பகுத்தறிவுவாதிகளாக வேண்டும்

நீங்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகளாக ஆக வேண்டும். உலகத்திலேயே அறிவுத் துறையில் நாம் மிகப் பின்னடைந்து இருக்கிறோம். சம்பாதிப்பதில், பிள்ளை பெறுவதில், மூட்டை கட்டுவதில் வேண்டுமானால் நீங்கள் புத்திசாலிகளாக இருக்க லாம். வெள்ளைக்காரன் இன்றைக்குப் பகுத்தறிவுவாதியாக இருக்கிறானே, அதனாலே கடவுள் போய் விடுமென்று யாரும் பயப்பட வேண்டாம். அறிவுப்படி அவசியத்துக்கேற்ப சடங்கு முறையில் அவன் ஒரு கடவுளை வைத்திருக்கிறான். அதுபோல வேண்டுமானால், நீங்களும் வைத்துக் கொள்ளுங்கள். கிறித்தவர், முஸ்லிம்கள் தொழும் கடவுள், நம்பிக்கையை அடிப் படையாகக் கொண்டது. ஒழுக்கம், அருள், கருணை இவைகளை உடையது. அது தனக்கு என்று ஒன்றும் வேண்டாதது என்று அவன் சொல்லுகிறான். ஆனால், நீ என்ன சொல்லுகிறாய்? நெருப்புக் குச்சிகள் மாதிரி, செங்கல் மாதிரி லட்சம், பத்து லட்சக்கணக்கில் ஏராளமாக கடவுள்களை வைத்திருக்கிறாய். ரோடு ஓரத்தில் படுத்திருக்கும் குழவிக் கல்லை நிமிர்த்தி வைத்தால் அதைக் கடவுள் ஆக்கி விடுகிறாய்! மாட்டுச் சாணியை கொழுக்கட்டையாட்டம் பிடித்து வைத்தால் அது உன் கடவுள்! மைல்கல், ஃபர்லாங்கு கல் எல்லாம் கூட கடவுள்கள் ஆக்கப்பட்டிருக்குமே, நாங்கள் இல்லா விட்டால்! முஸ்லிமும், வெள்ளைக்காரனும்  இப்படியா கடவுள் வைத்திருக்கிறான்?

உன் கடவுளுக்கு பெண்டாட்டி, பிள்ளைக்குட்டிகள் திருட்டு, புரட்டு, கொலை, கொள்ளை இத்தனையும் தேவைப்படுகிறதே? உன் கடவுள் என்றால் 1,000 முகமுடையாள், 2,000 கையுடையாள் என்று அளக்கிறான்! நாமும் மடப்பசங்கள் என்பதால் பார்ப்பான் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்ளுகிறோம். ஒவ்வொரு உருவத்திற்கும் ஒவ்வொரு முட்டுக்கல் அடிக் கிறாங்களே, ஒண்ணும் வேண்டாதவர் கடவுள் என்றால் அவருக்கு மனைவி எதற்கு? திருமணம் எதற்கு? பிள்ளைக் குட்டிகள் எதற்கு? ஆறு வேளை பூசை எதற்கு? யாரும் கேட்பதில்லையே? வெள்ளைக்காரன் இப்படியெல்லாம் கட்டிக் கொண்டா அழுகிறான்? நீ என்ன அவனைவிட அறிவாளியா? உன் கடவுளுக்கு ஒழுக்கமிருக்கிறது. 1,000 வைப்பாட்டிகளை வைத்திருந்தது என்று எழுதி வைத்திருக்கிறாயே, அந்தக் கடவுளுக்கு மானம் வேண்டாமா? உன் கடவுள்கள் சாகிறதே, பிறக்கிறதே! இப்படிப்பட்ட தன்மையில் நாம் இருக்கிறோம்.  உனக்கு என்னென்ன வேண்டுமோ, அதெல்லாம் கடவுளுக்கு வேண்டும் என்று சொல்லி விடுகிறாய். அவ்வளவு முட்டாள் களாக இருக்கிறோம்.

கருணாமூர்த்தி உன் கடவுள் என்றால் கொடுவாளும், அரிவாளும், வேலும், வில்லும், ஈட்டியும், சூலாயுதமும், மழுவும், கொழுவும், கொட்டாபுளியும் எதற்கு? இது காட்டுமிராண்டிப் பசங்க சங்கதி என்பதைத் தவிர, வேறு என்ன? கள்ளு, சாராயம், கஞ்சா, அபினி, கொள்ளை, கொலை இவ்வளவும் உன் கடவுளுக்கு தேவை. அப்புறம்  திருட்டுப் பசங்களுக்கும், கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? யோசித்துப் பாருங்கள். நம் புத்தகங்களை, விடுதலை பத்திரிகை முதலியனவற்றை படித் தால்தான் நீங்கள் பகுத்தறிவுவாதிகளாக ஆக முடியும். இந்தப் பார்ப்பானுங்க நடத்துகிற பத்திரிகைகளில் புராண, இதிகாச ஒழுக்கமற்ற ஆபாசக் கதைகளைத் திணித்து விஷமிட்டும், அதை நம்முடைய மனத்தில் புக வைத்து விடுவான். மற்றவர்கள் இக்கருத்துகளைச் சொல்ல மாட்டார்கள். உயிருக்குத் துணிந்து இருக்கிற எங்களால்தான் இது போன்ற காரியங்களைச் செய்திட முடியும்.

(முசிறியில்  தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை – ‘விடுதலை’ 20.9.1964 )

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *