பிரபல ஆடிட்டர்
டி.என். மனோகரன் மறைவுக்கு
தமிழர் தலைவர் இரங்கல்
அய்.சி.ஏ.அய். மேனாள் தலைவரும், பத்மசீறி விருது பெற்றவருமான பிரபல தணிக்கையாளர்
டி.என். மனோகரன் நேற்று (30.7.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
குடியாத்தம் ராஜாகோயில் கிராமத்தில் பிறந்து, நிதி நிர்வாகத் துறையில் திறம்பட பணியாற்றியவர். நம்முடைய நிறுவனங்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை பற்றிய சிறப்புக் கருத்தரங்கங்களில் பங்கேற்று அரிய ஆலோசனைகளை வழங்கியவர். அவர் இந்தியத் தணிக்கையாளர் நிறுவனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது நம்மால் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டவர்.
கனரா வங்கியின் தலைமை நிர்வாகியாகவும் செயல்பட்டவர். நமது கல்வி நிறுவனங்களின் நிதிக் குழுவில் பல ஆண்டுகள் இருந்து வழிகாட்டியதுடன், நமது மாணவர்களுக்கு நிதி நிலை அறிக்கை குறித்த பல்வேறு ஆலோசனைகளையும், கருத்துகளையும் வழங்கியவர். வளர்ந்து வரும் தணிக்கைப் பயிற்சி மாணவர்களுக்கு எப்பொழுதும் வழிகாட்டியாக இருந்து செயல்பட்டவர்.
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் நிதி ஆலோசனைக் குழு உறுப்பினராக திறம்பட வழிகாட்டியவர் (2008 முதல் 2010 வரை) ஆவார்.
அவரது வாழ்விணையர் சுஜாதா, மகள்கள் மாளவிகா, சாஹினி ஆகியோருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
31.7.2025