழ்நாடு வாக்களர் பட்டியலில் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அதே போல் தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் பெயர்கள், தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் 34 லட்சத்து 87 ஆயிரத்து 974 வெளி மாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து தங்கி உள்ளனர். இந்த எண்ணிக்கை இப்போது இரட்டிப்பாகி இருக்கும் என்று நம்பப்படுகிறது. நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிந்து விட்டால், தமிழ்நாட்டில் தற்போது உள்ள வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 70 லட்சம் பேர் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கும் நிலை உருவாகலாம். அந்த எண்ணிக்கை தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகம் ஆகும்.
இவ்வாறு பிற மாநில வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு, தமிழ்நாட்டுத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.