திரிபோலி, ஜூலை.31- லிபியாவில் கடலில் படகு கவிழ்ந்து 25 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். காணா மல் போன 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
புகலிடம் தேடி
வட ஆப்பிரிக்க நாடாக லிபியா உள்ளது. கடாபி ஆட்சியின் கீழ்சர்வாதிகார நாடாக இருந்த லிபியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு கிளர்ச்சி ஏற்பட்டது. அய்ரோப்பிய ராணுவ அமைப்பான நேட்டோ ராணுவத்தினர் உதவியுடன் ஏற்பட்ட அந்த கிளர்ச்சியில் கடாபி கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு கிளர்ச்சியாளர்கள் சார்பில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் மத்திய–ஆப்பிரிக்க நாடுகளாக சாட், சூடான், நைஜர், மாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து லிபியாவில் மக்கள் குடியேறுவது அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அங்கு இருந்து புகலிடம் தேடி அய்ரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்சு, ஜெர்மனி, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்வது தொடர்ந்து வருகிறது.
25 அகதிகள் சாவு
இந்தநிலையில் லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக அய்ரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக நுழைய முயன்றனர். லிபியாவின் கிழக்கு கடலோர நகரமான தோப்ரூக்கில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் பெரும் சீற்றம் உருவானது. இதனால் நடுக்கடலில் அந்த படகு மூழ்கி விபத்திற்குள்ளானது. இதில் துனிசியா, எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக சென்று கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 25 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.